~
ஏன் அவள் என்கிறார்கள்..
அவளைத் தவிற யாராலும் என் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை நிகழ்த்தி விட முடியாதென்று இல்லை. அவள்தான் அதை முதன்முதலில் கண்டுபிடித்தாள். அவளுக்காக என்று எந்த மெனக்கெடலுமின்றி செய்யவும் வைத்து மாற்றினாள். அதைதான் முதலில் நான் காதலென உணர்ந்தேன்.
நீங்கள் எனக்கு அன்பினால் தரும் சிறு துளி நஞ்சைக் கண்டும் எனக்கு பயமிருக்கிறது. சந்தேகமும் இருக்கிறது. ஆனால், அவள் நஞ்சுதான் இது என்று தந்தாலும் குடித்துவிடும் பைத்தியம்தான் நான். இருப்பினும் அவளுக்கு அப்படி தர தெரியாது.
மரியாதை நிமித்தமாக உன்னை விட்டு நான் தொலைவாகி இருக்கிறேன். உன் இறக்கையை என் கைகளுக்குள் இல்லாமல் விரித்து பற என்று எப்போதும் என்னை சிறகடிக்கச் செய்தவள். ஆனாலும், நான் கூடடைய விரும்பி ஏங்கி நிற்கும் மனச்சிறை அவளுடையது.
யாரோவொருவரிடம் உன் மனதின் நிர்வாணத்தை காட்டி விட்டால் அவர்களால் உன் குடுமியை பிடித்து ஆட்டி விட முடியும். உன்னை அடிமைப்படுத்த முடியும். இந்த மனிதன் இப்படித்தான் என்று தெரியாத வரைதான் மனிதமெல்லாம். ஆனால், என் முழுதும் தெரிந்தும் அதை நினைவுபடுத்தாத நேர்மையானவள் அவள்.
ஆம், அவள்தான். அவள் மட்டும்தான் இருப்பாள்!
இந்த காரணங்கள் போதாதென்றால் இதை இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்!
உலகின் அத்தனை அடக்குமுறை, அடிமைத்தனத்திற்கும் எதிரானவன் நான். சுயமரியாதை இழப்புக்காக துளியும் விலை போக விரும்பாதவன் நான். எனக்கு அவளிடம் என் சுயத்தை கொடுத்து "பத்திரமாக பார்த்துக் கொள் கண்மனியே" என்று சொல்லும் நம்பிக்கையை எனக்கு தந்திருக்கிறாள் அவள்.
அவள் நிகழ்த்தியது சாதாரணமல்ல. அது வரையறையற்ற ஆழ்மனதின் அத்தியாவசிய தேடல். அவள்தான்! 💙

