Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, January 3, 2024

கவியவளே - சிறுகவிதைகள்

 


 ~

என்னை சிரிக்க வைத்து உன் சிரிப்பு அழகாயிருக்கிறது என்கிறாள். துரதிஷ்டசாலி என்று தூக்கியெறியப் பட்டவனுக்கு வாழ்நாள் மோட்சமாய் வேறென்ன தேவைப்படப் போகிறது...♥



~

எப்போதாவது உன் உள்ளங்கை என் முகம் தாங்க, உன் கண்ணைப் பார்த்து நான் காதல் சொல்ல வேண்டும்...♥



~

உன் மீது முதல் பிரியம் துளிர் விடும் போதே இவ்வுலகம் ஏதேனும் இடர் நிகழ்த்தியிருக்கலாம்...❤



~

உன் அருகாமை நிகழ்த்தும் அதிசயம் தெரியுமா. உன் பார்வையில் மீண்டும் பிறக்கிறேன். பிறந்த கணத்தில் இறந்து மீண்டும் பிறக்கிறேன். நொடிக்கொரு முறை தாயாகும் உனைத் தத்தெடுக்கிறேன்.

பிரியத்தின் கொண்டாட்டத்தின் பிள்ளையாக..!! ❤



கவிதையைப் புரிந்து கொள்ளத் தெரியாத அவளுக்காக நான் கவிதையிலேயே என்னைப் புரிந்து கொள்ளச் சொல்கிறேன். காதல்தான் எத்தனை குழந்தைத்தனமானது...❤



~

எப்படியும் நீயென்னை விரும்பப் போவதில்லை. சரி, சாகடி. பிரியத்தின் பிடியில் இறந்தேனென்ற மகிழ்ச்சியாவது மீதமிருக்கட்டும்...❤



~

மாலை வரை களைந்து கிடக்கும் என் அறையின் விரிப்புகளில் உன் வாசம் வீசட்டும். அப்படியே நான் தூங்கி விட ஆயத்தமாகிடுவேன்...❤



~

விடிந்து விட்டது என்பதற்காகவெல்லாம் எழ வேண்டாம். நீ எழுந்து விட்டாய் என்பற்காகத்தான் விடிந்திருக்கும்...❤



~

"ஒரு முத்தம் கொடு, நான் தூங்க வேண்டும்" என்றவுடன் அனுப்பப்படும் முத்த எமோஜிகளிலெல்லாம் ஈரத்தை தேடும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதுதான் காதல்...❤



~

இத்தனை முத்தங்களுக்கு பின்னரும் தூங்கியே ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்தில் நிறுத்தும் போதுதான் இரவின் உதடுகள் ஈரமாகத் துவங்குகின்றன...❤



~

நீ வெறுக்குமளவு நான் அழுக்கல்ல என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டேயிருக்க அவசியமில்லை. என்னை விட எத்தனையோ அழுக்கை நான் பார்த்து விட்டேன். நீயும் பார்ப்பாய். அப்போது என் தூய்மை உனக்கு விளங்கும். முதலில் நிதானமாயிரு. குழம்பாதே. ஏனென்றால், காதலே அசுத்தமானதுதான்...❤



~

நீ ஏன் என்னை இவ்வளவு நேசிக்கிறாய்.? என்று நான் கேட்டக் கேள்விக்கு அவள் விழி பிதுங்கி நிற்பதைப் போல்தான் நானும் நின்றிருப்பேன். நல்ல வேளை அவளுக்கு இதுபோல் கிறுக்குத்தனமான கேள்விகளெல்லாம் கேட்கத் தெரியாது...❤



~

இறுதியாக என் மீது இரக்கப்பட்டாவது ஏற்றுக் கொள்ளேன் என்னும் நிலைக்குத் தள்ளப்படும் போதுதான் காதல் மீது இரக்கம் வரத் துவங்குகிறது...❤



~

கொட்டித் தீர்க்கப் பேசி நீயென்னை தொலைந்து விடாதே. இத்திடல் உனக்கானதே. நீயிருக்க வேண்டும். அன்றி, நானிறக்க வேண்டும்...❤



~

மீண்டுமொரு முறை கண்ணத்தைக் கிள்ளித் திண்ணாதே. 

கொஞ்சலில் நிரம்பும் கண்ணக்குழிகள் உன் அருகாமையை நிறைத்து விடுகின்றன. வேண்டுமென்றால் முத்தமிட்டுக் கொள்...❤



~

எனக்கென்ன கிடைத்து விட்டது உன்னிடம். ஏன் இவ்வளவு மெனக்கெடல்களை சிரித்துக் கொண்டே செய்து கொண்டிருக்கிறேன்.

நான் யாருக்காக வாழ வேண்டுமென்ற கேள்விக்கான விடையைத் தவிற...❤



~

ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு முன்னால் வரை நீ பேசுவதெனக்கு தெளிவாகப் புரிந்தது.

ஏன் திடீரென்று கட்டியணைத்தாய்.

நான் தடுமாறவும், நீ குழம்பிப் போகவும் இப்போதும் நீ மட்டுமே காரணம்...❤



~

நாம் நீட்டிக்கும் உரையாடல் நேரங்களை எல்லாம் எண்ணிக் கொண்டிருக்காதே. உன் சிணுங்களில் தொடங்கி பெருமூச்சு வரை எனை பாதித்துக் கொண்டிருக்கும். 


கடமையுணர்ச்சி இல்லாமல் இதையெல்லாம் வேலையாய் கொண்டு குறிப்பிடுகிறாயே. இதற்கிடையில் உன் முத்தங்களை நான் சேமித்துக் கொண்டிருப்பதைப் போல இலாபமாய் ஏதேனும் எதிர்ப்பார்க்கிறாயா சொல்..!!



~

நீயென் பிரியத்தை மொத்தமாய் எடுத்துக் கொண்டு முத்தமாய் அனுப்புகிறாயே, காதலென்ன வியாபாரமா..!! ❤



~

உன் அருகாமையில் இடைவெளி நீக்கத் துடிக்கும் மனத்தை மாற்றவாவது அணைத்துக் கொள். மேற்கொண்டு முத்தங்களேதும் இல்லாமல் விலகு. இந்நாளுக்கொரு கிறக்கமாய் அஃதிருக்கும்...❤



~

எனக்குன்னை மட்டும்தான் பிடிக்கும் என்பதை விட, உனக்கு அடுத்த படியாகத்தான் அனைத்தும் என்றால் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். 

மீண்டுமொருமுறை முத்தத்திற்கும் காதலுக்குமான காரணத்தை என்னால் விளக்கி மாள முடியாது. தூக்கமாய் வருகிறது. சரி, ஒரு முத்தம் தாயேன்...❤



~

நீ கடைசியாக அனுப்பிவிட்டுச் சென்ற குரல் செய்தி இன்றைய என் தாலாட்டு, வலி நிவாரணி, தூக்க மருந்து...❤



~

இங்கெல்லா இடத்திலும் அமைதி, இருள், சின்னப் பூச்சிகளின் கீச்சொலிகள். தனிமைக்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் கையில் தந்து உன்னை நியாபகப்படுத்துகிறது அந்த ஒரு நிலா. நான் வேண்டுமானால் கொஞ்ச நேரம் காதலித்துக் கொள்ளட்டுமா..!! ❤



~

நீ சொல்வாய் என்று கடந்து கொண்டிருக்கும் என் நடத்தைகளை திருத்தாமல் நகர்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடையதாகிய நீ என்னிடம் சொல். எனைத் திருத்து. மாற்றிப் பார். கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சியைப் புகுத்து. இப்போது என்னை அழகாக்கிப் பார். அதுதான் உனக்கழகு. சரி, எனக்கு நேரமாகிவிட்டது. 

ஒரு முத்தம் தாயேன்...❤



~

"சரி, ஒரு முத்தம் தா" என்கையில் உன் ஐயம் இவனுக்கு அந்த முத்தத்தில் என்ன கிடைத்துவிடப் போகிறது என்பதாக இருக்கும். நான் பதில் சொல்லத் துவங்குகிறேன். சரி எதற்கு விளக்கமென்று நீயொரு முத்தம் தருகிறாய். நான் நகர்ந்திடும் முன்னர் உன் அனுமதியை விழைகிறேன். சரி ஒரு முத்தம் தாயேன். எனக்கு நேரமாகிவிட்டது...❤



~

அயர்ந்து தூங்கையில் இறுக்க அணைத்துக் கொஞ்சும் தலையணைக்குள் உன் நியாபகம். அடுத்த நொடி உன் குரல் சிந்திக்கத் தலை கவிழ்த்தி உறங்கச் செய்கிறேன். விடியும் வரை பயமறியாமல் தாலாட்டு. இப்போதிலிருந்து நானுன் பிள்ளை. காமமில்லா விடியல் வேண்டுமா.!! சரி, நெற்றி முத்தத்தில் என்னை அணைத்துக்கொள்...❤



~

அப்போது எனக்கு பிடிமானம் கொடுத்திருந்த ஒரேயொரு கையை காதலிக்கத் துவங்கினேன்.

அன்பின் வழி காதல் கொண்டிருப்பது எப்படியென்று தெரியவில்லை.

தாய்மையின் வழி காதல் கொள்வது இருவருக்கும் குழந்தைத்தனத் துணுக்குகளைத் தரும்.

ஒருவரையொருவர் பிள்ளையாய் பாவித்து வாழ்வியலைக் குழந்தைத்தனமாய் நகர்த்த, இன்று வெறும் காதல் எனக்குப் போதவில்லை.

நீ குமரியென்றெனக்குத் தெரியும்

சிறு முத்தம் தா. எனக்கு நேரமாகிவிட்டது..!! ❤



~

நீயில்லாததாய் உணரும் எனதிந்த நாட்களெல்லாம் வெறுமையில் புலம்பலைத் தந்து என் இயல்லைபை கரைத்துக் கொண்டிருக்கிறது. நீ செதுக்கி விட்டுச் சென்ற இந்த உயிரை விட்டு விலகிச் செல்வதாய் உத்தேசமென்றால் உயிரையும் எடுத்துச் செல். என் தேவை நீ மட்டுமே...❤



~

ஒவ்வொருமுறை அவன் களைப்பில் உறங்கும் போதும் ஈரம் படாமல் அவள் கொடுக்கும் ஒவ்வொரு முத்தங்களுக்கும் இவனை அவளது குழந்தையாய் அடையாளம் காட்டி விட்டுச் செல்கிறாள்..!! ❤



~

நீயென்னை பிறக்கச் செய்தவளின் சாயல்தான். வாழ்நாள் முழுக்க உனைக் கொண்டாடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவு நேரம் அனாதையாய் சீருடைத் துவைத்த வெட்டுப்பட்ட விரலில், சோப்பு நுரைத் தரும் வேதனைத் தீர ஒரு முத்தம் வேண்டும். நீயென் அத்தியாவசியமான மடிக்குரியவளல்லவா..!! ❤



~

எத்தனை பிரளயங்களைத் தாண்டி வந்தும் ஓர் தாய்மடி உறக்கத்தின் நிசப்தத்தை தந்திட காதலென்ற ஒன்று காத்திருக்கத்தான் செய்கிறது...❤



~

சலனமில்லா மனநிலையில் குழந்தையாய் உனை நான் ஏந்துகிறேன். இந்த நிமிடம் இப்பேரண்டத்தின் பாக்கியசாலியாய் எனை நீ கொண்டாடிடு என் காதலே..!! ❤



~

நமக்குள் அப்படியென்ன காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறாய்.

என் தொந்தரவை ரசிக்கவும், என் இம்சைகளில் சிரிக்கவும் உன்னைத் தவிற யாருக்கும் ரசனை கிடையாது.

உன் வசைகளையும் கொண்டாடவும், உன் குறும்புத்தனங்களில் வாழ்ந்திடவும் என்னைத் தவிற யாருக்கும் பொறுமை கிடையாது. வாழ்க்கை என்பது கொடுப்பதற்கேயன்றி பெறுவதற்கில்லையே..!! ❤



~

என்னால் உன் பேச்சை சமாளிக்க முடியுமென்று தெரிந்து நீ பேச ஆரம்பிக்கவில்லை. உன் பேச்சைத் தாண்டி திணரி நிற்பதையன்றி, மீண்டும் மீண்டும் ஓர் செல்லப்பிராணி போல் உன் பின்னேயே வருவதையன்றி என்னுள் ஏதும் நிகழாதென்று தெரிந்தே வசைபாடத் துவங்குகிறாய். உன் வார்த்தைகள் மட்டும் எனக்கு அவ்வளவு வேதனையைத் தருவதில்லை. உன் குரலின் மருத்துவகுணம் அப்படி..!! ❤




~

உனக்குத் தெரியாத என் நாட்களில் என்னைச் சுற்றி ஏதேதோ நிகழ்ந்துவிட்டது. அதிகபட்சம் வெறுமையான நாட்களாய்க் கடந்துக் கொண்டிருந்தவற்றில் நிறைய விலகல்களையும், வெறுப்புகளையும் சம்பாதித்திருக்கிறேன். நெருக்கம் என்பது ஒருவர் கூடவே இருப்பது அல்ல. கூடவே இருப்பதாக உணர்த்துவது. இப்போதைக்கு நெருக்கமென்பது என் வலிக்கு அழும் கண்கள்தான். இங்கே காதலும் இல்லை, கண்களும் இல்லை. காரணமும் நானே. எந்தளவு அதிருப்தியை நிகழ்த்தியிருக்கிறது நீயில்லாத இடம். நீ எப்போதுமே என் நட்சத்திரம் சூழ்ந்த வானம்தான். நிறைவான நாட்களின் நினைவாகவே இருக்கிறாய். இப்படியே இருந்தும் விடு. நானும் கூட..!!



~

நீ தூங்கி விட்டாயா, விழித்திருக்கிறாயா..!!

இருக்கிறாயா..!! இல்லையா..!!

என்றெனக்குத் தெரியாது..!!

இங்கே உன் நியாபகம் கொன்ற 

என் சவத்திற்கு உன் வாசனைத் தோய்ந்த அடர் சிவப்புச் சட்டையைப் 

போர்த்தித் தூங்க வைத்திருக்கிறேன்.

நீண்ட உறக்கமொன்றில் மதிமறக்க

வைக்க போதையாக நான் உன்

ஞாபகத்தைத் தந்திருக்கிறேன்..!!

காதல் இத்தனைக் குரூரமானதென்று முன்பெனக்குத் தெரியாது..!!



~

எனக்கு இன்னமும் சில சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரவில்லை. 

கடைசியாக எப்போது அணைத்தாய்..!! எப்போது அறைந்தாய்..!!

எதற்காகப் பாராட்டினாய்..!! 

எங்கே முத்தமிட்டாய்..!! 

என்ன காரணத்திற்காக உச்சி முகர்ந்தாய்..!! 

எதுவுமே தெரியவில்லை..!!

நான் உன்னிடத்தில் குழந்தையாய்க் கிடந்திருந்தேன்..!!

கிட்டத்தட்ட அனாதைத் தன்மையைப் புகுத்தி விட்டு விலகியிருக்கிறாய்..!!

நீயில்லாமல் வெறுமை என்னுள் எளிமையாக நுழைய முடிகிறது என்பது மட்டும் புரிதலாகிறது..!



~

தேடிக் கொண்டேயிருக்கிறேன். 

என் இயல்பையே இழந்து, ஈர்த்து வைத்துக் கொள்ளுமளவுக்கு உன்னிடம் என்ன இருக்கிறதென்று. நீ தந்த வெறுமையில் நானே தனியே உலவி எத்தனையோக் கேள்விகளைக்  கேட்டு பதில்களை உருவாக்கித் தேற்றிக் கொண்டிருக்கிறேன். நீயில்லாத இப்போதும் நீ இங்கேயே இருப்பதாய் எண்ணித் தேட வைப்பதை விட வேறென்ன இருக்கப் போகிறது..!!



~

நீ இங்கேயே இருந்திருக்கலாம்..!!

உனக்கான எத்தனையோ இல்லாமல் இருந்த, என் கூட்டில் இன்று நானே இருக்க முடியவில்லை. நீ இல்லாததால்..!! ❤



~

என்னிடமிருந்தே என்னைத் தெரியாத தொலைவில் நிறுத்தி வைத்து விட்டாய்.

நான் நீ சென்ற இடத்திலிருந்து கடந்து விட்டேன் என்பதாய் நம்பிக் கொண்டிருந்தேன். நாட்களைத் தவிர இங்கெதுவும் நகர்ந்த பாடில்லை. கடந்து வந்தப் பாதைகளைத் தெளிவாகப் பார்த்தால் மிதிபட்ட மலர்களே கிடக்கின்றன. இத்தனைக்கும் நான் சாகமலே என்னைப் பிணமாக்கி ஊர்வலமாய் வாழ வைத்து ரசிப்பதில் அத்தனை இன்பம் உனக்கு...❤



~

எனக்கு உன்னைப் பிடிக்கும், பிடித்திருந்தது என்பதை இப்போது நீயென்னைப் பிடித்துக் கொண்டாய் என்பதில் கடைசியாக முடித்திருக்கிறேன். சாபமாகப் பெற்ற இதனை வரமாக்கிக் கடவுளிடம் இதையாவது பிச்சையாய் தர யாசிக்கிறேன். காதல் ஒரு கட்டத்தில் யாசகமாய் மாறி அதற்கும் பயிலும் வரமெல்லாம் எத்தனை பேருக்குக் கிடைத்து விடப் போகிறது. உன்னைக் காதலித்தமட்டில் நான் அதிஷ்டசாலிதானே..!! ❤



~

இன்றைக்காக வாழ வேண்டும் என்று நினைத்த போதெல்லாம் உன்னோடுதான் என்று நிர்ணயித்த மனம், நாளைக்கான உன் இழப்பையும் வெறுமையையும் ஏற்றுக் கொள்ளாமல் இழந்து நிற்கிறது தைரியத்தையும், நிம்மதியையும்..!! ❤



~

நீ என்னோடு இருந்த போது நானிருந்தேன் என்பதை விட, "வாழ்ந்திருக்கிறேன்" என்பதே நியாயமானதாக இருக்கும்...❤



~

கரையோரத் தடங்களைக் கடந்தோடும் அலையாய், அவள் கண்ணக்குழியைக் கடந்தோடும் வியர்வைதான் எத்தனை விமோசனமானவை...❤



~

இன்னேரம் உனக்கு விடியலாகியிருக்கக் கூடும் என்ற இடத்தில் உன் தொலைவுதான் எனக்கு இருளாகி விடுகிறது. காதலர்கள் தூங்கியிருக்கலாம். 

காதல் விழித்தே கிடக்கிறது...❤



~

நிகர் செய்தெல்லாம் பார்க்க முடியவில்லை..!! இங்கு எதுவும் சரியாக மட்டுமன்றி சமமாகக் கூட இல்லை..!!வேறென்ன செய்ய முடியும்..??

உன் வரமென நானும், என் பிழையென நீயுமாவது வாழ்ந்து விட்டுப் போக வேண்டியதுதான்..!!

அவ்வளவுதானே நம் நேசம்...❤



~

நீயென்னை எடுத்தெறிந்துப் பேசாத எல்லா வார்த்தையுமே அரவணைப்புக்கானதாகவே உணர்கிறேன்...❤



~

அத்தனை போதைக்காரர்களுக்கும் மறக்கவியலாத, கடக்க முடியாத சிறு குவளை மதுவைப் போல், எனக்கென்று வாய்க்கப்பட்ட மதுக்கடல் நீ...❤



~

கையினருகில் கிடைத்திருந்தும் கொய்ய வியலாக் கொண்டலான இன்பமென் காதலென்றால், காரிகையே நீ கவியவளே...❤



~

ஊறாத சிற்சில உலர் திராட்சைகள் வறண்டு வடுவாய் வாயிடுக்கில் சிக்கித் தவிக்கையில் எடுக்க எத்தனிக்கும் நாவுக்கு ஒர் கூச்சம், வன்மம். எடுத்தாலும் திருப்தி. விழுங்க அதோர் சரீர போதை. கடைசியான அதிருப்தியின் கூரிய வெளிப்பாடு அவள்...❤



"உன்னப் பாக்கனும் போல இருக்கு" 

என்று நான் புலம்பும் அளவுக்குத் தொலைவாகாதிருந்தால் நலமென்றிருந்தேன்..!!

வேறு வழியில்லை. நிறைய வலியெல்லாம் இன்னும் உனக்காய்க் காத்த்திருக்கிறது நான் கொடுக்க, கிளம்பும் வரை மட்டுமாவது கவலையில்லாது இரு என்றாள்..!!



~

இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டு விட நான் எவ்விடத்தில் பிசகதனை தவறாய் விட்டு வைத்தேன் என யோசித்துப் பார்த்துச் சிந்திடும் ஓர்த் துளிக் கண்ணீரும் சேர்ந்து உன் நினைவுத் தூரலில் வந்து விடாதல்லவோ..?? 



~

அனுப்பிக் கொண்டிருக்கும் முத்த எமோஜிகளுக்கு எப்போதும் நான் எதிர்வினையை எதிர்ப்பார்த்தது இல்லை. தாராளமாகக் கொடுக்கும் வள்ளலைக் காதலித்தது உனது தவறுதான்...❤



உன்னை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி விடலாம் என்று யோசித்து முடிக்கையில்,

ஓர் யாசகனின் அடுத்த வேலை சோற்று பயம். கடத்தப்பட்டப் பால்குடி மறவாக் குழந்தைத் தாயின் பயம். வெட்கம் அதிகம் கொண்ட பணக்காரனின் பெருமைப் பயம். ஓடைப் படகோட்டியின் வெள்ளத்தின் பயம்.  ஏதாவது ஒன்று விரைவாகத் தொற்றிக் கொள்கிறது.

ஏன், உறவுகள் சூழ்ந்த நாம் ஓர் அனாதையாய் உணரும் பயமும் கூட.❤



~

இந்த நேசத்தின் இறுதிப் பற்றுதலில் என் உள்ளங்கை ஈரத்தின் வியர்வை உன்னுடையது. நீ இறந்த இறுதி நாளிகையை நினைத்து இறுதி வரைச் சிந்தும் கண்ணீரின் ஈரம் என்னுடையது. அவ்வளவே என் காதலின் வெப்பநிலை...❤



~

இதுவரை என் வீட்டு மின்விசிறியில் அடிபடாத ஓர் தட்டானுடைய இறகின் சாயலில் தான் உன்னைப் பார்த்தேன். நீயொன்றும் என்னிலிருந்து எட்ட நின்று இரவு முழுக்க நிலவாய் இவ்வுலகையே ஜோடிக்க வேண்டிய அவசியமில்லை. 

தூக்கம் கண்ணைச் செருகும் நேரம் வந்து விழும் ஓர் தட்டான் இறக்கையின் தடவலாக இரு...❤



~

யாவற்றையும் உன்னிடம் ஒப்படைக்கச் செய்து என்னையே, என்னிடம் யாசிக்கச் செய்யும் அளவுக்கு உக்கிரமான வலைக்காரியின் பின்னலென்பதற்கு தெள்ளிய உதாரணமாய் நீ. 

ஆனால், இவ்விடம் எனக்கு வசதியின் திருப்தியை உச்சத்தில் தந்திருக்கிறது. இங்கேயே இருந்து கொள்கிறேன்.

என் சுயநலத்திற்காக என்றே வைத்துக் கொள்ளேன்...❤


~

அத்தனை சாயலிலும் அவள் தோற்றத்தை அப்படியே வகுத்தெடுத்து ஒரு முறைகேடான சாலையின் கரடு முரடில் கைப்பிடிக்கும் ஓர் பெண்ணாக மாற்ற எத்தனை இண்டு இடுக்குகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது...❤



~

அவர்களுடனெல்லாம் என்னை ஒப்புமை செய்யாதே. காதலிப்பதெப்படி என்றெல்லாம் தெரியாது. என்னளவு உன்னை யாராலும் காதலிக்கச் செய்ய இயலாது..! ❤



~

எத்தனைக் குழப்பங்கள், கலக்கங்கள் என் ஆழ் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தாலும் ஒரு சின்னஞ்சிறுப் புன்னகையால் அனைத்தையும் நேர்த்திப் படுத்திவிடும் ஓர் வல்லமையிலேயே புரிதலாகிவிடும்.

நான் அவளெனும் போதைக்கு அடிமையாகி நெடுநாட்கள் ஆகிறதென்று...❤



~

வஞ்சகமில்லாமல் தீண்டப்பட்டு இவ்விரவின் கசடை நீக்கி முற்றும் நிசப்தமாக்கி அளவு கடந்தப் பேரன்புப் பொன் முத்தமழைப் பொழிந்து நிம்மதியாய்த் தலைக்கோதி நேசங்களைப் பரிமாறி மடியில் தலைத்தாழ்த்தி கனவில் புகுத்தத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறாய் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த தனிமையையும், அதனால் விளைந்த இடைவெளியை ரசித்துக் கொண்டே விடியலை நோக்கிப் பயணப்படுகிறேன்...❤



~

நானெல்லாம் அவ்வளவு அடக்கமான, எளிமையான மனிதனில்லை. உன்னை கையகப்படுத்தி வைத்துக் கொண்டு என்னால் எப்படி பகட்டு இல்லாமல் திரிய முடியும்...❤



~

மொத்தத்தில் அவளால் முடிந்தவரைப் பிரதிபலித்து என் அதிகப்படியான இஷ்டங்களைத் தேற்றியனுப்பி அதைக் காரணங்காட்டி என்னை அடிமையாக்கப் பார்ப்பதே அவள் வேலை...❤



~

பேரின்பப் புலம்பல்களாய் வந்திறங்கும் வேலையில் தானே சோர்ந்துக் களைப்பாற்றுமளவு ஆனந்தக் களிப்பை அளித்த அவள் காதலுக்கு ஆயிரம் நன்றிகள்...❤



~

அனைத்தையும் அவளுக்கு மாத்திரமே உரித்தாக்கி வாழ்கிறோம் என எண்ணுவதும் மூடத்தனமே. நிச்சயம் சுயத்தை அவள் ஈர்த்து வைத்திருப்பாள்...❤



~

சடமென் மேனியது உயிர்த்தெழுந்த அப்பாவையின் பார்வையின் கோணத்தின் மாறுதலறிந்து சற்றளர்ந்து புறை விளங்கா ஊனமானேன்...❤



~

பிரதிபலன் நீயாய் அமையப் பூர்வ ஜென்மத்தில் பெரும்பாவம் செய்திருக்கிறேன்...❤



~

என் மதி விமோச்சனத் திடலெனில் அவள் மடித் துயில் என்பேன்...❤



~

"சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்" என்று சொல்ல வைத்த போதே ஜெயித்தவள் நீ...❤


~

பார்ப்பவளுக்கின்னும் முழுதாய்ப் புரியவில்லை, பார்க்கச் செய்தவனுக்கும் இன்னும் விளங்கவில்லை இதைப் பற்றி. இப்பார்வையில் ஏதோ புதுவகையான வித்தியாசமிருக்கிறது.

ஏறெடுத்துப் பார்த்திராதவனை இயங்காமல் இருக்கச் செய்திருக்கிறது இப்பார்வை. ஆத்மார்த்த உள்ளாய்வில் கண்ணுடே மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருப்பதே இதன் தனிச்சிறப்பு..

ஏவிழியாள்_பார்வை...❤



~

கைதியில்லா மனச்சிறையில் தாளிடப்படாதக் கதவுகளின் மோட்சவெளியில் சுற்றித் திரிகின்றன, அனாதைப் பிணங்களாய் உந்தன் நினைவுகள் மட்டுமே.

சலனமில்லாதிருப்பதை சற்றே சவத்தில் பிதைப்பதுதானே வழக்கமென்றாலும், பிரிவெனும் வலியில் பேரின்பமடைந்தாயெனில் அதுவும் எனக்கோர் ஆனந்தமே..

கவியவளே...❤



~

உம்மைப் போல் உலகம் மறந்து உறங்க முயல்கிறேன் நானுமே. கண் செருகும் தூக்கம் என்று சிலர் கவி பாடுவார் அல்லவோ. அவ்வூசியானவளே நினைவுகளால் இடைஞ்சிக்கிறாள் கனவினிலும்..!! ❤



~

எட்டாக்கனிக்கு எவ்விக் குதித்துக் கல்லில் விழுந்துக் காயப்படும் குட்டிக் குரங்கின் "ஆசை" போல் ஒரு காதல் செய்வாயோ எதார்த்தமாய்...❤



~

நிலவை ரசித்த அதே ஓட்டுத் துளையிலிருந்து, தூரலிட்டுத் தூக்கம் கலைக்கும் சாரல் மழையாய் என்னவள் நினைவுகள்...❤



~

வர்ணமில்லா ஓவியம், அலையில்லா ஆழி, தனல் படாச் செங்கல், சுடரில்லா சுருட்டு, நீண்ட போதை, நல்லுறக்கம், வாழ்வின் அவள். எவ்வளவு கற்பனை நீ.

கனவே...❤



~

நீயே இப்பொழுதுதான் எனக்கு முத்தமிடவே கற்றிருக்கிறாய் எனும் பட்சத்தில், இன்னொருத்தி வந்து எப்படி என்னிடம் காதல் கற்க முடியும் என்று நினைக்கிறாய்..!




No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...