~
இன்றைய கால வளர்ச்சியின் அடிப்படையான விசயமாக எனக்கு தெரியக்கூடிய மனித பண்புகள் அன்பும், ஏற்றுக் கொள்ளுதலும். இவை இரண்டை சரியாக கையாண்டுதான் இத்தனை காலம் உலகம் இவ்வளவு வளர்ந்து நிற்கிறதென்று தோன்றுகிறது. அன்பு என்பதற்கான காரணத்தை காதல், புணர்ச்சி, உறவுகள் என்று நிறைய வகையில் விவரிக்க முடியும். ஏற்றுக்கொள்ளுதல் அப்படியே அன்பிற்கு மாற்றான ஒன்று. ஆனால், அது எப்படி உதவியிருக்கும் என்று கேள்வி வரலாம்.
ஒரு கட்டுரையில் படித்தபோது ஒவ்வொரு தனிமனிதனின் கணிவுள்ளம் தான் இந்த மனித இனத்தின் ஆரம்பகாலம் முதல் இன்றைய வளர்ச்சி வரை அடிப்படை விசயமாக இருந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. பழங்காலங்களில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஏதேனும் காயப்பட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ அந்த காலகட்டத்தில் அவர்களை பார்த்துக் கொள்ளக்கூடிய வசதி யாருக்கும் இருந்ததில்லை. பல்வேறு இடையூறுகளுக்கு நடுவிலும் நோய்வாய்ப்பட்ட மனிதர்களை பராமரித்து பார்த்துக் கொண்டு பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக சில தடயவியல் சான்றுகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசயத்தை ஒரு பக்கம் வைத்துக் கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் அடிப்படையான தேவை என்னவென்று பார்க்கப் போனால் கணிவு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கணிவு என்றவுடன் ஒரு குழந்தை நாய்க்கு பிஸ்கட் போடுவது போலவும், கண் தெரியாத ஒருவருக்கு ஒரு கல்லூரி மாணவி வழிகாட்டுவது போலவும் கற்பனைகள் வரலாம். அப்படியான கற்பனைகளுக்கு தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.
ஆனால், கணிவு என்பது அதோடு நின்று விடுவதல்ல. எங்கோ ஒரு இனஅழிப்பு நடக்கிறது என்று தெரியும் போது அதற்கு எதிராக நாம் என்ன செய்ய முடியுமென்று யோசிப்பதும் கணிவான உள்ளத்தின் வேறொரு பரிணாமம்தான். ஒவ்வொரு மரணத்திற்கும், இழப்பிற்கும் நாம் மன்னிப்பை உணர்வதும் கணிவான உள்ளத்தின் வகைப்பாடுதான், ஒவ்வொரு முறை மனதிற்கு இரக்க நிலை வருவதும் கணிவுடைய வெளிப்பாடுதான். கணிவு என்பது இவ்வுலகில் அத்தியாவசியமான விசயமாக இன்றைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது.
ஏற்றுக்கொள்ளுதல் என்பதை பொருந்திக் கொள்ளுதல் (Adapted) என்றும் சொல்வார்கள். அடுத்தவர்களுக்கு நாம் செய்யக்கூடிய விசயம் கணிவு என்பது போல, நமக்கு நாமே செய்யக்கூடிய விசயம் இந்த பொருந்திக் கொள்ளுதல். இழப்பையும், வலியையும், சஞ்சலங்களையும் பொருந்திக் கொள்ளுதல் என்பது நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய அதே நேரம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு தேவையான விசயமாகவும் இருக்கிறது. அதை செய்து மீண்டு வந்த நிறைய பேர் இன்று தன்னோடு சேர்த்து தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைத்திருக்கிறார்கள்.
பொருந்திக் கொள்ளுவதன் மூலம் வருத்தம் கோபமாக மாறாது. கோபம் வெறுப்பாக மாறாது. வெறுப்பு வன்மமாக மாறாது. சோகம் கூட வலியாக மாறாது. மாறாமல் இயல்பிலேயே நம் இழப்புகளை கையாள இந்த பொருந்திக் கொள்ளுதல் பண்பு பேருதவியாக இருக்கும். நமக்காக அத்தனை எதிர்மறையையும் பொருந்திக் கொண்டு, பிறருக்காக கணிவுள்ளத்தோடு நேர்மறையை மட்டும் பரிமாறினால் நிச்சயம் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும். ஒவ்வொருவரும் இதை தனக்கான வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்ளலாம்.
சிறுவயதில் இருந்து தன்னை விட கடினமான சூழலில் இருப்பவர்களை பார்த்து மனநிறைவு கொள்ள வேண்டுமென்று பயிற்றுவிக்கப்பட்ட கணிவான சமூகம் நம்முடையது. வக்கிரமான எத்தனையோ விசயங்கள் தினந்தோறும் தெரியவந்து கொண்டிருந்தாலும், கணிவான கோடானகோடி மனிதர்களோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் கூட சொல்லலாம். கணிவும், அன்புமே மனிதர்களின் இயற்கையான குணமும் கூட. யாரோவொருவருக்காவது நல்லவர்களாக இருக்கதான் நாம் முயற்சித்துக் கொண்டும் இருக்கிறோம். இங்கு அத்தனை நேர்மறையை அடைவதற்கும் ஏகப்பட்ட வழி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முன்பு நமக்கு நாம் செய்ய வேண்டிய நியாயம் நாம் மகிழ்ச்சியாய், நிறைவாய் உணர வேண்டுமென்ற எண்ணம் கொள்வது.
நிறைவாய் மனிதா!

No comments:
Post a Comment