Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Friday, July 3, 2026

தந்தையர் தினம் - 2026


~
என் முதல் நாயகன் நீ பாடலை கேட்டுக் கொண்டே வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். கண்ணீர் ஒருபுறம், கண்ணீர் ஏன் என்ற கேள்வி ஒருபுறம். குழப்பமான மனநிலையில் தேநீர் விடுதியை அடைந்தேன். நண்பர்கள் கண்ணீருக்கான காரணத்தை கேட்ட போது இந்த பாடலை குறிப்பிட்டேன். "அவ்ளோ தேடுதுன்னா அப்பாவுக்கே கால் பண்ணி பேச வேண்டியதுதானடா" என்றார்கள். "நா கால் பண்ணா, ஏன்டா பண்ணோம்ன்னு யோசிக்கிற மாதிரி எதுவும் பேசிருவாரு. இப்ப இருக்குற இந்த மனநிலை ஏதோ புடிச்சிருக்கு. இந்த அழுகைக்கான காரணம் இப்டிலாம் இருந்தாரேங்குறது இல்ல, இப்டி ஒரு இடத்துல கூட நமக்கு இல்லையேங்குற ஏக்கம்தான்" என்றேன். அவர்களுக்கும் எனக்கிருந்த அந்த குழப்பம் தொற்றிக் கொண்டது.

சிலநேரங்களில் நானே விருப்பப்பட்டு பேச நினைத்து பேசிய பின், பேசியிருக்க வேண்டாமே என்ற முடிவில்தான் வந்து நிற்கும். சில விசயங்கள் காலம், சூழல், பணம் என்று எதனாலும் மாற்ற முடியாததாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வயதைத் தாண்டி செயலுக்குத்தான் மரியாதை. அதே போல பெற்றால் மட்டுமே தந்தையென்று ஆகிவிடாது. பின்பு வேறென்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கேட்டால் எனக்கு பதிலும் தெரியாது. ஆனால் நிச்சயமாகச் சொல்வேன். 
"பெற்றால் மட்டும் தந்தையென்று ஆகிவிடாது!"

இருப்பவருக்கு ஒரு தாய், இல்லாதவருக்கு எத்தனையோ தாய் என்று எளிமையாக சொல்லி விட முடியும். தந்தை விசயத்தில் அது கேளிக்கைக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கப்படக் கூடிய கூற்றாக மாறிவிடும். ஆனால், என்னை வழிநடத்திய, பக்குவப்படுத்திய, பயிற்றுவித்த, தைரியம் கொடுத்த, உடன் நின்ற, இன்றளவும் சுக துக்கங்களில் என்னோடு எனக்காக பயணிக்கிற எத்தனையோ மேன்மிகு மக்கள் தந்தையின் வழிகாட்டுதலை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி!

எனக்கு எப்போதுமே உரிமைக்கு உட்பட்ட ஒருவராக இல்லாத போது எப்படி என்னால் மட்டும் உறவாட முடியும். எதனடிப்படையில் நான் நெருங்குவேன். என்னுடைய கல்வி, உடல்நிலை, மனநிலை தொடங்கி என் அடிப்படை விசயங்கள் கூட தெரியாத தொலைவுக்கு பெற்றெடுத்தவரால் எப்படி போக முடிகிறது. அப்போது சொன்னதுதான் "பெற்றால் மட்டும் தந்தையென்று ஆகிவிடாது" காலம் போகப்போக அவருடனான தொலைவு அதிகரித்ததைப் போல அவர் மீதான எதிர்ப்பார்ப்புகளும், வருத்தங்களும் கூட குறைந்தே விட்டது. "உன்னிடம் பகையில்லை, அன்பைப் போலவே" என்றுதான் எல்லாவற்றையும் கடந்திருக்கிறேன்.

எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பொதுவாக அப்பா என்றால் பிரச்சனை, பயம். அதைத் தாண்டி எனக்குள் அப்பா என்றால் குழப்பம். அவர் உண்மையில் நம் மீது பாசம் கொண்டவரா, என்னை அவருக்கு பிடிக்குமா, நான் பேசலாமா கூடாதா, எனக்கு ஏதாவது நல்ல விசயங்களை செய்வாரா, சராசரி பெற்றோர்கள் போல ஒரு சிறிய விசயத்திலாவது நம்மால் அவரிடம் உரிமை கோர முடியுமா, அம்மாவுக்கு பிறகு அப்பாவும் இல்லாமலே போய்விட்டாரா என்று எத்தனையோ கேள்விகள் குழப்பங்களாக இருந்திருகிறது. எனக்கு நெருங்க முடியாது அல்லது மனதுக்கு ஒப்பாது என்ற விதத்திலும் கூட தகப்பன் கடைசிவரை ஒரேயொருவர்தான். அதை எந்த வகையிலும் கண்டிப்பாக மறுக்கவே முடியாது. இதன் அடிப்படையில் இன்றுவரை ஆரண்ய காண்டம் படத்தில் வரக்கூடிய குட்டிச் சிறுவனாக "உங்க அப்பாவ ரொம்ப புடிக்குமா?" என்ற கேள்விக்கு "அப்டி இல்ல. ஆனா, அவர் எங்க அப்பா" என்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன். நான் நிற்பது அவருக்கு தெரியுமா, தெரியாதா என்றே எனக்குத் தெரியாது.

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ❤

ஏதுமின்றியே


~
துயரமான செய்திகளை இலகுவாக பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒருவன். எதையும் கோலாகலமாக கொண்டாடாத, எதிலும் பூதாகரமாக வெடித்துச் சிதைக்காத ஒருவன். இழப்புகளை தேவையென ஏற்றுக் கொள்ளும் ஒருவன். அமைதியான முறையில் அத்தனையிலும் நிதானித்து பொறுமையாக நகரும் ஒருவன். தன் சிந்தனைக்கு அப்பார்ப்பட்ட எதையும் கைக்குள் அடக்காமல் பறக்க விட்டிருக்கும் ஒருவன். நம்பிக்கை வேர்களை தளர்த்தி தன்னுலகை பெரிதாக்கிக் கொண்ட ஒருவன்.

அவனுக்கு தன்னுடனான ஒப்பந்தங்களை தனக்குள்ளே கூட தெளிவாக சொல்லிக் கொள்ளத் தெரியாது. நிகழ்வுகளை விரும்பாமலும், வலிகளுக்கு அஞ்சாமலும், அடுத்த கணத்தை யோசிக்காமலும் அவனால் இருக்க முடியும். முடிவிலியான விளக்கங்களுக்கு தகுதியான ஒருவனை யாருமே கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லதும் கூட. ஏதுமில்லாமல் தொடங்கிய ஒருவனுக்கு அது ஏற்புடைய சுதந்திரமானதாகவும் இருக்கும்.

❣️

பொறுப்பு


~
என்னால் அதிகம் நேசிக்கப்படக் கூடியவர்களைப் பார்த்தால் இயங்கிக் கொண்டே இருப்பவர்களாக இருப்பார்கள். யாருக்காகவாவது, எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அது வெளியில் தெரிந்தோ, தெரியாமலோ இருக்கலாம். ஆனால், இயங்கிக் கொண்டே இருப்பவர்கள் எப்போதும் எனக்கு சலிப்பைத் தருவதில்லை.

நான் கவனித்த வரையில் அவர்களின் நம்பிக்கை தன்னால் முடிந்த தொடர்ச்சியை நீட்டிக்கச் செய்வது. ஒரு அன்பின் தொடர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர விடாமல் நீட்டித்துக் கொண்டே இருப்பது. அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதில் மிக முக்கியமானதான நான் நினைப்பது நகர்வுதான். நேர்மறையின் பக்கம், நியாயத்தை நோக்கி ஒரு சிறு நகர்வையாவது வாழ்வில் நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் ஒன்றும் செய்துவிடாத எத்தனையோ பேர் நம்மை ஏந்தியிருப்பார்கள்.
நிறைய செய்தவர்கள் துச்சமாக்கியும் இருப்பார்கள்.
யார் என்ன செய்தாலும், செய்ய மறந்தாலும் மிக முக்கியம் "செயல்".
எனக்குத் தெரிந்தவரை ஒருவரின் உடனிருத்தலை விட மிகச் சுலபமான உதவி வேறொன்றுமில்லை.

கைக்கு எட்டிய அத்தனை பேருக்கும் ஏதோவொரு விதத்தில் நாம் பொறுப்புக்குரியவர்கள்! 

தந்தையர் தினம் - 2026

~ என் முதல் நாயகன் நீ பாடலை கேட்டுக் கொண்டே வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். கண்ணீர் ஒருபுறம், கண்ணீர் ஏன் என்ற கேள்வி ஒருபுறம்....