Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Friday, July 3, 2026

தந்தையர் தினம் - 2026


~
என் முதல் நாயகன் நீ பாடலை கேட்டுக் கொண்டே வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். கண்ணீர் ஒருபுறம், கண்ணீர் ஏன் என்ற கேள்வி ஒருபுறம். குழப்பமான மனநிலையில் தேநீர் விடுதியை அடைந்தேன். நண்பர்கள் கண்ணீருக்கான காரணத்தை கேட்ட போது இந்த பாடலை குறிப்பிட்டேன். "அவ்ளோ தேடுதுன்னா அப்பாவுக்கே கால் பண்ணி பேச வேண்டியதுதானடா" என்றார்கள். "நா கால் பண்ணா, ஏன்டா பண்ணோம்ன்னு யோசிக்கிற மாதிரி எதுவும் பேசிருவாரு. இப்ப இருக்குற இந்த மனநிலை ஏதோ புடிச்சிருக்கு. இந்த அழுகைக்கான காரணம் இப்டிலாம் இருந்தாரேங்குறது இல்ல, இப்டி ஒரு இடத்துல கூட நமக்கு இல்லையேங்குற ஏக்கம்தான்" என்றேன். அவர்களுக்கும் எனக்கிருந்த அந்த குழப்பம் தொற்றிக் கொண்டது.

சிலநேரங்களில் நானே விருப்பப்பட்டு பேச நினைத்து பேசிய பின், பேசியிருக்க வேண்டாமே என்ற முடிவில்தான் வந்து நிற்கும். சில விசயங்கள் காலம், சூழல், பணம் என்று எதனாலும் மாற்ற முடியாததாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வயதைத் தாண்டி செயலுக்குத்தான் மரியாதை. அதே போல பெற்றால் மட்டுமே தந்தையென்று ஆகிவிடாது. பின்பு வேறென்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கேட்டால் எனக்கு பதிலும் தெரியாது. ஆனால் நிச்சயமாகச் சொல்வேன். 
"பெற்றால் மட்டும் தந்தையென்று ஆகிவிடாது!"

இருப்பவருக்கு ஒரு தாய், இல்லாதவருக்கு எத்தனையோ தாய் என்று எளிமையாக சொல்லி விட முடியும். தந்தை விசயத்தில் அது கேளிக்கைக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கப்படக் கூடிய கூற்றாக மாறிவிடும். ஆனால், என்னை வழிநடத்திய, பக்குவப்படுத்திய, பயிற்றுவித்த, தைரியம் கொடுத்த, உடன் நின்ற, இன்றளவும் சுக துக்கங்களில் என்னோடு எனக்காக பயணிக்கிற எத்தனையோ மேன்மிகு மக்கள் தந்தையின் வழிகாட்டுதலை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி!

எனக்கு எப்போதுமே உரிமைக்கு உட்பட்ட ஒருவராக இல்லாத போது எப்படி என்னால் மட்டும் உறவாட முடியும். எதனடிப்படையில் நான் நெருங்குவேன். என்னுடைய கல்வி, உடல்நிலை, மனநிலை தொடங்கி என் அடிப்படை விசயங்கள் கூட தெரியாத தொலைவுக்கு பெற்றெடுத்தவரால் எப்படி போக முடிகிறது. அப்போது சொன்னதுதான் "பெற்றால் மட்டும் தந்தையென்று ஆகிவிடாது" காலம் போகப்போக அவருடனான தொலைவு அதிகரித்ததைப் போல அவர் மீதான எதிர்ப்பார்ப்புகளும், வருத்தங்களும் கூட குறைந்தே விட்டது. "உன்னிடம் பகையில்லை, அன்பைப் போலவே" என்றுதான் எல்லாவற்றையும் கடந்திருக்கிறேன்.

எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பொதுவாக அப்பா என்றால் பிரச்சனை, பயம். அதைத் தாண்டி எனக்குள் அப்பா என்றால் குழப்பம். அவர் உண்மையில் நம் மீது பாசம் கொண்டவரா, என்னை அவருக்கு பிடிக்குமா, நான் பேசலாமா கூடாதா, எனக்கு ஏதாவது நல்ல விசயங்களை செய்வாரா, சராசரி பெற்றோர்கள் போல ஒரு சிறிய விசயத்திலாவது நம்மால் அவரிடம் உரிமை கோர முடியுமா, அம்மாவுக்கு பிறகு அப்பாவும் இல்லாமலே போய்விட்டாரா என்று எத்தனையோ கேள்விகள் குழப்பங்களாக இருந்திருகிறது. எனக்கு நெருங்க முடியாது அல்லது மனதுக்கு ஒப்பாது என்ற விதத்திலும் கூட தகப்பன் கடைசிவரை ஒரேயொருவர்தான். அதை எந்த வகையிலும் கண்டிப்பாக மறுக்கவே முடியாது. இதன் அடிப்படையில் இன்றுவரை ஆரண்ய காண்டம் படத்தில் வரக்கூடிய குட்டிச் சிறுவனாக "உங்க அப்பாவ ரொம்ப புடிக்குமா?" என்ற கேள்விக்கு "அப்டி இல்ல. ஆனா, அவர் எங்க அப்பா" என்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன். நான் நிற்பது அவருக்கு தெரியுமா, தெரியாதா என்றே எனக்குத் தெரியாது.

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ❤

ஏதுமின்றியே


~
துயரமான செய்திகளை இலகுவாக பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒருவன். எதையும் கோலாகலமாக கொண்டாடாத, எதிலும் பூதாகரமாக வெடித்துச் சிதைக்காத ஒருவன். இழப்புகளை தேவையென ஏற்றுக் கொள்ளும் ஒருவன். அமைதியான முறையில் அத்தனையிலும் நிதானித்து பொறுமையாக நகரும் ஒருவன். தன் சிந்தனைக்கு அப்பார்ப்பட்ட எதையும் கைக்குள் அடக்காமல் பறக்க விட்டிருக்கும் ஒருவன். நம்பிக்கை வேர்களை தளர்த்தி தன்னுலகை பெரிதாக்கிக் கொண்ட ஒருவன்.

அவனுக்கு தன்னுடனான ஒப்பந்தங்களை தனக்குள்ளே கூட தெளிவாக சொல்லிக் கொள்ளத் தெரியாது. நிகழ்வுகளை விரும்பாமலும், வலிகளுக்கு அஞ்சாமலும், அடுத்த கணத்தை யோசிக்காமலும் அவனால் இருக்க முடியும். முடிவிலியான விளக்கங்களுக்கு தகுதியான ஒருவனை யாருமே கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லதும் கூட. ஏதுமில்லாமல் தொடங்கிய ஒருவனுக்கு அது ஏற்புடைய சுதந்திரமானதாகவும் இருக்கும்.

❣️

பொறுப்பு


~
என்னால் அதிகம் நேசிக்கப்படக் கூடியவர்களைப் பார்த்தால் இயங்கிக் கொண்டே இருப்பவர்களாக இருப்பார்கள். யாருக்காகவாவது, எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அது வெளியில் தெரிந்தோ, தெரியாமலோ இருக்கலாம். ஆனால், இயங்கிக் கொண்டே இருப்பவர்கள் எப்போதும் எனக்கு சலிப்பைத் தருவதில்லை.

நான் கவனித்த வரையில் அவர்களின் நம்பிக்கை தன்னால் முடிந்த தொடர்ச்சியை நீட்டிக்கச் செய்வது. ஒரு அன்பின் தொடர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர விடாமல் நீட்டித்துக் கொண்டே இருப்பது. அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதில் மிக முக்கியமானதான நான் நினைப்பது நகர்வுதான். நேர்மறையின் பக்கம், நியாயத்தை நோக்கி ஒரு சிறு நகர்வையாவது வாழ்வில் நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் ஒன்றும் செய்துவிடாத எத்தனையோ பேர் நம்மை ஏந்தியிருப்பார்கள்.
நிறைய செய்தவர்கள் துச்சமாக்கியும் இருப்பார்கள்.
யார் என்ன செய்தாலும், செய்ய மறந்தாலும் மிக முக்கியம் "செயல்".
எனக்குத் தெரிந்தவரை ஒருவரின் உடனிருத்தலை விட மிகச் சுலபமான உதவி வேறொன்றுமில்லை.

கைக்கு எட்டிய அத்தனை பேருக்கும் ஏதோவொரு விதத்தில் நாம் பொறுப்புக்குரியவர்கள்! 

Friday, June 19, 2026

பிடிக்கும்!

~
காதலுக்கென்று நிறைய தடைகளை சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. சமீபத்திய காதல் கதைகளில் அந்த தடைகள் படிப்படியாக வெவ்வேறு விதங்களில் உடைக்கப்படுவதை பார்க்க முடிகிறது. தன்னிறைவு நிதி நிலையில் இருக்கக்கூடிய காதலர்களால் தங்களால் இயன்ற விதத்தில் காதலை திருமண பந்தத்தில் சாத்தியப்படுத்தி விட முடிகிறது. நல்ல பெற்றோர்கள், நண்பர்கள் நிறைய நேரங்களில் மத அல்லது சாதி வித்தியாசங்களை உடைக்க இம்மியளவு பயன்படுகிறார்கள். இதற்கு முந்தைய காலகட்டத்தில் காதலுக்கான தடைகளாக இருந்த இவைகளைப் போல நம்பிக்கையற்ற அல்லது பாதுகாப்பற்ற மனப்போக்கு ஒரு முக்கியமான காரணமாக இப்போது தோன்றுகிறது. 

நாம் பிறரை பார்த்து பார்த்து வளர்ந்தே பழகிவிட்டபடியால் யாரைப் பற்றியும் சிந்திக்காமல், யாரோடும் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் தனக்கென்று ஒரு காதலை கையிலெடுக்க முடிவதில்லை. தோல்வியில் முடிவது அல்லது வெறுப்பில், நெருக்கமற்ற நிலையில் தொடரக்கூடிய உறவாக இந்த காதல் ஆகிவிடுமோ என்ற பயம் காதலை அணுக மேலும் ஒரு தடையாய் இருக்கிறது.

தனியாகவே இருக்க நினைப்பது எப்படி முட்டாள்தனமானதோ அதே போல் தவறான துணையை தேர்ந்தெடுப்பதும் முட்டாள்தனமே. இதை அறிவுப்பூர்வமாக கையாள முடியாமல் மனதோடு போட்டி போடவும் தெரியாமல் திக்குமுக்காடி காதலில் விழுந்து, எழுந்து, வாழ்ந்து தீர்ப்பதில் நிறைய சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. இந்த சுவாரசியம் என்ற காரணமெல்லாம் வாழ்வதற்கு மட்டும்தான் தேவையாய் இருக்கிறது. தேர்ந்தெடுப்பதற்கு ஒரேயொரு முட்டாள்தனமான காரணம் போதுமாயிருக்கிறது.

"எனக்கு அவள புடிக்கும்" ❤

Saturday, May 16, 2026

இரயிலும் - காலமும்


~
2015 சமயத்தில் தன்பாதிலிருந்து ஆலப்புழா செல்லும் ரயிலில் கோயம்புத்தூரை கடந்து சென்று கொண்டிருந்தோம். கடுமையான கூட்டத்தின் காரணமாக படியில் அமர்ந்து பயணம் செய்த ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நான் கண் முன்னே பார்த்த முதல் கோரவிபத்து அதுதான்.

சேலத்தில் எங்கள் கடைக்கு எதிரில் சென்னை - கோவைக்கான இரயில் தண்டவாளங்கள் இருக்கும். அருகில் ஊர்கள் பெரிதளவில் இல்லாத காரணத்தாலும், அது பெரிய வளைவு என்பதாலும் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாகவே இருந்து வந்தது. நிறைய மனித, விலங்குகளின் மரணங்களை அந்த இடத்தில் அடிக்கடி பார்க்க வேண்டியதாயிருந்தது.

இதையெல்லாம் பார்த்து ஒரு கட்டத்தில் பழகிப்போன எனக்கு விபத்துகளும், மரணங்களும் பயம் தருமளவில் இருந்து தொலைவாகி இருந்தது. அதே காலகட்டத்தில் அப்பாவின் வற்புறுத்தலினாலும், அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் விருப்பமின்றி அடிக்கடி கேரளாவிற்கு இரயிலில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

வருடத்திற்கு பத்து முறைக்கு மேல் இந்த நெடுந்தூர பயணம் அப்பாவோடோ, தனியாகவோ இருந்தாலும் ஒருமுறை கூட முன்பதிவு பயணச்சீட்டை கண்ணில் பார்த்ததில்லை. எப்போதுமே முன்பதிவில்லாத பெட்டியில் கூட்டத்தில், படிக்கட்டில் அமர்ந்தே பயணம் செய்து பழகியதால் கொஞ்சம் கொஞ்சமாக இரயில் பயணத்தின் மீதான சலிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

சரியாக டிக்கெட்டுக்கான அதுவும் முன்பதிவற்ற டிக்கெட்டுக்கான பணத்தோடு மட்டும் பயணம் செய்வது, சிறிய இடைவெளியில் இரண்டு மூன்று ரயில்கள் மாறி மாறி பயணம் செய்வது, கூட்டநெரிசலில் பயணம் செய்வது, சிறுவயதில் தனியாக பயணம் செய்வது, மொழி தெரியாத ஊர்களுக்கு நடுவே பயணம் செய்வது என்று இரயிலைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாலே பதட்டமாகும் அளவுக்கு இரயில் பயணத்தின் ஒவ்வாமையை உணர்ந்திருந்த நேரம் அது.

2017-ல் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரயிலில் செல்வதற்கான தேவைகள் குறைந்திருந்தது. அப்பொழுதும் நான் வேலை பார்த்த மளிகைக் கடைக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் இரயில்கள் செல்லும் போது கொஞ்சம் பதட்டமாகும். பயணத்தின் மீதான ஆர்வம் கூட சிலநேரம் இரயிலின் மீதான சலிப்பால் குறைந்து விடும். இதற்கெல்லாம் அப்பாதான் காரணம் என்று சொல்லி விட முடியாது என்றாலும், அவர் ஒரு மிகமுக்கிய காரணம் என்பதும் உண்மை.

சென்னைக்கு வந்த பிறகு வெகுநாட்கள் கழித்து முதல்முறை நண்பர் ஒருவரோடு வேலை விசயமாக விசாகப்பட்டினத்திற்கு இரயிலில் சென்றேன். முதல்முறை ஒரு நிறைவான, பதட்டமில்லாத இரயில் பயணத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நிம்மதியாக தூங்கி எழுந்த இரயில் பயணம் என்று கூட சொல்லலாம். சென்னை வந்து ஐந்து வருடத்தில் அதிகபட்சமான பயணங்கள் பேருந்திலும், கார்களிலுமே இருந்துள்ளது. பணப்பற்றாக்குறையில் கூட இரயில் பற்றி யோசித்ததில்லை.

கடந்த ஆறுமாத காலமாக இரயில் நிலையத் தொடர்புகள் அதிகமாகி விட்டது. வேலையும், பழக்கவழக்கங்களும் அது சார்ந்தே இருப்பதால் இரயில் நிலையங்களின் ஒவ்வொரு இடத்திலும் நடந்து திரிந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு இரயில் சார்ந்த விசயங்கள் பழக்கமாகிறது. பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நள்ளிரவில், நடுக்காட்டில் தண்டவாளத்தில் வேலை செய்யும் போதும் கூட ஏதோ நிறைவாய் இருக்கிறது.

இப்போது அரக்கோணம் சந்திப்பில் வேலை முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன். ஒரு மாதமாக அரக்கோணத்தில் வேலை செய்வதால் அடிக்கடி இரயில் பயணம் செய்வதும், இரயில் நிலையத்திலேயே இருப்பதுமாக பொழுது போகிறது. அதிகாலையில் முதல் இரயிலில் தனியே நடந்து திரிவது புதிய அனுபவமாயிருக்கிறது. முதல்முறை இரயிலையும், இரயில் பயணத்தையும் விரும்பத் தொடங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் பைக் அல்லது பஸ்ஸையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த எனக்கு முதல்முறை இரயிலும் ஒரு தேர்வாக இடம்பெறத் தொடங்கியிருக்கிறது.

நான் இந்த ஒன்றில் மட்டும் என் தந்தையை மன்னிக்கத் துவங்கியிருக்கிறேன். இப்படி ஏலியனுக்கும், சலூன் கடை கண்ணாடிக்கும், பெல்ட் செருப்புக்கும், சோடா பாட்டிலுக்கும், பாத்திரக் குவியலுக்கும், கபடி விளையாட்டுக்குமென்று ஒவ்வொன்றாக மன்னித்து முடித்து நேசிக்க நினைப்பதற்குள் காலம் முடிந்துவிடும் போல. உங்கள் குழந்தைகளுக்கு பேரன்பைத் தர தவறினாலும், எதன் மீதான பதட்டத்தையும் உட்குலைவையும் தந்து விடாதீர்கள். அது காலத்தை உருக்குலைத்து நிறுத்தி விடும். என் ஏழு வருட இரயில் பயணத்தை அதுதான் தின்றிருக்கிறது. 

#TimeHeals 🚊❣️

Friday, May 15, 2026

உனக்காயிரு!


~
பிடிக்காத கணவர் கூட இருக்குற பெண் ஒருத்தர் எல்லாத்தையும் தாண்டி இந்த வாழ்க்கை என் தேர்வுங்குறதால, நா திரும்ப திரும்ப இத தேர்ந்தெடுக்க முடியிது. இல்லாதபட்சம் நா முதல் சண்டையிலயே பிரிஞ்சி போயிருப்பேன்னு சொல்றாங்க.

நா விரும்பி செஞ்ச தொழில்ல தோல்விய சந்திச்சதுக்கு அப்றமும் எந்த விதத்துலயும், யாரையும் பாதிக்காத வகையில நா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போக முயற்சி செய்றேன். நான்தான் முன்னாடியே சொன்னேன்லன்னு சிலர் வந்து நிக்கிறப்ப என் கஷ்டமான சூழ்நிலையில நீங்கல்லாம் எங்க போனீங்கன்னு கேக்க தோனுதுன்னு ஒருத்தர் சொல்றார்.

தொழில் செய்றதுதான் சரின்னு ஒருத்தரும், வேலைதான் சரின்னு ஒருத்தரும், அதுலயும் குறிப்பிட்ட ஒரு வேலைதான் சரின்னு ஒருத்தரும் குழப்பத்துக்கு நடுவுல அவங்க நம்ம வாழ்க்கையில எவ்வளவு முக்கியமானவங்கன்னு அடையாளப்படுத்திட்டே சொல்லுவாங்க.

அக்கறையும், அறிவுரையும், அது சார்ந்த முடிவுகளும் நல்லதாவே இருந்தாலும் அது நம்மகிட்ட அதிகார தோரணையோட வர விடவே கூடாதுன்னு யாரோ சொல்லி கேட்ட நியாபகம். அவரவர் தேர்வையும், ஆசையையும், வாழ்க்கையோட போக்கையும் அவரவரே தீர்மானிப்பதுதான் இங்க சுவாரசியமே.

ஒரு சம்பந்தமில்லாத Topic-க்கு நடுவுல "நா உம்மேல உண்மையாவே அக்கறையிலதான் சொல்றேன்னு உனக்கே தெரியும். நா சொல்றத செஞ்சாதான் நீ நல்லாருப்ப"ன்னு ஒருத்தர் ரொம்ப தைரியமாவும், பெருமையாவும் சொல்லும் போது சிவப்பு மஞ்சள் பச்சை படத்துல வர்ர ஒரு வசனம்தான் நியாபகம் வந்துச்சு.

"நமக்கு Lift குடுத்தாங்கங்குறதுக்காக நம்ம போக வேண்டிய இடத்த மத்தவங்க முடிவு பண்ணக்கூடாது"

#BeyouForyou ♥

Tuesday, March 10, 2026

ஒன்றுமில்லை


~
இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள்.
மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவியாய் வந்து விழும்  வகிடில் சிக்காத கூந்தலை வயலின் வாசிப்பதைப் போல எடுத்துப் போட்டுக் கொண்டே பேசிக்  கொண்டிருக்கிறாள்.

நீச்சல்குள நீரின் மேல் உலர விடப் போட்டிருக்கும் வேட்டிகளாய் ஆடை விட்டிருந்தது தேநீர்.
அதில் ஆங்காங்கே பாட்டிக் கண்ணங்களாய் சில சுருக்கங்கள்.
கொள்ளை அழகு பொழியும் வனமென்று சரளமாய் வந்து விழும் வார்த்தைகளுக்கு மத்தியில், உதடசைவின் அதிர்வை மட்டுமே உணர முடிந்தது.

இராட்டினத்தைக் காணும் சிறுவனாய் பிரம்மாண்ட பேச்சைப் பூரிப்போடு கேட்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இருள் அடையத் தொடங்கும் போதே வார்த்தைகள் பார்வைக்கு அப்பால் நகரத் தொடங்கியிருந்தது.
கிளியமர்ந்து பறந்த சோளக்காடாய் நிமிர்ந்து அமர்ந்து வார்த்தைகளை பூரிப்போடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

உணர்வோடுதான் கேட்கிறானா என்ற குழப்பத்தில் புருவம் உயர்த்தி 'என்ன?' என்பதாக கேள்வி கேட்டாள்.
பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் கற்பூரமாய் காணாமல் போக, வலுவிழந்த ஏவுகனையாய் தரையிறங்கியது மனம்.
அன்று நான் சொன்ன 'ஒன்றுமில்லை' என்ற பதிலில் எல்லாமும் இருந்தது.

❣️

Saturday, March 7, 2026

பெண்கள் தினம்


~
பெண் என்பவள் என்று நிறைய விளக்கவுரைகள் சொல்லியும் முடியாத நீட்சியாக எப்போதும் பெண்ணைச் சுற்றிய, பெண்ணை பற்றிய கதைகள் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அடுத்தடுத்த தனக்கு நெருக்கமான மனிதர்களை இன்ன இதுதானென்று சொல்லி முடிக்கவியலாத அசாத்திய பிடிப்புகளை தந்து வளர்த்தெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்.

ஆணென்பது பிறப்பு, பெண்ணென்பது பவுசு என்று சொல்லுமளவுக்கு ஊர் மெச்ச எத்தனையோ பெண்களை பிள்ளையிலிருந்து, பாட்டி வரை பெருமையாய் பார்த்து வளர்ந்திருக்கிறோம். பெண் இல்லாத நிலை ஆகிப் போனால் ஆணென்பவன் அர்த்தமற்றுப் போவானென்று எப்போதும் தோன்றும். பெண்ணென்பவள் ஆறுதல், பெண்ணென்பவள் விதி. பெண்ணென்பள் பிரியம். பெண்ணென்றாலே திருவிழா.

கவிஞர் வெய்யில் ஒரு மேடையில் சொல்லியிருப்பார்.

"பெண் நிறைவாய் இருப்பவள். அவளுக்கு ஆண் இன்றி எல்லாமும் கிடைத்து விடுகிறது. ஆணிடம்தான் மிகப்பெரிய பிச்சைப் பாத்திரம் இருக்கிறது"

என் பிச்சைப் பாத்திரத்தை நிரப்பிய, அதனைப் பிடுங்கி தரையில் அமர்த்திய, அடித்து திருத்திய, ஆளாக்கி வழிநடத்திய, தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய அத்தனை தேவதைகளுக்கும் என் நன்றிக்கடன்களை உரித்தாக்குவேன். வாழ்வெனும் வானில் வண்ண விண்மீன்களாய் பிரகாசிக்கும் பிரியத்திற்குரிய அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

#HappyWomensDay ❤

Wednesday, March 4, 2026

நாமொரு இம்மி


~
இன்றோ, நாளையோ என்னும் சூழலில் நம் அழிவும், நமக்கான இரங்கலும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு நிறைய மனிதர்கள் கொத்து கொத்தாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயுதங்களை ஏந்தி அல்லது தடுத்து போர் செய்வது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தனிப்பட்ட வெறுமையிலும், இடர்களிலும் நம்மை சுற்றி எத்தனையோ பேர்கள் தன்னுள்ளே அழிந்து கொண்டிருக்க நாமும் ஏதோவொரு விதத்தில் பங்கு வகிக்கிறோம் என்று அடிக்கடி தோன்றும். இவற்றில் பெரும்பான்மையான விசயங்களுக்கு வளர்ந்த ஒருவர் தர நினைக்கும் அழுத்தமோ, வளர நினைக்கும் ஒருவருக்கு கொடுக்கப்படும் அழுத்தமோதான் காரணமாய் இருக்கிறது. 

இவைகளுக்கு மத்தியில் நாமும் எதிர்மறையான விசயங்களை போகிற போக்கில் யார் யாரிடமோ தூவி விடத்தான் செய்கிறோம். எனக்கு நெருங்கிய நண்பரொருவர் பிரபஞ்ச அறிவியலைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பார். ஆரம்பத்தில் அதில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்த போதும் இப்போது என் நிறைவை தந்தது அந்த பிரபஞ்ச அறிவே. போதிய அளவு மன அமைதிக்கான வழியாக நான் தேர்ந்தெருத்த ஒரு சூத்திரமும் அது சார்ந்ததுதான். 

"நமக்கு நாமே ஒளி, நமக்குள் நம்மாட்சியே, பிரபஞ்சத்தில் நாமொரு இம்மி, நமக்கான மீட்சி நம்முள் நிறைவாயிருப்பதுவே"

நம்மிலிருந்து நேர்மறையாய் இருக்கத் தொடங்கினால், மென்மையான வாழ்வை நமக்கே அது திருப்பித் தரும். இப்பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு மிக மிக மிகச்சிறிய விசயமென்று யோசிக்கும் போது, அத்தனை எதிர்மறையும் அழிந்து அன்பை விதைக்க முடியுமென்று நிச்சயமாக நம்புகிறேன்! ❤

Thursday, February 26, 2026

மீட்சி


~

சில நாட்கள சாதாரணமா கடந்துற முடியிறதில்ல. எவ்வளவு இறுக்கி பிடிச்சாலும் சில விசயங்கள மறைச்சிட்டே இருக்க முடியிறதில்ல. சில நினைவுகள மறந்துட்டு நிம்மதியா வாழ்ந்துறதுக்கு மனசும் அனுமதிக்கிறதில்ல. நாட்கள நியாபகம் வச்சிருக்குறதோட மிகப்பெரிய பலகீனம் இது. 


சிலநேரம் மறக்குறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லுவாங்க. அது அப்டியில்ல. மன்னிக்கனும். எந்த விதத்திலும் தன் எண்ணத்தால கூட விரும்பி நேசிச்ச ஒருத்தருக்கு காயத்த குடுக்க கூடாதுன்னு மன்னிச்சிறனும். ஆனா, கடக்க முயற்சி பண்ணி, பண்ணி தோத்துக்கிட்டே இருக்குற ஒருத்தனுக்கு மறக்குறது சாதாரண விசயமில்லல.


இந்த நாள், இத்தன மணி, மதியம், காலைன்னு ஒவ்வொரு நிமிஷமும் அத்தனை அத்தனை எதிர்மறையான நினைவுகளையும் அசைபோட்டு இருந்தாலுல், எந்தவொரு வெளிப்படையான தாக்கத்தையும் நிகழ்த்தாம அமைதியா கடந்து போக ஆயிரம் காரணங்கள் இருக்கும். உடைய ஒரேயொரு தேயாத நினைவு போதும்.


நீங்கள் நேசிக்கக் கூட வேண்டாம். வாழ்வென்பது மிகப்பெரிய சாபமென்று நினைக்கக் கூடிய விளிம்பிற்கு எந்த உயிரையும் நகர்த்தாதிருங்கள்! 

Tuesday, February 17, 2026

தேநீர் மிடறு


~

ஒரு தேநீர் மிடரு போல ஒவ்வொரு மனிதர்களிடமும் பேச விழைகிறேன். சுவாரசியமற்ற மனிதர்களென்று யாருமேயில்லை. ஒவ்வொருவரின் கதையிலும் தனக்கென்றொரு ஒரு கதாநாயகப் பாத்திரம் வைத்துக் கொள்வார்கள். 


நீங்களும் நானும் அப்படித்தான். இங்கு யாருக்கும் உடனிருப்பவனாக இருக்கப் பொருந்தவில்லை. என்னோடு யார் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்றுதான் சொல்ல நினைக்கிறோம். 


நிறைய கதைகள் தனக்கு நடந்தவைகளைச் சுற்றியே பேசும் போது, சுற்றி நடப்பைகளுக்கு இடையில் நாம் என்ன செய்கிறோம் என்று சில முறை யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். உண்மையில் இங்கு யாரும் மையத்திலும் இல்லை, யாரும் வெளியிலும் இல்லை. 


நீங்களும் நானுமாய் ஒரு குவளைத் தேநீர் போல் கலந்து ஒன்றாய்தான் இருக்கிறோம். முதல் மிடருக்கும், இரண்டாம் மிடருக்குமான இடைவெளியில்தான் இத்தனை நேசமும், வாழ்தலும்.

பூஜ்ஜியக்காரன்


என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை நான் பார்த்ததில்லை.


தப்பென்று தெரிந்த அடுத்த கணம் மன்னிப்பு கேட்க தயாராகி விடுவேன்.

கோபத்தில் ஏதேனும் பேசி விட்டால் தூங்குவதற்கு முன் போன் செய்து மன்னிப்பு கேட்பேன்.

பிடித்திருந்தால் யோசிக்காமல் பாராட்டி விடுவேன்.


தூங்குவதற்கு முன் மனதளவில் எல்லோரையும் மன்னித்து விடுவேன்.

ஒரு முழு இரவை ஒருவரின் மீது கோபத்தோடு கடத்தத் தெரியாது.

யாருடைய மனஸ்தாபத்தோடும் அடுத்த நாளை தொடங்க பிடிக்காது.

மகிழ்ச்சியாக வாழ அல்லது சாக மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்க வேண்டும்.


கண்டிப்பாக இன்று இரவு இறந்து விடுவோமென்று, மனதின் ஒரு ஒரத்தில் நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றே பழகிவிட்டது.

அப்படி சாகாமல் விழித்தேன் என்றால் ஒரேயொரு பெரிய ஆசையோடு அடுத்த நாளை தொடங்குவேன்.

கண்டிப்பாக நான் என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை சந்திக்கவே கூடாது.

காதலர் தினம் - 2026


~
யார் யாரோவாக வந்து அவர்களே நமக்கு போதுமானவர்களாக மாறி விடுகிறார்கள். மனிதர்களை நினைவுகளாக்கவும், நியாபக அழிவில் இருந்து மிட்டெடுக்கவும் யாரோ ஒருவர் வந்து விடுகிறார்கள். தனித்து இருந்தால்தான் நிம்மதி என்று சொல்லிக் கொண்டே யாரையாவது தேடிக்கொண்டோ, யாருக்காகவாவது காத்திருந்தோ பழகிவிட்டோம்.

அன்பின் பிடியில் சிக்கி, கொண்டாடிக் களைத்து, சேர்ந்து வளர்ந்து, பிரிவில் இழந்து, நினைவில் வீழ்ந்து, அழுது தீர்த்து, வாழ்வோடு இயைந்து அத்தனையையும் கடந்து அடுத்தடுத்த மனிதனும் அதையே தேடிப் போகிறானென்றால் அது எத்தனை அபூர்வமானதாயிருக்கும்.

ஆயிரம் பேர் திட்டியும், சபித்தும். எத்தனையோ பேர் அனுபவித்தும், எத்தனையோ பேரை வாழ வைத்தும், ஒரு யுகமே கடந்தும் இன்றளவும் சலிக்காத ஒரு விசயத்தைக் குறிப்பிடச் சொன்னால் காதலைத் தவிற வேறெதைக் காட்ட.

காதலித்து மடி ❣️

அந்நியராய்


~
சமரசமற்ற அன்பும், பரிவும் நமக்குள் சரிசமமாக பகிரப்பட்டது. 
நீ, நானென்ற இரு வேறு சூழ்நிலைகளை அழகானதொரு வீடாக மாற்றினோம்.
ஏராளமான மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் வனமாகி வாழ்ந்தோம்.
சுற்றுச்சுவர் அற்ற அருங்காட்சிகமாக பலர் ஆசைப்பட கொண்டாடித் திரிந்தோம். 

புன்முறுவல் தொடங்கி வெடிச்சிரிப்பு வரை உலகிற்கு இலக்கணம் எழுதிக் கொடுத்தோம்.
வெவ்வேறு நிலைப்பாடுகளை விவாதித்து தீர்வோடோ, தீர்வில்லாமலோ அடுத்தடுத்த விவாதங்களை தொடுத்தோம்.
நட்சத்திரங்களை அகற்றி விட்டு வானத்தை முழுமையாக நமதாக்கியதாக கதைகள் பேசியிருந்தோம்.
பேரன்போடு பெருங்காதல் செய்தோம்.

நம்மளவில் எவ்வித விமர்சனங்களும் இல்லாத மனிதர்களாகவே இருந்தோம்.
இருந்தும், அறிமுகமற்ற அந்நியர்களாகவே இருந்துவிட்டுப் போயிருக்கலாம் என்ற நிலைக்குப் போய் நம் பிரிவு நிகழ்ந்திருக்கக் கூடாது என்பதே என் வருத்தம்.

❣️

Tuesday, February 3, 2026

மென்மை | மேன்மை


~
மென்மை | மேன்மை

எனக்கு தெரிந்தவர்களில் அதிகம் கோபப்படக்கூடியவர் என் தந்தை. ஆனால், அவர் அடிக்கடி "கோபத்தில் எழுபவன், நஷ்டத்தில் வீழ்வான்" என்று சொல்வார். நானும் இதை அடிக்கடி பயன்படுத்துவேன். இப்படி நமக்கு நாமே சொல்லிக் கொள்வதில் கூட ஒரு நிறைவு இருக்கிறது. இப்படி சொல்வதால் நம்மால் நம் தவறை சரி செய்து கொள்ள முடிகிறது. சரிவர அதன் விகித அளவுகளைக் கண்காணிக்க முடிகிறது. நம்மை நாமே திருத்த முடிகிறது.

எனக்குத் தெரிந்தவரை மிகவும் எளிமையான அதே நேரம் வீரியமான வார்த்தைகள் என்றால் மன்னிப்பும், நன்றியும்தான். நான் தயங்காமல் பயன்படுத்தும் வார்த்தைகளில் முக்கியமானவை இவை இரண்டும்தான். சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதையே குற்றச்சாட்டாக சொல்லும் அளவுக்கு பயனற்ற முறையில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். "நன்றி" என்று தமிழில் சொல்லும் போது சிலர் வித்தியாசமாக பார்ப்பதும் உண்டு.

இன்றைய சூழ்நிலையில் வீடு தொடங்கி உலகம் வரை கடுமையான வக்கிரங்களும், வன்முறையும் நிறைந்திருக்கிறது. இதற்கிடையிலும் பொறுமையைத் தாண்டி கோபத்தை மிகப்பெரிய பலமாகவும், பக்குவத்தைத் தாண்டி கட்டுப்பாடற்ற செயல்முறைகளை வீரமாகவும் பழக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது இந்த சமூகம். சமூக வளைதளம், சினிமாவில் இருந்து தெருவோரத் திண்ணை வரை மெல்லிய வன்முறைகள் பூசிய உரையாடல்களை சந்திக்காமல் நகர முடிவதில்லை.

பொறுமையாளர்களாக பார்த்த நிறைய பேர் கடும் கோபக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். பக்குவமான, தெளிவான நிறைய பேர் குழப்பங்களில் சிக்கி பதட்டமடைகிறார்கள். பதட்டத்தில் தவறுகளை செய்து அதன்பின் தனக்குள்ளேயே பலவீனமானவர்களாக உணர்ந்து விடுகிறார்கள். பலவீனங்களை மறைக்க பிறரையும் மன்னிக்காமல், தன்னையும் மன்னிக்காமல் குழப்பமான தனக்கு பழக்கமில்லாத வன்மங்களை சுமந்து திரிகிறார்கள்.

பணம், தொழில், குடும்பம், சமூக அழுத்தம், தனிமனித உளவியல் சிக்கல் என்று பல்வேறு காரணிகளால் நாம் நாளுக்குநாள் மாறிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சமூகத்தின் சமநிலையில் இந்த மாற்றத்தின் சராசரி விகிதம் வெகுவாக மாறுபட்டுள்ளதை சமீபமாகத்தான் கவனிக்க முடிகிறது. அந்தந்த வயதை தாண்டிய தவறுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. தடுக்க முடியாத அளவுக்கு அல்லது கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குமான பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும் இடத்தில் சகமனிதர் யாரும் இல்லை. அதிகமான மனிதர்கள் எவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலும் கூட தனிமையாகவே தன் விசயங்களை கையாள விரும்புகிறார்கள். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், தனித்தனி பிரச்சனைகளின் எல்லையில் தன் இயல்பைத் தாண்டி யோசிக்காமல் இருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. எதிர்மறையான நிறைய விசயங்கள் இயல்பைத் தாண்டி நடப்பவையே. அப்படி நடந்து கொள்ளாமல் இருக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

சமூகத்தில் நெருடலாக இருக்கக் கூடிய விசயங்களைக் கூட, சுட்டிக் காட்டக் கூடிய இடத்தில் நாம் இல்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்தவரை கடினமான வழிகளை, மேம்போக்கான வன்முறையைக் கூட கையில் ஏந்தாமல் மென்மையாக நடந்து கொள்ள முயல்வதே மாற்றத்திற்கான ஆரம்ப வழி. நேர்மறை என்பதன் தொடக்கமே எதிர்மறையாய் இல்லாமல் இருப்பதுதான்.

வன்முறை என்றவுடன் உடல்ரீதியாக பிறருக்கு செய்யக்கூடிய தீங்கு மட்டும்தான் என்று பொருளல்ல. எதிர்மறை எண்ணங்களால், தவறான சிந்தனைகளால், காரணமற்ற பதட்டங்களால் கூட மெல்லிய வன்முறைகள் நிகழ நிறைய வாய்ப்பிருக்கிறது. இதற்கு இடையில்தான் கெட்டப் பழக்கங்கள் மனிதர்களை ஆட்கொற்கிறது. இத்தகைய மெல்லிய வன்முறைகள் தனக்குள்ளே தன்னை அழித்துக் கொள்ளக் கூடிய ஆபத்தான விசயமும் கூட. ஒவ்வொரு விளைவின் முந்தைய வினையும் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று நம்புபவன் நான்.

காலத்திற்கு ஏற்றார்போல ஒவ்வொரு மனிதரும் தன் பொறுப்பில் நிதானித்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். மென்மையாக இருப்பதால், பொறுமையாக இருப்பதால் சின்னஞ்சிறிய மாற்றங்களை நமக்குள்ளேயே பார்க்க முடியும். அந்த மாற்றத்தின் மூலம் தன்னை வெறுத்த நிறைய பேர்களால் தன்னையே நேசித்துக் கொள்ள முடியும். தன்னை நேசிக்கத் தொடங்குபவன் எதிர்மறையின் பக்கம் விலக மாட்டான். அதுதான் மேன்மையாளர்களாக வாழ்வதற்கான, நேர்மறையான மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரே வழி என்று நம்புகிறேன்.

மென்மையாய் வாழ்! ❣️

தந்தையர் தினம் - 2026

~ என் முதல் நாயகன் நீ பாடலை கேட்டுக் கொண்டே வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். கண்ணீர் ஒருபுறம், கண்ணீர் ஏன் என்ற கேள்வி ஒருபுறம்....