~
பிரிதொரு நன்னாளில் நாம் சந்தித்தோம். தேநீர் அருந்தி, தோளுரச அமர்ந்து கதை பேசி மகிழ்ந்தோம். ஒவ்வொரு மிடறிலும் கொஞ்சம் ஏக்கமும், சொல்லாமல் விட்ட சில வார்த்தைகளையும் அருந்தி இறுதியாய் நினைவை மென்று ஏப்பம் விட்டோம். உரையாடல் இலகுவாகும் போது முட்டாளாய் முடிவெடுத்து விட்டோம் என்று நம்மை நாமே எள்ளி நகையாடினோம்.
எல்லாம் நன்மைக்குத்தான் என்று ஆறுதலும் அடைந்து கொண்டோம். சுற்றம், நட்பென்று அத்தனையையும் விசாரித்து ஆர்வமாக தெரிந்து கொண்டோம். இன்றைய ஆசைகளையும், நேற்றைய கடமைகளையும் கேட்டு அறிந்து கொண்டோம். இருவரின் கணிப்பின் படி இருவரும் வளர்ந்திருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டோம். வழக்கம் போல நீ கொடு என்று தேநீருக்கான காசை மாறி மாறி பொறுப்போற்றோம்.
இறுதியாக தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டதற்கு புன்னகையை மட்டுமே பதிலளித்து மீண்டும் விலகிச் சென்றோம். பிரியத்திற்கு உள்ளான யாரையும் வெறுக்க முடிவதில்லை, விலகிச் சென்ற யாரையும் நெருங்க முடிவதில்லை. அன்றைய கடைசி கேள்வியில் நிகழ்ந்த அத்தனை கோபங்களையும், சேமித்த அத்தனை பிரியங்களையும் கடந்து நம் மீதான அலாதி அக்கறை அப்பட்டமாய் தெரிந்தது.
நலமாயிருக்கிறாய்தானே! ❤

No comments:
Post a Comment