Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Sunday, April 28, 2024

எளிய வாழ்க்கை என்னும் பீலா

~
பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் போன்ற அளவுக்கு அதிகமான பணம் கொண்டவர்கள் எளிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதாக பேட்டி அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அது மக்களிடையே ஒரு மாயையை உருவாக்குவது போல் இருக்கிறது.

அவர்கள் சொல்வது போல எளிமையான வாழ்க்கையை வாழும் அல்லது அந்த எளிமையான வாழ்க்கை மட்டுமே வாழக் கூடிய அளவு வருமானத்தை ஈட்டக் கூடிய யாரும் அந்த வாழ்க்கை முறையை போதுமென்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

உலகின் பல நாடுகளை சுற்றி விட்டு, பல்லாயிரம் கோடிகளில் புரண்டு விட்டு, ஆசைகளையும், தேவைகளையும் நிறைவு செய்து விட்டு இறுதியாக ஒரு ஓய்வை அல்லது அமைதியை தேடி இந்த எளிய வாழ்க்கை முறைக்கு வருகிறார்கள்.

இதை பேட்டிகளாக பகிர்ந்து சுய விளம்பரம் தேடிக் கொள்வது மட்டுமல்லாமல், அவர்களை பின்தொடரும் பலருக்கும் அந்த வாழ்க்கை முறை போதுமென்ற எண்ணத்தையும் தந்து விடுகிறார்கள். இவர்களை முன்னுதாரணமாக எடுக்கும் போது ஒரு குவியலான மக்களின் வாழ்க்கை முறையை நிர்ணயிப்பதே அவர்களாகி விடுகிறார்கள்.

உண்மையில் அது அவர்களது வாழ்க்கை முறையே கிடையாது. அது அவர்களுடைய தற்போதைய தேர்வு அல்லது ஆசை. அது கிட்டத்தட்ட பிரியாணி சாப்பிட்டு சலித்துப் போனவன் பழைய கஞ்சி குடிக்க ஆசைப்படுவது போல ஒரு தேர்வு. அவனுக்கு ஒருநாள் பழைய கஞ்சியும் சலித்துப் போகுமென்பது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரியாது.

அவர்களுக்கு இந்த வாழ்க்கை முறையின் மேலுள்ள மோகமும், தேவையும் நிவர்த்தி ஆகி விட்டால் உடனே கோடி ரூபாய் வாழ்க்கை முறைக்கு சட்டென மாறி விட முடியும். ஆனால், இந்த எளிமையான வாழ்க்கை முறையை நம்மிடம் திணித்து நம்மை அதன்படி வாழத் தூண்டுவதும், அதன் மூலம் பலவகைகளில் சுரண்டிக் கொண்டிருப்பதும் புரிவதற்குள் காலம் கடந்து விடும். 

ஏமாற்றப்படுவது உண்மையிலேயே எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் ❤

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...