~
முதலில் அவ்வளவுதான் மனிதர்கள் கதைக்காக சேவியர் அண்ணனுக்கு ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக நான் புத்தகங்களைப் பற்றி எழுதியது கிடையாது. புத்தகங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு நமக்கு பெரிதாக என்ன தெரியும் என்றொரு எண்ணம்.
"விசாலமான பாதைகளிலும் நேர்க்கோட்டில் செல்பவனால்தான் சீக்கிரம் கூடடைய முடியும்" என்பது போல கதைகளுக்கேற்ற இயல்பான வாக்கிய நடையில் இருப்பதால் இந்த புத்தகத்தை சீக்கிரமே முடித்து விட முடியும். ஒரு இயக்குனருக்கேயான எளிமையான வாக்கிய அமைப்பில் இருப்பதால் நம்மால் வார்த்தைகளோடு ஒட்டிவிட முடிகிறது.
ஒவ்வொரு கதைகளும் இளைஞர்களையும், ஊர் சார்ந்த மக்களின் வழக்கு மொழிகளையும் தொட்டு பயணப்படும் போது மிகச் சுலபமாக கதைக்களத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. சேவியரின் முதல் புத்தகமாயினும் தொய்வில்லாமல் வாசிக்க வைக்கும் போது, முதல் புத்தகமென்ற எண்ணம் போய்விடுகிறது.
நிறைய கவனிக்கப்படாத விசயங்களையும், தருணங்களையும் நினைவூட்டி வாழ்வியல் சம்பவங்களை தொகுத்திருக்கிறது இந்த "இடந்தலைப்பாடு". வெவ்வேறு கதைக்களங்களை அறிமுகப்படுத்தி அதில் நம்மை சேர்த்து நகர்த்த எழுத்தாளருக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது.
"பிராகாசமாயிருக்கிறது வாழ்வு. மனித மனம்தான் கொஞ்சம் இருளாயிருக்கிறது" என்பதாக ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட சுய மறைவிற்குள்ளேயான அமைதியையும், ரகசியங்களையும் இப்படியான நிறைய கதைகள்தான் தேக்கி வைத்திருக்கின்றன.
வாழ்த்துக்கள் சேவியர்
