~
எதை மீறி நீங்கள் ஒன்றைச் செய்து முடிக்க முயல்கிறீர்களோ, அதைத்தான் வெகு நாட்களாக எல்லையென்று கருதிக் கொண்டு இருந்திருப்பீர்கள். சில விசயங்களில் நான் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்வதற்கு மாறாக, நான் முழுமையடைந்து விட்டதாக சொல்பவர்களை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், முழுமை என்ற ஒன்றை நம்பாதவன் நான்.
நான் முழு நல்லவனும் அல்ல, முழு கெட்டவனும் அல்ல. முழு சோம்பேறியும் அல்ல, முழுநேர உழைப்பாளியும் அல்ல. இந்த இடைப்பட்ட வெளியில்தான் நானும், நீங்களும் இளைப்பாறுவதாக நான் நம்புகிறேன். அறிவார்ந்த மனிதர்கள் என்று நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் சுவாரசியம் குன்றாதவர்களாகவே இருக்கிறார்கள்.
தங்களின் அறிவு சார்ந்த தேடலை எப்போதும் ஒரு காத்திருப்புடனே வைத்திருக்கிறார்கள். அவர்களே எல்லோரிடமிருந்தும் கற்கிறார்கள். நிறைய கற்றுக் கொடுக்கிறார்கள். இது கற்றலில் மட்டுமின்றி ஒவ்வொன்றிலும் பொருத்தக் கூடிய செயல்முறைதான். நான் சிறந்த மனிதனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் நன்றாக எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் எனும் போது அது பாதையையும், அதன் சார்ந்த பார்வையையும் விசாலப்படுத்தும்.
உங்களின் தேடலும், காலமும் கடந்து கொண்டே இருக்கும் போது உண்மையில் முழுமையடைவதென்பது எங்கும் நிகழ்வதில்லை. நீங்கள் முழுமையைத் தேடித் தேடி இந்த வாழ்க்கைப் பயணமே முழுமையாகாது. ஏனென்றால், மகிழ்ச்சியாக வாழ முயற்சித்துக் கொண்டேயிருப்பதுதான் வாழ்விற்கான சாராம்சம். நான் அவ்வப்போது நண்பர்களிடம் சொல்லிக் கொள்வதுண்டு.
"Try to be" தானடா வாழ்க்க! ❤
