Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Tuesday, August 29, 2023

அவரவர் போக்கு


~
"நிஜ முகத்த அவ இப்பதான் காட்டிருக்கா" "அவன் உன்ன இவ்ளோ மோசமா திட்டிருக்கான்னா, அப்போ இதான் அவனோட உண்மையான முகம்" இந்த மாதிரி ஒருத்தர் தன்னோட பொறுமைய மொத்தமா இழந்துட்டு செய்யக் கூடிய விசயங்கள்தான் அவங்களுடைய உண்மையான முகமா தீர்மானிக்கப்படுது.

கண்டிப்பா இதுல எனக்கு உடன்பாடு இல்ல. பத்து வருஷ திருமண வாழ்க்கைல ஒன்னா இருந்த கணவன் மனைவிக்குள்ள ஏதோவொரு சூழ்நிலையில சண்டையாகி கைகலப்பாகிட்டா அதுதான் அவங்க ரெண்டு பேரோட இத்தன வருஷ வாழ்க்கையின் உண்மையான முகம்ன்னு சொல்லீற முடியுமா.

எப்பவும் பொறுமையா இருக்குற ஒருத்தன் சண்ட போட்டுட்டாலோ, எப்பவுமே சிரிச்சிட்டே இருக்குற ஒருத்தன் அழுதுட்டாலோ இதுதான் அவனோட நிஜம்ன்னு சொல்லீற முடியாது. அதுவும் அவனுக்குள்ள இருக்குற ஒரு பார்ட். அவ்ளோதான். 

அதே மாதிரி ஒருத்தரோட குறிப்பிட்ட ரெண்டு, மூணு எதிர்மறையான விசயங்கள திரும்ப திரும்ப சொல்லிக் காட்டிட்டே இருக்குறதும் தப்புதான். அது அவங்கள குற்றவுணர்ச்சிலயே வச்சி அதவிட்டு வெளியவே வர விடாம கஷ்டப்படுத்துற மாதிரி. மன்னிப்பாலயோ, தண்டனையாலயோ தீர்வுக்கு வராத எந்தவொரு தப்பும் பேசிட்டே இருக்குறதால சரியாகாது.

எல்லாருக்கும் எல்லாமே இருக்கு. பால்டப்பா மாதிரி மூஞ்சி இருக்கும். பெரிய வில்லத்தனம் பண்ணிட்டு இருப்பான். ரவுடி மாதிரி இருப்பான். பச்சக் கொழந்த மாதிரி நடந்துப்பான். ஊருக்கே உத்தமனா இருக்குற ஒருத்தன் பெரிய அயோக்கியனா கூட இருப்பான். ஒருத்தரோட ஒருநாள் முகம், ஒருநேர சண்டை, தடுமாற்றமான மனநிலையில செய்ற அல்லது சொல்ற எதையுமே அவங்களோட நிஜமான முகமா நினைக்க கூடாது. அத அடுத்தவங்ககிட்ட சொல்லி பதிவு பண்ணவும் கூடாது.

இங்க யாருக்கும் பொய், நிஜம்ன்னு மாறக்கூடிய முகமில்ல. மனுஷன்னா எல்லா குணமும் இருக்கதான் செய்யும். அவ்ளோதான்! ❤

Sunday, August 13, 2023

உன்னோடு


~
மழைக்கால சாலையோரத்தில் ஒருத்தி அவசர அவசரமாய் ஓடி வந்த இளைனின் தலையை துப்பட்டாவால் துடைத்து விட்டதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடிக்கடி சாப்பிடும் அசைவ உணவகத்தில் புரோட்டா சாப்பிடும் கலையை தன்னோடு வந்திருந்த பெண்ணுக்கு ஒருவன் சொல்லி கொடுத்து கொண்டிருந்தான்.

மாறி மாறி என் இரு நண்பர்கள் அவரவரின் கைகளை முகப்பு படமாக வைத்து தங்களின் காதலை பகிரங்கப்படுத்திக் கொண்டனர்.

தெருவிளக்கு வெளிச்சத்தில் கைப்பிடித்து நின்று கொண்டிருந்த இருவர் சட்டென முத்தமிட்டுக் கொண்டனர்.

அவன் தேநீரை ஆற்றிக் கொடுக்க, இவள் அவன் உதட்டுக்கு கீழ் ஒட்டியிருந்த சிறு துண்டு பிரட்டை விரல்கள் எடுத்து விட்டாள்.

சென்ற வாரம் நான் சென்ற திருமண விழாவில் மணமக்கள் இரத்ததானம் செய்ததையும், அதற்கென்று முகாம் அமைத்திருந்ததையும் பார்த்த போது மகிழ்ச்சியாய் இருந்தது.

நெருங்கிய நண்பனின் கல்யாணத்திற்கு பிறகான விருந்தால், அவன் உடற்கட்டை இழந்து தொப்பையானதை நகையாடி அவன் மனைவி பேசிக் கொண்டிருந்தாள்.

எனது இருக்கைக்கு மூன்று இருக்கைகளுக்கு முன்னிருந்த கணவன் மனைவி ஏதோ முனுமுனுத்தபடி கொஞ்சிக் கொண்டிருப்பதை அவர்களின் மகள் தடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

எதார்த்தமாய் அலைபேசியை எடுத்துப் பார்த்தால், இருபதாமாண்டு திருமண நாளென்று ஒரு அக்கா வாட்சப்பில் பதிவிட்டிருக்கிறார்.

எதிர்வீட்டு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி வயதான மனைவியோடு மொட்டை மாடியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்.

உன் மரணத்திற்கு முன்னேமே நான் சாக வேண்டுமென்று பாட்டியிடம் சொல்லி விட்டு, அதே போல் இறந்தும் போன வாட்ச்மேன் தாத்தா நினைவுக்கு வந்தார்.

உன்னை தேடுவதற்கு எனக்கு காரணங்கள் தேவையில்லை. நீ என் இன்றைய வாழ்தலுக்கான காரணம். நாளைய வாழ்க்கைக்கான ஆசை.

அது ஆஹா, ஓஹோ என்றெல்லாம் அல்ல.
என் அருகில் இருந்த காதல்களைப் போல! ❤

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...