~
ஏதேதோ நிகழ்த்திவிட்டாய் சகி.. உன்னுள் என்னை தொலைத்தது கூட நினைவில்லாத அளவு தொலைத்த நினைவைக் கூட தொலைத்திருக்கிறேன்!
இப்போதெல்லாம் என் அறைக்குள் பட்டாம்பூச்சி கூட்டம் கூட்டமாய் நெஞ்சு துளைக்க ஆயத்தமாயிருக்கிறது. வெறும் நியாபகத்தின் வாசத்தில்!
நீ படர்ந்து கிடந்த என் மார்புக் கொடியில் எவ்வளவு பூக்கள் தெரியுமா. மூச்சு முட்டக் கூடிய நெடியாக மாறிய வாசத்தின் ஆதியாகிவிட்டது அத்தனையும்!
சொட்பமாகவே முத்தமிட்டிருக்கவோ, பேசியிருக்கவோ நினைத்திருப்பேன். எப்படி என்னால் உன்னை வெறுமனே பார்த்துக் கொண்டேயிருப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருக்க முடிகிறது!
ஏனிந்த மழைக்கெல்லாம் மழைக்கெல்லாம் காதலை தவிற வேறு நியாபகமே தெரியாதா. நான் முழுவதும் நனைந்து விட்டேன். கிட்டத்தட்ட உன் வியர்வை வாசம் போல்!
கரிசனம் பார்த்துக் கூட ஓர் முத்தமிட்டுக் கொள் எப்படியும் நீ தரும் முத்தம் ஓர் தழுவலாக இருந்தாலும் அஃதென் பேராசையின் நிவர்த்தி தான். உன் சார்ந்த என் முத்தம் வெறும் தீண்டல்!
அலங்கரிக்க ஆபரணம் தேவையில்லையென்று கழுத்தெழும்பை மறைத்துக் கொண்டிருக்கும் உன் ஆடம்பர அட்டிகைக்கு எப்போதுதான் தெரியப் போகிறதோ. ப்ச்!
எதற்கெடுத்தாலும் எதையோ மறைத்தே விளையாடுகிறாய். இப்போதெல்லாம் என் அணைப்புக்கான ஏக்கம் கூட உன் நிழல் தாண்டி யோசிப்பதில்லை!
உனக்கொன்று தெரியுமா. எனக்கு ஒன்று தெரியுமா என்றவுடன் ஒன்று என்று எல்லோருக்கும் ஏதோவொன்றுதான் நிரந்தரமாக முடியும். அவ்வொன்று உன்னிடம் சொல்ல வந்தவொன்று தான் நீ!
நீ நிகழ்ந்து விட்டு போன பின் நான் ஏறிட்டு பார்க்கும் எல்லாமே சலிப்புக்குரிய ஏதோவொன்றாகி விட்டிருக்கிறது. எஞ்சியது நீயெனும் கவிதைதான்!
எனக்கு அழகை பிடிக்கவேயில்லை. என்ன பெரிய அழகு. நீயெல்லாம் அழகாகவே இல்லை. நீ வெறும் சல்லாபம், சலிப்பென்று சமாதானம் செய்து வைத்திருக்கும் என் ஆழ் மனதின் எதிரிதான் உன் அழகு!
❣️
