Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, October 29, 2025

நிறைவாய் மனிதா!


~
இன்றைய கால வளர்ச்சியின் அடிப்படையான விசயமாக எனக்கு தெரியக்கூடிய மனித பண்புகள் அன்பும், ஏற்றுக் கொள்ளுதலும். இவை இரண்டை சரியாக கையாண்டுதான் இத்தனை காலம் உலகம் இவ்வளவு வளர்ந்து நிற்கிறதென்று தோன்றுகிறது. அன்பு என்பதற்கான காரணத்தை காதல், புணர்ச்சி, உறவுகள் என்று நிறைய வகையில் விவரிக்க முடியும். ஏற்றுக்கொள்ளுதல் அப்படியே அன்பிற்கு மாற்றான ஒன்று. ஆனால், அது எப்படி உதவியிருக்கும் என்று கேள்வி வரலாம்.

ஒரு கட்டுரையில் படித்தபோது ஒவ்வொரு தனிமனிதனின் கணிவுள்ளம் தான் இந்த மனித இனத்தின் ஆரம்பகாலம் முதல் இன்றைய வளர்ச்சி வரை அடிப்படை விசயமாக இருந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. பழங்காலங்களில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஏதேனும் காயப்பட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ அந்த காலகட்டத்தில் அவர்களை பார்த்துக் கொள்ளக்கூடிய வசதி யாருக்கும் இருந்ததில்லை. பல்வேறு இடையூறுகளுக்கு நடுவிலும் நோய்வாய்ப்பட்ட மனிதர்களை பராமரித்து பார்த்துக் கொண்டு பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக சில தடயவியல் சான்றுகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசயத்தை ஒரு பக்கம் வைத்துக் கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் அடிப்படையான தேவை என்னவென்று பார்க்கப் போனால் கணிவு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கணிவு என்றவுடன் ஒரு குழந்தை நாய்க்கு பிஸ்கட் போடுவது போலவும், கண் தெரியாத ஒருவருக்கு ஒரு கல்லூரி மாணவி வழிகாட்டுவது போலவும் கற்பனைகள் வரலாம். அப்படியான கற்பனைகளுக்கு தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், கணிவு என்பது அதோடு நின்று விடுவதல்ல. எங்கோ ஒரு இனஅழிப்பு நடக்கிறது என்று தெரியும் போது அதற்கு எதிராக நாம் என்ன செய்ய முடியுமென்று யோசிப்பதும் கணிவான உள்ளத்தின் வேறொரு பரிணாமம்தான். ஒவ்வொரு மரணத்திற்கும், இழப்பிற்கும் நாம் மன்னிப்பை உணர்வதும் கணிவான உள்ளத்தின் வகைப்பாடுதான், ஒவ்வொரு முறை மனதிற்கு இரக்க நிலை வருவதும் கணிவுடைய வெளிப்பாடுதான். கணிவு என்பது இவ்வுலகில் அத்தியாவசியமான விசயமாக இன்றைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது.

ஏற்றுக்கொள்ளுதல் என்பதை பொருந்திக் கொள்ளுதல் (Adapted) என்றும் சொல்வார்கள். அடுத்தவர்களுக்கு நாம் செய்யக்கூடிய விசயம் கணிவு என்பது போல, நமக்கு நாமே செய்யக்கூடிய விசயம் இந்த பொருந்திக் கொள்ளுதல். இழப்பையும், வலியையும், சஞ்சலங்களையும் பொருந்திக் கொள்ளுதல் என்பது நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய அதே நேரம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு தேவையான விசயமாகவும் இருக்கிறது. அதை செய்து மீண்டு வந்த நிறைய பேர் இன்று தன்னோடு சேர்த்து தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைத்திருக்கிறார்கள்.

பொருந்திக் கொள்ளுவதன் மூலம் வருத்தம் கோபமாக மாறாது. கோபம் வெறுப்பாக மாறாது. வெறுப்பு வன்மமாக மாறாது. சோகம் கூட வலியாக மாறாது. மாறாமல் இயல்பிலேயே நம் இழப்புகளை கையாள இந்த பொருந்திக் கொள்ளுதல் பண்பு பேருதவியாக இருக்கும். நமக்காக அத்தனை எதிர்மறையையும் பொருந்திக் கொண்டு, பிறருக்காக கணிவுள்ளத்தோடு நேர்மறையை மட்டும் பரிமாறினால் நிச்சயம் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும். ஒவ்வொருவரும் இதை தனக்கான வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்ளலாம். 

சிறுவயதில் இருந்து தன்னை விட கடினமான சூழலில் இருப்பவர்களை பார்த்து மனநிறைவு கொள்ள வேண்டுமென்று பயிற்றுவிக்கப்பட்ட கணிவான சமூகம் நம்முடையது. வக்கிரமான எத்தனையோ விசயங்கள் தினந்தோறும் தெரியவந்து கொண்டிருந்தாலும், கணிவான கோடானகோடி மனிதர்களோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் கூட சொல்லலாம். கணிவும், அன்புமே மனிதர்களின் இயற்கையான குணமும் கூட. யாரோவொருவருக்காவது நல்லவர்களாக இருக்கதான் நாம் முயற்சித்துக் கொண்டும் இருக்கிறோம். இங்கு அத்தனை நேர்மறையை அடைவதற்கும் ஏகப்பட்ட வழி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முன்பு நமக்கு நாம் செய்ய வேண்டிய நியாயம் நாம் மகிழ்ச்சியாய், நிறைவாய் உணர வேண்டுமென்ற எண்ணம் கொள்வது.

நிறைவாய் மனிதா! 

Monday, October 27, 2025

வாழ்ந்தென்ன!

~
யாரும் நிர்கதியான நிலையில் இல்லை. யாரும் சோகங்களையும், பாரங்களையும் சுமந்து கொண்டே வாழ்ந்து தீர வேண்டிய கட்டாயமில்லை. மயக்கத்திலாவது நீண்ட நேர உறக்கம் கிடைக்கும் உடலமைப்பில் தான் நாம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறோம். இங்கு இழப்பென்று நினைத்த எத்தனையோ வக்கிரங்களைக் கடந்தும் கோடான கோடி பேர் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்கள். 

நிஜத்தில் மீளாத்துயர் என்பது நம் இன்மை மட்டுமே. மரணத்திற்கு பின் நாம் இழக்கும் நம் சுயமும், சுற்றமுமே பேரிழப்பென்று புரிய நிறைய இழப்புகளுக்குப் பழக வேண்டியுள்ளது. அதற்குள் மரணத்தின் மீதான பயமும், தயக்கமும் உருவாகிவிடும். வலிகளென்று இயற்கை நமக்குத் தந்துள்ள மன, உடல் வலிகளிலிருந்து மீள இடைவெளிக்கு ஒவ்வொருவர் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்வது நல்லது.

சினிமா, பாடல், புத்தகம், உணவு, கடவுள் என்று எந்த விதமான இளைப்பாறுதல்களை வேண்டுமானாலும் பற்றிக் கொண்டு நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்வதைத் தவிற வேறு வழி எனக்கு தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்பவர்களுக்குப் பின்னே, தனக்கு நெருக்கமான மனிதர்களின் வாழ்வை பற்றிய சிந்தனை இருந்தால் இங்கு நிறைய பேருக்கு அந்த எண்ணமே வராது.

உலகின் அத்தனை விசயங்களை விடவும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குக் கட்டாயமான ஒரு விசயம் இருக்கிறது. அதுதான் சுயம். தன்னைத் தவிற அத்தனை நியாய, அநியாயங்களையும் ஒதுக்கி வைத்து வாழ எத்தனிப்பது தான் இவ்வுலகிற்கு அவர்கள் செய்யக்கூடிய அடிப்படை அறமென்று நம்புகிறேன். நாமாய் சாகாமல் வாழ்ந்து விடுவதை விட மிகப்பெரிய வெற்றி எதுவுமில்லை.

துக்கம் தொண்டையை அடைக்கும் நிலையிலோ, துரோகத்தைத் தாண்ட முடியாத விளிம்பிலோ, வலியின் உச்சகட்ட மயக்கத்திலோ, உறவின் மீதான தீராத வருத்தத்திலோ, செழிப்பின் இழப்பிலோ, சாகத் துணியும் நிலையிலோ கூட நாமிருக்கலாம். நாம் இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கையில் இருந்தால், அத்தனையில் இருந்தும் மீண்டு இருந்துவிட முடியும்.

"இருந்து என்ன ஆகப் போகிறது, செத்துத் தொலையலாம்.
செத்து என்ன ஆகப் போகிறது, இருந்தே தொலையலாம் - வண்ணதாசன்"

வாழத்தான் வந்தோம்! ❣️

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...