~
உனக்கும் எனக்கும் என்ன இருக்கிறது. நான் வியக்க, ரசிக்க, மகிழ, நீ தந்தது எது. அன்பென்கிறாயா? இல்லை. இருப்பென்கிறாயா? இல்லை. வேறென்ன..
நீயறிந்த, அறியாத எத்தனையோ பேரதிசயங்கள் இங்கு நிகழ்ந்திருக்கும். நீ இந்த கருமை நிற நோட்டுப் புத்தகத்தில் வெண் மையினால் தீட்டப்பட்ட கவிதை. நீ அப்படித்தான் என்னுள் நிகழ்ந்தாய். உனக்கும் எனக்கும் ஒரே வீடு, ஒரே மழை, ஒரே குடை, ஒரே அன்பு.
நான் உலறிக் கொண்டிருக்கும் மிக நீண்ட புலம்பல் நீ. நான் அயர்ச்சியில் புன்னகைக்க நினைவில் ஓடும் முகம் நீ. நான் கடந்தே விடாத சிற்றோடை நீ. நான் அருந்தாத மது நீ. எனக்குப் பிடித்திருந்தும் கேட்காத பாடல் நீ.
உனக்கென்ன தெரியும். ஒரு திண்ணையில், உலகின் ஏதோவொரு மூலையில், சக மனிதர்கள் கண்ணில் படாத தொலைவில், கொசுக்கடியில் ஒருவனால் யோசிக்காமல் உனக்காக எதையாவது எழுதி விட முடியுமென்றால் அதை என்ன சொல்லி அழைப்பாயோ அதுவாகவே உன் வாழ்வில் நான் இருந்து கொள்கிறேன்.
நானென்ற இருளில் நீ சிறு திரியின் ஒளியாய் இருக்கிறாய். வாழ் நீ. என் பிரியத்தில், என் வழியில், என் மகிழ்வில், என்னுள்.
வாழ் நீ! 🤍

No comments:
Post a Comment