~
கிரிக்கெட் விளையாடுறத விட்டு ரொம்ப நாளாச்சு. கிரிக்கெட் பாக்குறத விட்டு நாளஞ்சி வருஷமாச்சு. புத்தகம், கவிதை பத்தின அறிவோ புரிதலோ கிடையாது. படிச்சதும் கிடையாது.
கவிதை பத்தி பேசுறத கேப்பேன். அதுவும் எப்பவாச்சும் தான். சினிமா எதோ ஓரளவுக்கு புரியும். உலக சினிமா பத்திலாம் ஒன்னுமே தெரியாது. தமிழ் சினிமா பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும், புடிக்கும்.
Sports, Art, Dance, Speech இப்டி எந்தவொரு Competition-லயும் School-ல அவ்வளவா கலந்துக்கிட்டதில்ல. College-ல அதுக்கு வாய்ப்பே இல்லாம போய்ருச்சு. அதுக்கான நேரமோ, ஊக்குவிப்போ இல்ல. அப்டியே எதுலயும் Interest இல்லாமலே போய்டுச்சு.
வேலைதான் பாப்பேன். ஆனா, எந்த வேலையா இருந்தாலும் பாப்பேன். அவ்ளோதான். சித்தாள், காடு கொத்துறதுல ஆரம்பிச்சி Electrician, Plumber, Driver-ன்னு நிறையா Part time வேலை பாத்துருக்கேன்.
நம்மல நம்மலே Dominate பண்ணிக்க கூடாதுன்னு மட்டும் எப்பவுமே நெனப்பேன். எல்லாருக்கும் அவங்க அவங்க வாழ்க்கைய பொறுத்துதான் Interest வரும். சிம்பிளா சொல்றேன். இங்க திறமை இல்லாதவங்க யாருமே இல்ல.
நான் நான்தான். என்னைய யார் கூடயும் நான் Compare பண்ணிக்க போறதில்ல. எந்த சூழ்நிலைலயும் நம்பிக்கையையும், தைரியத்தையும் விட மாட்டேன். அவ்ளோதாங்க. ஜாலியா இருப்போம்..!
#BE_CONFIDENT #Be_Positive ♥✨
~
எல்லா சூழ்நிலைய கையாளுறதுக்கும் அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலைல இருந்து மீண்டு வர்ரதுக்கும் கண்டிப்பா வேறு விதமான நம்ம மனச நிதானப்படுத்துற ஏதோவொரு பிடிமானம் தேவைப்படும்.
சிலருக்கு வாழ்றதுக்கான காரணமாவே குழந்தைங்கதான் இருப்பாங்க. சிலருக்கு அவங்களோட கனவு, சிலருக்கு படிப்பு, ஆசைன்னு ஏதோவொரு பிடிமானத்துல தான் நாட்கள் நகர்ந்துட்டிருக்கும்.
வாழ்நாளுக்கான காரணத்துல நம்மலோட கருத்துக்கும், எண்ணத்துக்கும் நேரடியான இடம் கண்டிப்பா தேவைப்படும். அப்படியான இடத்துல நமக்கு புடிச்ச விசயங்கள பொருத்தி அதுக்காக வாழ்ந்து முடிஞ்ச அளவு அத கொண்டாடிட்டு போயிருவோம்.
சொல்லப் போனா வாழ்க்கைல எல்லாமே சில்லுக்கருப்பட்டி படத்துல வர்ர Cornetto ஐஸ்கிரீம் கதைதான். எதாவதொரு நல்ல நாளுக்காக காத்திருந்துதான் இங்க ஒவ்வொரு நாளையுமே கடந்துரோம். அந்த கடைசி உள்ள சாக்லேட் பிட்தான் நம்ம சந்தோஷம். கண்டிப்பா கிடைக்கும்.
எல்லாருக்கும் சந்தோஷத்த குடுக்க ஒருநாள் வரும்...❣️
உள்ளச் செழிப்பு...♥
கைவசம் எதுவுமில்லாம இருக்கும் போது கூட தன்னைத் தானே ராஜாவா மெச்சிக்கிறதுக்கு மனச பக்குவப்படுத்திக்கனும்.
எல்லாமே பூஜ்ஜியத்துல இருந்துதான் ஆரம்பிக்கும். இங்க ஒவ்வொருத்தரோட வாழ்க்கை வடிவமைப்பும் வெவ்வேற மாதிரிதான் இருக்கும். யாரோடையும் ஒப்பிட்டு பாத்துக்க தேவையில்ல.
நாம நமக்கு சரின்னு தோனுறத செய்வோம். எதுவுமில்லாத நிலைலயும் நம்மல நாமலே கொண்டாடிப்போம். நாம மகிழ்ச்சியா இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.
தைரியமா சொல்லனும். எங்கிட்ட எதுமில்லாத நிலைலயும் நிதானத்த இழக்காம எல்லா விசயத்தையும் கையாள முடியும்ன்னு. அதான் சொத்து.
நம்மலத் தாண்டி உள்ள இருக்குற ஆழ்மனச சந்தோஷமா வச்சிருந்தாலே போதும். சலிக்க சலிக்க வாழ்ந்து தீர்க்கலாம்..!
#Happiness...♥✨
~
இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான Bad Story இருக்கும். ஒரு நேரத்துல அத Personal-ஆ உங்ககிட்ட Share பண்ணீருக்கலாம், அழுதுருக்கலாம்.
அது உங்களுக்கு தெரியும். அதுக்காக நீங்க அவங்களுக்கு Close-ன்னு காட்டிக்க அந்த கஷ்டத்தையே திரும்ப திரும்ப சொல்லி காட்டி Advice பண்ணாம இருக்கலாம்.
ஒன்னு கஷ்டத்துல இருந்து மீட்டுக் கொண்டு வர முயற்சி பண்ணுங்க. இல்லைன்னா அந்த கஷ்டத்த சொல்லி காட்டாம இருங்க.
#happinessisachoice...♥️💫
~
அழ வைக்கிறது ஈசி..!! ♥
மனசுக்கு நெருக்கமான அல்லது ரொம்ப குற்றவுணர்வா நினைக்கிற, மறக்க முடியாம தவிக்கிற, மறக்க நினைச்சி நினைச்சி சோர்ந்து போன ஒரு விசயத்த நம்மகிட்ட நேரடியா சொல்லும் போது, "நீ அவன்தான"ன்னு அடையாளப் படுத்தப்படும் போது நம்மள அறியாமலே கலங்கிர்ரோம்.
நா ரொம்ப Harsh Type. அவ்ளோ சீக்கிரம் அழ மாட்டேன். அழக் கூடாதுன்னு நினைப்பேன். யார் அழுதாலும் புடிக்காது. எனக்கும் புடிக்காத, நா திரும்பவும் பாக்கக் கூடாதுன்னு நினைக்கிற எத்தனையோ சூழ்நிலைகளை கடந்து வந்துருக்கேன்.
நிறையா பேர் சொல்லி கேள்விப் பட்ருக்கேன். எங்க அண்ணனே சொல்லீருக்கான். நீ யார சந்தோஷப்படுத்த நினைக்கிறியோ, யார் அழவே கூடாதுன்னு ஆசப்பட்றியோ அவங்கதான் உன்ன கஷ்டப்படுத்துவாங்க.
இது நூறு சதவீத உண்மை. நா என்ன பண்ணேன், ஏன் பண்ணேன் எல்லாமே எனக்கு மட்டுந்தான் தெரியும். நம்ம முழுக்க முழுக்க பொய்ன்னு சொல்றவங்க கிட்ட எப்டி நம்ம புரிய வைக்க முடியும். அப்டி புரிய வச்சி மட்டும் என்ன பிரயோஜனம்ன்னு தோனும்.
யாரையும் வெறுத்துற கூடாது. எல்லாரையும் ஏத்துக்கனும்ன்னு தான் பழகிருக்கேன். ஆனா, போற போக்கப் பாத்தா நிறையா பேர வெறுக்குற நிலைக்கு தள்ளப்பட்ருவேன் போல.
சிம்பிளா சொல்றேன்..!
ஒருத்தன் இருக்கான்னா அவனோட இன்றைய வாழ்க்கைய மட்டும் உங்களால முடிஞ்சா Celebrate பண்ணுங்க. முடியலைன்னா வேணாம். எத்தனையோ நாளைக்கு முன்னாடி அவன் தெரிஞ்சோ, தெரியாமலோ செஞ்ச ஒரு விசயத்த வச்சி யாரையும் Identity பண்ணாதீங்க.
இது எப்டின்னா கிட்டத்தட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைய கடந்து கொஞ்சம் வெளிய வர்ரதுக்காக முயற்சி பண்ணிட்டிருக்குற ஒருத்தன, திரும்பவும் அதே மனநிலைக்குள்ள போய் விட்டுப் போன "Guilty conscious" லயே இருந்து வாழ வழி செய்ற மாதிரி.
வெறும் வார்த்தைன்னு நினைச்சி பேசிட்டு போறது ஒருத்தர எந்தளவு மனசளவுல பாதிக்கும்ன்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் தெரியும். நல்லா பேசுவோம், விவாதிப்போம்ன்னு ஒருத்தரோட மன அழுத்தத்த தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறதுதான் வன்மம்.
பேச்சும், வார்த்தையும் மிகப்பெரிய ஆயுதங்கள். அதால ஒருத்தன வாழ வைக்கவும் முடியும். கல்நெஞ்சக்காரனையும் அழ வைக்கவும் முடியும். முடிஞ்சளவு யாரையும் கலங்க வைக்காம, யார்ட்டயும் வெறுப்ப சம்பாதிக்காம வாழ்ந்துட்டு போய்றனும்.
முடிஞ்சா வாழ வைங்க. முடியலைன்னா வாழ விடுங்க. வழிமறிச்சி குற்றவுணர்வுலயே கிடந்து மக்கிப் போக வச்சிராதீங்க..!
#liveyourbestlife...♥✨
~
விவரம் தெரிந்ததில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு உழைப்பு கிட்டத்தட்ட பழக்கமான ஒன்று. பணம் என்பது சேமிக்க அல்லது செலவழிக்க. அவ்வளவுதான். அந்த பணத்தைத் தாண்டி வேறில்லை என்பவர்கள் மேல் எனக்கு துளி மரியாதை கூட கிடையாது.
அதற்காக பணத்தின் மேல் பிரியம் இல்லை என்று யாரும் சொல்லி விட முடியாது. கண்டிப்பாக பணம் தேவை. அத்தியாவசியம். ஆனால், இதனைத் தாண்டி அதைக் கொண்டாட வேறெந்த காரணமுமில்லை. நான் நிச்சயமாக பணம் நிம்மதி தராது என்று சொல்ல மாட்டேன்.
பணமும் ஓர் தைரியம். எனக்குத் தெரியும் "Money is Not A Happiness" என்பதெல்லாம் முட்டாள்தனமான வாக்கியம்தான். அதை வைத்து மட்டுமே எல்லாமும் சாத்தியமென்று அதைக் கொண்டாடுவதுதான் கேவலம். பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு அயோக்கியனை உயர்த்திப் பேசவோ, பணம் இல்லை என்பதற்காக தப்பே செய்யாதவனை அடிக்கவோ எனக்கு மனமொப்பாது.
எல்லா நடுத்தர குடும்பத்து இளைஞனுக்கும் ஆசைகள் இருக்கும். வெறுமனே எல்லாவற்றையும் மூடி மறைத்து வாழ்ந்து விட்டு போகிற அளவுக்கு முட்டாளாய் இருக்க அவசியமில்லை. உனக்கென்ன தேவையோ, பிரியமோ அதைக் கொஞ்சமாவது செய். முயற்சித்த மனநிறைவாவது இருக்கும்.
என்னைப் பொருத்தவரை கௌரவம், அந்தஸ்து பார்ப்பது என்பது ஜாதி மத பாகுபாட்டை விட மிகக் கேவலமான விசயம். என்னால் செய்ய முடிவதை யார் உதவியும் இல்லாமல் நீ செய்து விட்டாய் என்றால் மட்டுமே நீ அதில் பெரியவன். அன்றி பணம் அந்த தகுதியை உனக்குத் தந்து விடாது.
எல்லோரிடமும் பணம் வரும். சிலரை பணம் கொண்டாடும். சிலர் பணத்தைக் கொண்டாடுவார்கள். அவரவர் விருப்பம் அது. ஆனால், உங்களின் கஞ்சி போட்ட சட்டைகளின் நடுவே கடந்து போகும் ஓர் அழுக்குச் சட்டையின் உழைப்பை மட்டும் எள்ளி நகையாடாதீர்கள். அது அநியாயம்
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெறுமனே பணத்தை வைத்து ஒரு மயிரும் புடுங்க முடியாது..!
#Live_Your_Best_Life...♥
~
எனக்குத் தெரிஞ்சி நா தனியா இருக்கும் போது கத்துக்கிட்ட விசயங்கள்தான் எனக்குள்ள ஒரு பாசிட்டிவிட்டிய உருவாக்கிருக்கு. அந்த வகையில நானா விரும்பி ஏத்துக்கிட்ட தனிமை எனக்கு சொர்க்கம் தான். அதுக்கு முன்னாடி வரைக்கும் நா ஒரு நெகட்டிவ்வான ஆளுதான்.
எப்பவும் பொலம்புவேன், பிரச்சனையே இல்லாம அழுவேன், காரணமே இல்லாம கோபப்படுவேன். அக்கா கல்யாணம் முடிஞ்ச நேரமா இருக்கட்டும். கொரோனா லாக்டவுன்ல கடைசி நேரமா இருக்கட்டும். நா தனியா கத்துக்கிட்ட நேரங்கள்ல இது ரெண்டும் ரொம்ப முக்கியமானது.
ஒரு சின்ன சம்பவம் சொல்றேன். ஒருநாள் நைட் ஒரு மணி இருக்கும். தனியா இருக்க ஆரம்பிச்ச ஆரம்ப நேரம். கரெண்ட் இல்ல. போன், பவர் பேங்க், லேப்டாப்ன்னு எதுலயுமே சார்ஜ் இல்ல. வெளியில இடி, மின்னலோட மழை வேற. மெழுவர்த்தியும் முடிய போகுது.
டார்ச் லைட்ட ரொம்ப பயமா இருந்தா யூஸ் பண்ணிக்கலாம்ன்னு பக்கத்துலயே வச்சிருந்தேன். அதுவும் ஆஃப் ஆகிட்டா என்ன பண்றதுன்னு பயம். எந்த பக்கம் திரும்பிப் படுத்தாலும் அந்த மின்னலோட வெளிச்சம் பளீர்ன்னு அடிக்கிது. இடி வேற..!!
அப்பதான் பைத்தியம் புடிச்சது. வேட்டிய மடிச்சி கட்டிட்டு இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு வீட்டு மாடிக்குப் போய்ட்டேன். சட்டைலாம் இல்ல. நைட் ரெண்டு மணி அப்டியே நின்னுட்டேன். ஆடுறேன், பாடுறேன், அழுறேன், பயத்துல ஒலருரேன். மழையில நல்லா நனைஞ்சிட்டேன். ஆனா, தெளிஞ்சிட்டேன்..!
அதுக்கப்றம் எவ்ளோ இடி மழையா இருந்தாலும் சகிச்சிட்டு தூங்கிருவேன். நம்ம வருத்தத்தையோ, சோகத்தையோ, பயத்தை இல்ல எந்தவொரு எதிர்மறையான எண்ணங்களையுமே வெளிக்காட்ட ஆளில்லைன்னா ஒரு அளவுதான் தாங்க முடியும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்..!!
அதுக்கப்றம் கஷ்டம் பிரச்சனையை எல்லாம் அமைதியாவே கடந்து போக கத்துக்கிட்டேன். நான் தனியா இருந்ததுக்கும், வீட்டோட இருந்ததுக்கும் இடையில உள்ள வித்தியாசத்த ரொம்ப சின்னதா சொல்லீர்லாம்.
அதுக்கு முன்னாடி வரைக்கும் நிறையா அழுதுருக்கேன். கை விட்டு எண்ணுற அளவுக்கு சிரிச்சிருக்கேன். ஆனா, அழ காரணமே இருக்காது. அதுக்கப்றம் நிறைய சிரிச்சிருக்கேன். கை விட்டு எண்ணுற அளவுதான் அழுதுருக்கேன். ஆனா, அழுறதுக்கு நிறையா காரணமிருக்கு..!!
நாம தேடி போய் கத்துக்கனும்ன்னு அவசியம் இல்லங்க. சூழ்நிலை, மனுஷங்கன்னு நம்மல சுத்தி இருக்குற எல்லாமே கத்துக் குடுக்கும். அவ்வப்போதைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நேர்மறையா, நிதானமா நம்மல நாம கையாலத் தெரிஞ்சிக்கிட்டாலே போதும். எதுவுமே இல்லைன்னாலும் ஜாலியா வாழலாம்..!!
#ராஜா_மாதிரி...💕💥
நல்லவேளை..!!
நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
புரிந்திருந்தால் என்னைத் திருத்தி விடலாமென்று நினைத்திருக்க மாட்டீர்கள். நான் திருந்த வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள்..!!
சர்வ நிச்சயமாக நான் திருந்தவே மாட்டேனென்று முடிவெடுத்திருப்பீர்கள். அவன் ஏன் திருந்த வேண்டும் என்று எனக்காக கேள்வி கேட்டிருப்பீர்கள்..!!
திருந்தும் அளவுக்கு நான் கசடாகவில்லை என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். திருத்தும் அளவுக்கு நீங்கள் வெளுக்கவில்லை என்றும் புரிந்து கொண்டிருப்பீர்கள்..!!
நான் அயோக்கியன் என்று தெரிந்தும் என் மீதான நம்பிக்கையை வலிமை குறையாமல் வைத்திருக்க முயல மாட்டீர்கள்..!!
நான் யோக்கியன் என்று தோன்றினாலும் உங்கள் மீதான அபிப்ராயங்களை என்னிடம் கொட்டித் தீர்க்க விரும்பவே மாட்டீர்கள்..!!
விருப்பு வெறுப்புகளைத் தாண்டி எனக்கென்று தனி ஆசைகள் இருக்குமென்று தெரிந்து கொள்ளாமலே நான் சுயநலவாதியென்று முடி சூட்டியிருக்க மாட்டீர்கள்..!!
ஏதொவொரு கட்டாயத்தில் இப்போதைக்கு நான் நின்று கொண்டிருக்கும் பாதை நிர்கதியாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இது நல்லவேளைதான்..!!
ஏனென்றால், நல்லவேளை..!!
நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்திருந்தால், நீங்களும் காதலித்திருப்பீர்கள்..!!
பிறகு யோசித்து ஆசை என்று சிலவற்றிற்கு பெயர் வைத்து கொஞ்சி அழைக்கத் துவங்கினான்.
ஒரு மையிருட்டான நேரத்தில் ஆசீர்வதிக்கும் படி எரியத் துவங்கும் ஓர் சிமிளி விளக்கு.
பேதையொருவனுக்கு அடைமழையில் குடை நீட்டி துணைக் கொடுக்கும் யாரோவொருவரின் கை.
முழுதாய் காற்றடிக்க முழு ஜன்னலையும் விலக்கிக் கொள்ள அனுமதிக்கும் பின்சீட்டுக்காரர்.
மீதமுள்ள காசுக்கு சில்லரை இல்லை என்காமல் புளிப்பு மிட்டாய் கொடுக்கும் மளிகைக் கடைக்காரர்.
ஜன்னல் சீட்டில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்து கைப்பிடித்து பயணிக்கும் கணவன்மார்கள்.
பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து தண்ணீர் தெளித்து, கோலம் போட்டுக் கொடுக்கும் அத்தை.
அம்மாவிற்குத் தெரியாமல் சீடா உருண்டை வாங்கிக் கொடுக்கும் பாட்டி.!
மேல்வீட்டில் தனியாய் இருக்கும் பையனுக்கும் சேர்த்து சமைக்கும் கீழ்வீட்டு அக்கா..
தேநீர் குடித்து விட்டு பணம் கொடுக்க விடாமல் தடுத்து தன் கணக்கில் எழுதி விட்டு வரும் நண்பன்.
வஞ்சகம், சூழ்ச்சியில்லாது வன்மத்தையும் நேருக்கு நேர் கோபமாய்க் காட்டி விடும் எதிரி.
தலைவலிக்காரனுக்கு பத்து ரூபாய் கொடுத்து பனியாரம் வாங்கி வரச் சொல்லும் ஆசிரியர்.
சம்பளத்தைத் தாண்டி இவன் பிறந்தநாளை விரும்பி தன் செலவில் கொண்டாட விரும்பும் முதலாளி.
தான் உழைத்து வாங்கிய வண்டியை தம்பிக்கு பிடித்த வண்ணத்தில் வாங்கும் அண்ணன்.
கணவன், குழந்தைத் துணிகளோடு சேர்த்து மைத்துனனின் துணியையும் துவைத்துப் போடும் அண்ணி.
யாரென்று விசாரிக்கப் போகையில் என் பிள்ளை என்று அறிமுகப் படுத்தும் நண்பனின் அம்மா.
உன் தலையணையில் உன் காதைக் கூசித் தொந்தரவு செய்து கொண்டே தூங்கும் பூனை.
நீயன்றி எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக கடந்து போகக் கூடிய மனம் கொண்ட ஒருத்தி.
வாழ்தலினிது! ♥
~
ஒன்னுமே இல்லாம இருந்தப்பவும் ஒருத்தர் நம்ம கூட இருந்துருப்பாங்க, எல்லாமே இருந்தாலும் அப்பவும் அதே இயல்போட நம்ம கூடவே இருப்பாங்க. ஒருத்தரோ, ஒரு குறிப்பிட்ட கூட்டமோ!
ஏதோவொரு சாரர் மட்டும் நம்மல எப்பவுமே ஒரே அளவீட்டோட, அதே அன்போட, அதே உரிமையோட கையாளுவாங்க. காலையில நீ இப்டி பண்ணுனது புடிக்கலன்னு சொல்லிட்டு, மதியம் கூப்பிட்டு சாப்டியான்னு கேப்பாங்க.
ஏன் இவங்களுக்குலாம் நாம சலிச்சே போக மாட்டோமான்னு தோனும். ஒருசில நேரம் இவங்க நடிக்கிறாங்க, நிஜமாவே நாம உணர்ர, இவங்க கொடுக்குற மொத்த அன்பும் நமக்கானது இல்லன்னு தோனும்.
உண்மையில அவங்களுக்கு நாம அப்டியே புடிச்சி போய்ட்டோம். அவங்க இன்னைக்கு, நாளைக்கு, நேத்துன்னு இல்லாம மொத்தமா நம்மல இவன் இப்டிதான்னு ஏத்துக்கிட்டாங்க. இப்டி இல்லைன்னாலும் அவன் நம்மலுடயதுதான்னு உணர்ராங்க.
இந்த மாதிரியான மனிதர்களாலதான் இங்க எல்லா சூழ்நிலைய தாண்டியும் மனித ஜீவிகள் வாழுது. நாம வளந்தாலும், எத இழந்தாலும் அவங்களுக்கு ஒரு எல்லையற்ற பிரியத்திற்குரிய நாய்க்குட்டியா தெரிவோம்.
பரிசுத்தமான அன்பெனப்படுவது அழுக்காகாமல் இருப்பதல்ல. துயரில் கசடு படியும் மனதை தூய்மைப்படுத்தி மெருகேற்றுவது.!❣️
_________________________________________













No comments:
Post a Comment