~
இன்னக்கி வரைக்கும் நடந்துட்டிருக்குற ஒடுக்குமுறையும், ஆணவக் கொலைகளுக்கும் மத்தியில இதெல்லாம் நடக்குதா இல்லையான்னு கூட தெரியாம இருக்குற சாமானிய மக்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சனைகள வெளிக் கொண்டு வந்து சொல்லனும். கர்ணன் ஜெயிச்சிட்டான்.
கர்ணன் - ஊர்
"உன் கோபத்துலதான்யா இந்த ஊரே முழிச்சிருக்கு"
பிரச்சனைகள தாண்டி அத்தியாவசிய உரிமைகளும் பறிக்கப்படும் போதுதான் மொத்த கோபமும் ஒருத்தனுக்கு முழுமையா வெளிப்படும். கர்ணன் ஒரு ஒடுக்கப்பட்ட அத்தியாவசிய உரிமைகள் கிடைக்கப்பெறாத ஊரோட மீட்பாளி.
சாதி - உரிமை - கோபம்
"அவனுவ நாம பஸ்ஸ ஒடச்சதுக்காக அடிக்கல. நாம நிமிந்து பாத்துட்டோம்ன்னு அடிச்சாய்ங்க"
இந்த மாதிரியான கொடுமைகள கடந்துதான் பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்துருக்காங்க, வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு மாரி செல்வராஜ் காட்டீருக்காரு. இதெல்லாம் நிஜமாவே நடக்குமான்னு கேட்டா நடந்துருக்கு. நடந்துட்டும் இருக்கு.
ஒடுக்கப்படும் எல்லா சமூகத்தினருக்கும் இந்த கர்ணனோட கோபம் ஒரு கட்டாயமாகிப் போயிருது. அந்த கோபத்தோட வெளிப்பாடுலதான் அந்த ஊரே வெளிய தெரிய வருது. அந்த ஊரோட பிரச்சனை, மக்கள்ன்னு எல்லாமே.
பரியேறும் பெருமாள்ல வர்ர மாதிரி கேள்வி கேக்குற பரியன் உருவாக தொடக்கப் புள்ளியாவே, தைரியமா அதுக்கு முன்னாடி நடந்த கொடுமைகள அடிச்சிக் கேட்ட கர்ணன்தான் இருப்பான்.
"உங்களுக்கு எங்க பிரச்சனை என்ன, தேவை என்னங்குறது முக்கியமில்ல. உங்க முன்னாடி எப்புடி நிக்கனும்ங்குறது தான் முக்கியம்"
துரியோதனன் - அபிமன்யு
பேர வச்சி சாதிய கண்டுபிடிக்க முடியும்ன்னே இங்க பல பேருக்கு தெரியாது. இதுல இன்னமும் ஏன் மாடசாமி, முனியசாமின்னு பேர் வக்கிறன்னு கேள்வி. ஏன்னா பேர்லதான முதல் அடியே. மொதல்ல அத மாத்தனும்.
"மாடசாமி மவன் பேரு துரியோதனன்னு இருந்தா ஒனக்கு என்னலே பண்ணுது"
கர்ணன் - திரௌபதி
கர்ணனோட காதல்ல பெரிய குசும்புகளையும், பரிசுகளையும் பாக்க முடியாது. கர்ணனுக்கு கோபம் வரும். காதலிக்கத் தெரியாது. அவனுக்கு கட்டிப் பிடிக்கத் தெரியும், முத்தம் குடுக்கத் தெரியும். இதுவும் ஒரு எதார்த்தம்தான. திரௌபதி அலட்டிக் கொள்ளாத பேரழகி.
கர்ணன் - போலீஸ்
அந்த போலீஸ் கேரக்டர்ல "நட்டி"ய பாக்குறப்ப நமக்கே கோபம் வரும். அந்த மாதிரியான முகம். உயிர் போயிரும்ங்குற கடைசி நிமிஷத்துல கூட திமிர் குறையாம ஊரக் கூட்டி கால்ல விழுன்னு சொல்றதெல்லாம் எவ்வளவு வெறி அவங்களுக்குள்ள இருக்குன்னு காட்டீருப்பாரு.
கர்ணன் - மாரி செல்வராஜ்
இந்த மாதிரியான பிரச்சனையான, பல்வேறு சர்ச்சைக்குரிய கதைக்களத்த நிகழ்கால மக்களுக்கு புரியிற வகையில மூணு மணி நேர திரைப்படத்துல சொல்ல முயற்சி செய்றதுக்கே மாரி செல்வராஜ் அண்ணன கொண்டாடலாம்.
வெறும் சினிமா, பொழுதுபோக்குங்குறத தாண்டி திரைப்படம்ங்குறது மிகப்பெரிய ஆயுதம். மிஷ்கின் சொன்ன மாதிரி கருத்தில்லாம கதையே எழுத முடியாது. ஒரு திரைப்படம்ன்னு எடுத்தா எதாவது ஒரேயொரு கருத்தாவது இருக்கும், இருக்கனும்.
ஒரு முக்கியமான பேச வேண்டிய கருத்தையே கதைக்களமா வச்சி அஅதன் மூலமா சாதிய வன்முறையையும், கொடுமையையும் அதனால பாதிக்கப்படுற மக்களுடைய வெளிப்பாட்டையும் காட்டுறாரு மாரி செல்வராஜ்.
மாரி செல்வராஜோ, இல்ல அவர் காட்டுன பரியனோ, கர்ணனோ, இவங்களோட கோபமோ எல்லாத்துக்கும் ஒரே காரணம் ஒடுக்குமுறைதான். அது தெளிவாகனும்ன்னா ஒவ்வொருத்தரும் மாறனும். கர்ணனோட கோபம் காலத்தின் கட்டாயம்.
கர்ணன் - நான்
ஏன் இவ்ளோ கோபம். பரியனோட அகிம்சைய கர்ணன்கிட்ட காணலயேன்னு கேள்வி கேட்டா அந்த கேள்வியே தேவையில்லாதது. பரியன் படித்துக் கேட்பவன். கர்ணன் அடித்துக் கேட்பவன். எல்லா ஊர்லயும் பரியனும் இருக்கனும். கர்ணனும் இருக்கனும். அதான் ஊர்.
கேள்வி கேட்டாதான் மாறும்ன்னா கேள்வி கேக்குற கட்டாயத்துக்கு தள்ளப்பட்றோம். திருப்பி அடிச்சாதான் மாறும்ன்னா அடிக்கிற அளவுக்கு வலிக்கு உள்ளாக்கப் படுறோம். கோபத்துக்கு தள்ளப்படுறோம்.
ஒருத்தன் அடிச்சிட்டே இருக்குறான்னா எப்பவுமே நம்மலே சமாதானப்படுத்திட்டு இருக்க முடியுமா, முடியாதுல. ஒரு நேரம் இல்லைன்னா ஒரு நேரம் எல்லாருமே திரும்பிக் கோபப்படுவோம். திட்றவன திருப்பிக் கேப்போம், அடிக்கிற கைய உடைக்கப் போவோம்.
எல்லா சூழ்நிலையிலயுமே நா ஒருத்தன் மட்டும் புத்தராவோ, கர்த்தராவோ வாழ்ந்துட்டு செத்துப் போயிற முடியாது. இனிமே நீ அடிச்சா நா திருப்பி அடிப்பேன். வேணும்ன்னா நீ சமாதானப்படுத்து. என் பொறுமை எல்லாம் எல்லைக்கோட்ட தாண்டி ரொம்ப நாளாச்சு!
"நாங்க நிமிர்ந்து பாத்துட்டோம். இன்னொருவாட்டி குணிய முடியாது"
கர்ண மகாராஜா!


No comments:
Post a Comment