Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Monday, January 24, 2022

தனிக்கதை

 


~

தனிப்பட்ட ஒரு கதை. ஏதோவொரு மனக்குழப்பம். கிட்டத்தட்ட அழுகை வரை பயணித்து விட்டு இறுதி மூச்சில் மூச்சடக்கி திரும்பி வரும் மன உளைச்சல். அமைதியற்ற நிலை. காது கேட்காத அளவுக்கு தலைக்குள் இரைச்சல்.


நம்மால் நிதானிக்க முடியாத அளவு ஏதாவதொரு சம்பவம் அரங்கேறும். நம் மீதான ஏதொவொரு முடிவு நம் அனுமதியின்றி நிகழ்ந்து விடும். நம் கண்டிப்பான தேவை ஒரு கட்டத்தில் நம் கையை விட்டு வீசியெறியப்படும். 


நிராயுதபாணியாக்கி தனித்து விடப்பட்ட ஒரு மனித சாயலையொத்த மிருகமாய் காணப்படுவோம். குற்றவுணர்வா, குழப்பமா என்றேயறியாத மந்தமான நிலைக்குள் நிறுத்தப்படுவோம்.


இப்போதெல்லாம் நண்பனும், நண்பியுமென்று என்னால் சுட்டிக் காட்டப்படுபவர்கள் கூட எனக்காக வருத்தம் தர முடியாத அளவுக்கு நான் அயோக்கியப் பட்டங்களை சூட்டிக் கொண்டேன்.


அது ஏனோ சலிப்புக்குள்ளாகி விட்டது. முன்பு தனியே, தன்னந்தனியே இருக்கப் பிடிப்பதேயில்லை என்று பேசத் துவங்கினேன். பிப்னே சாப்பிடுவது, தூங்குவதென்று பேசுவதையும் அத்தியாவசியமாக்கிகக் கொண்டேன்.


நிச்சயம் ஏதோவொன்றை ஆழ்மனதில் போட்டு பிசைத்து வதைத்து தன்னைத் தானே வருத்தத்திற்கு ஆளாக்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு வலி சொல்லி கதற வெட்கமாயிருக்கும். அதை பலமின்மையாக காட்ட விருப்பமிருக்காது.


நானென்ற மறுகணம் திமிரி நிற்கும் எவனும் நாமெனும் போது சற்றே நிதானிக்கிறான். நான் அழுவேன், அடிப்பேன், பேசுவேன், சிரிப்பேன். நாமாகி இருக்கும் போது நான் கொஞ்சம் யோசிக்கிறேன் மனிதா. ஏனென்றால் அதுதான் நான்.!


எனக்கு மனிதர்கள் எவ்வளவு முக்கியம் என்று என் முந்தைய பக்கங்களை எச்சில் படாமல் திருப்பிப் பாருங்கள். நான் இறுக்கி வைத்திருக்கும் வலி அதை நான் இப்போதெல்லாம் சொல்வதே இல்லை. அத்தனையும் நான் செய்த பிழையின் பலன்தான்.


உன்னைத் தாண்டியும் நான் இருப்பேனென்று இப்போதெல்லாம் யாரிடமும் சொல்ல முடிவதில்லை. இழப்பு, பிரிவெல்லாம் கசக்கிறது. நினைவுகளும், குரல்களும் வலிக்கிறது. எப்படி எனக்கிதுவென்று சொன்னாலும் புரியாது.!


நானென்ற பெருந்தீவு அத்தனை பேரிடரும் கடந்து புல் கூட இல்லாத வறண்ட மணல் திட்டாகி நான் மட்டும் தனியே திரிகிறேன். அவ்வப்போது கேட்கும் மனித குரல்களை இசையாக்கி ரசிக்கிறேனே அன்றி நான் பாடுவதேயில்லை..!


எல்லா பிடிமானங்களும் தளர்த்தப்பட்ட பின் கிடைக்கும் சுதந்திரம் வன்முறையானது.! ❣️

எதிராய்!


 

~

புனிதத்தை அகற்றி விடுங்கள்.

மலர்களை அள்ளிக் கொள்ளுங்கள். 

மாலை செய்து நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். 

கோட் அணிந்து கால் மேல் கால் போட்டு நிமிர்ந்து அமருங்கள். 

அநியாயம் பேசுங்கள். 

ஆத்திரமடையச் செய்யுங்கள்.


இரக்கம் காட்டி மன்னிக்காதிருங்கள்.

தகவல்களை உங்களிடத்திலேயே பரிமாறி நேர்மை காணுங்கள்.

தூக்கியெறியப்பட்ட மனிதர்களை கைப்பிடித்துக் கொள்ளுங்கள்.

கை விட்டு செல்பவர்களை காதலிக்காதிருங்கள்.

கதவடைக்காமல் விலகியிருங்கள்.


கடற்கரை மணலில் குடைந்து, இடித்து விளையாட ஆசைப்படுங்கள்.

ஒரு தட்டு சோற்றில் பசியாறி விடுங்கள்.

கருப்புச் சட்டையை ஒதுக்காதிருங்கள்.

கைலியை கைத்துண்டாய் பயன்படுத்துங்கள்.


கண் பார்த்து கோபம் பேசுங்கள்.

சுட்டிக் காட்டி விடாத நகைச்சுவை செய்யுங்கள்.

பிடித்தமானவளுக்காக அவளிடமே மன்றாடி நிள்ளுங்கள்.

மூச்சடைத்து ஆச்சரியப்படுமளவு வாழ்ந்து விடுங்கள்.

ஒரேயொரு ப்ளேடில் தலைகொலை செய்து கொள்ளுங்கள்.


வாழ்க்கை எளிமையானது ❣️

நானெனும் விலக்கு

 


~

நீ அறியா நான்!


எனக்கு இப்படியே இருக்க வேண்டும் போலிருக்கிறது. எந்தவொரு தொந்தரவின் பெயரையும் பெற்று விடாமல் இப்படியே. எனக்கு உண்மையைத் தெரியாது. நீ விரும்பும், விரும்பித் தொலைக்கும், நினைத்துக் கொண்டே வாழும் அளவுக்கு நியாயவாதி நான் கிடையாது. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. உனக்குப் புரியும் படி சொல்லப் போனால் நான் அக்மார்க் கேவலம்.


நீ தரும் காதலில் கால்வாசியைக் கூட எனக்குத் திரும்பத் தரத் தெரியாது. எனக்கும் எல்லாரையும் போல இதுவும் ஒருநாள் கடந்து போகும். இதுவரைக் கடந்து போன கொடூரங்களை விட சீக்கிரமாகக் கடந்து போக வேண்டும் இந்த தனிமை. கடந்து போனால் மீதமிருப்பது காலியிடமே.


ஒரு கணம் உன்னை விட்டு முழுதும் விலகி விட வேண்டும் என நினைக்கிறேன். அடுத்த கணமே உன்னை ஏதோவொன்று நியாபகப் படுத்துவதாய் உணர்கிறேன். நீ சொல்வதைப் போல் தொடக்கத்தில் நீ பார்த்ததிலிருந்து தலைகீழாக நான் மாறியிருக்கிறேன். நீ சொன்னப் பிறகுதான் எனக்கேத் தெரிகிறது.


என் கோபமெல்லாம் என் மீதுதான். கிட்டத்தட்ட திருந்தியிருக்கிறேன். இன்னும் நிறைய திருந்த வேண்டியிருக்கிறது. எனக்கென்று நீயிருக்க இங்கே என்னென்னவெல்லாம் எனக்கு இல்லாமல் போகுமோ, நீ இழக்க நேருமோ தெரியாது. என்னால் மேற்கொண்டு எதையும் இழக்க முடியாது. இதுவரை இழப்பைத் தவிற பெரிய இலாபமென்று எதையும் பெற்றதாய் நியாபகமில்லை.


இதுவரை நான் கேட்டு விட்ட வசை பாடல்களை விட இனிமையானவற்றை இனிமேல் கேட்க முடியாது. கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என் பொறுமை வெடித்து விட வெகு நேரமெடுக்காது. என்னால் உன்னிடம் "நான் வரமாட்டேன், உன் வாழ்க்கையைப் பார்" என்று சொல்ல முடியவில்லை. எந்த கணத்தில் என் குணம் மாறுமென்றுத் தெரியாது. 


உனக்கோ உன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கேக் கூட நான் நியாயமானவனாக இருந்ததில்லை. ஊருக்கேத் தெரியும் நான் எந்தளவு உருப்படாதவன் என்று. நீ விலகிச் சென்ற காலத்தினிடையில் எத்தனையோ நாடகங்கள் அரங்கேறியது. 


நான் கெஞ்சிக் கிடந்தக் காலம் மாறி இப்போது என் ஒற்றை வார்த்தைக்காக நீ காத்திருக்கும் அளவுக்கு உன் கோபமும், என் கர்வமும் தலைகீழாக மாறிப் போயிருக்கிறது. இன்று இந்த நிமிடம் நீ வேண்டுமென்று எழுதிக் கொண்டிருக்கிறேன். உனக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். 


நேற்றைய முகத்திரை எப்படியோ என்பதைக் கடந்து இன்றைய முகத்தை மட்டும் உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. காதலிக்க முடியுமா. இல்லை, வாழத்தான் முடியுமா. பக்குவமென்பது எல்லாவற்றையும் கடந்து வராது. அதன் பெயர் இறப்பு. நான் நாட்களை எண்ணி எண்ணிக் கொஞ்சம் சீக்கிரமாய் நகர்த்தத் துவங்கியிருப்பது அதனை நோக்கித்தான். 


நீ எந்தளவுக்கு இப்போது என்னை நேசிக்கிறாயோ, அதை விட நூறு மடங்கு அதிகமாக நான் நேசித்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். என் நெருக்கமானவர்களுக்குத் தெரியும். அதே அளவு நீயென்னை வெறுத்திருக்கிறாய் என்றும் தெரியும். இங்கே எல்லாமே சமமாக நிகழாமல் நான் உன்னை வெறுக்காமல் இருப்பதுதான் தவறாகிக் கிடக்கிறது போல.


உன்னைத் துரத்தி விடும் அளவுக்கு எனக்கு நல்ல மனம் கிடையாது. அதே போல் நான் நேசித்த ஒரே காரணத்தால் சற்று தள்ளியே நிற்கிறேன் உன் உண்மையானப் பிரியத்திலிருந்து. எனக்கு நீ நிம்மதியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். நான் உன்னை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கிறேனோ, அந்த அளவு நீயும் என் சுற்றத்தாரைப் போல் நிம்மதியாய் இருப்பாய்.


என் மீது நீ வைத்திருக்கும் பிரியங்கள் கண்டிப்பாக அழுக்காகி விடக் கூடாது. எனக்கு எவ்வளவு காலம் வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கென்று நான் நிலையாகி விட்டேன், நிலையாயிருப்பேன் என்று தெரியும் வரை நான் உன் மீதான பிரியத்தைக் காட்டிக் கொள்ளப் போவதில்லை. 


நான் உனக்காக நிறைய எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் உன்னிடம் ஒருநாள் தெரிய வைப்பேன். நீ என் பிரியத்திற்குரியவள், தேவதை, மகாராணி, காதலி, ஆதி. எனக்கென்று இருக்கும் ஒரேயொரு கடைசி நம்பிக்கை. விரும்பி வரும் உலகிலேயேப் பிடித்தவொரு விசயத்தை விட்டு விலகி நிற்கத் துவங்கும் போது என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வதை விட என் மனப்பக்குவம் பெரிதாக வளரவில்லை.


என்னால் உன்னை விட்டு விலகி புலம்பாமல், அழாமல், சந்தோமாய் இருக்க முடியுமாயென்று தெரியாது. உன் உள்ளார்ந்த நேசத்தை இப்போது மட்டும் உபயோகித்துத் தூக்கி வீச நான் தயாராயில்லை. இப்படியே இரு. காலங்கள் மாறும், மனங்களும் மாறும். மீண்டும் நான் கெஞ்சிக் கேட்கும் நிலை வந்தால் தட்டிச் செல்லாமல் தந்து விடு. 


இப்பொழுதும் சொல்கிறேன். நீ இந்தளவுக்குக் கொண்டாடும் அளவு நான் நல்லவனில்லை. உன் நிலைக்குக் கண்டிப்பாக உரியவனில்லை. உன் எதற்கும் நான் ஈடேயில்லை. உன் அருகாமைக்குக் கூட நான் அருகதை இல்லை. உன் நினைவில் இருக்கும் கேவலமான என்னை விட மகாக் கேவலமானவனாக நான் மாறி நாளாயிற்று. இப்போது அக்மார்க் அசுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். 

தயவுசெய்துத் தப்பித்துக் கொள்.


தூய்மையான அழுக்கு நான்.! 

மீரா

 


~

எதையோ எழுதச் சொல்கிறது மனது. இதுதான் என்று தீர்மானம் செய்வதற்குள் திசை மாறி விடுகிறது. நான் மகிழ்வாய் இருக்கிறேன். இல்லை, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். 


நான் தொந்தரவாய் நினைப்பர்களை விட்டு விலகி விடுகிறேன். இல்லை, அன்பின் வார்த்தைகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறேன். நான் என் வாழ்வைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். இல்லை, நாட்களை செலவு செய்து கொண்டிருக்கிறேன்.


என் ஒரு மணி நேர நடவடிக்கையே பல யோசனைகளுக்குள் ஆட்பட்டு விலகுகிறது. நான் செயலிழந்து போகாமல் ஆட என் கால்கள் முன்பைப் போல் இப்போது நிதானமாயில்லை போலும்.


நான் நிமிர்ந்து பார்த்த வானம் நெத்தி நோக்க மல்லாந்து படுத்து கிடக்கிறேன். நான் ஓய்வெடுக்கிறேனா, இல்லை அயர்ந்து விட்டேனா, என் வேலைதான் என்ன. என்னை நானே கேள்வி கேட்பதில் தான் எனக்கு எல்லா குழப்பமுமே என்று அவளை பார்த்துக் கேட்டேன்.


நான் நிஜமாகவே மகிழ்ச்சியாய் தான் இருக்கிறேனா, உனக்கு என்னை பிடிக்குமா மீரா என்றேன். "மியாவ்" என்றாள். அவள் தேவை இரண்டு மேரி பிஸ்கட், என் தேவை அந்த மியாவ். அன்பின் உயிர்களுக்கு இரண்டு கால்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று அவசியமா என்ன. இப்போது சொல்கிறேன். நான் மகிழ்வாய் இருக்கிறேன்...!


மீரா என்னும் காதல்...❣️

மதி

 



மதி! 


"ஏண்டா எப்ப பாத்தாலும் என்ட்டயே வம்பிழுக்குற.?"

"ஏன்னா, நீதான் எனக்கு தெரிஞ்ச ஒரே இழிச்சவாயி"ன்னு சொல்லிட்டு மிச்சமீதி இருந்த சோத்தையும் திண்ணுட்டு வந்துருவேன்.

வெளிய போனதுக்கப்பறம் என்ன திட்றாளான்னு ஒட்டுக் கேட்க சொன்னா

"விட்றீ, திண்ணுட்டுப் போறான்"ன்னு சொல்லுவா. ஒட்டுக் கேட்டவனுங்க கலாய்க்கிறதுக்குள்ள சமாளிச்சி எஸ்கேப் ஆகிறனும்.


மூணு பெஞ்ச், ரெண்டு ரோவ தாண்டி என்னயக் கூப்புட்டுத்தான் சார்ப்னர் வாங்குவா. பக்கத்துல இருக்குறவன் தண்ணியக் குடுத்தாலும், அந்த லீடரம்மா அட்டன்டென்ஸ் எடுக்க ஆபீஸ் ரூம் போன கேப்புல முடியலைன்னாலும் தம் கட்டி ஒரு லிட்டர் தண்ணியையும் குடிச்சிட்டு நான்தான் குடிச்சேங்குற அடையாளத்துக்கு மூடிய ஒழுங்கா மூடாமலே விட்டுட்டு வந்துருவேன்.


கிளாஸ்ஸுக்குள்ள வந்ததும் நேரா நா ஒக்காந்துருக்குற லாஸ்ட் பெஞ்சதான் பாப்பா. ஈரமே இல்லாத வாய மழுப்புற மாதிரி நடிக்கிறதுக்காகவேத் தொடப்பேன். நேரா வாட்டர் கேனுக்கு அவ கண்ணு போவ, ஒட்டு மொத்த 

11. M/C கிளாஸ்ஸுமே என்னப் பாத்து சிரிக்க அப்ரம் என்ன சூரபத்ர காளியம்மன் வந்து எறங்கிருவா. பேசமாட்டா. பாக்கமாட்டா. கொய்யால போர்ட விட்டுத் திரும்ப கூட மாட்டா.


இன்டர்வெல்ல நேரா வந்து என் பக்கத்துல இருக்குறவன்ட்ட "என் ரெக்கார்ட யாரோ நேத்து வாங்கிட்டுப் போனாங்க, அத எடுத்துத் தர சொல்லு"ன்னுவா. சாரின்னு சொல்லி ரெக்கார்ட குடுத்தா "ஹ்ம்"ன்னு சொல்லிப் புடுங்கிட்டுப் போய்ருவா. இண்டர்வெல்லுக்கு அடுத்த ரெண்டு மணி நேரம் மரண காண்டுல போவும். கையில எவனாச்சும் சிக்குனா கழுத்தக் கடிச்சித் துப்பிர்லாம் போல கோவம் வரும்.


மதியம் பெல் அடிச்சதும் நம்மலுக்கும் கொஞ்சம் ரோசம் இருக்குற மாதிரி நடிச்சிட்டு, கொண்டு வந்த ஒரே ஒரு ரஃப் நோட்ட அப்டியே வெரல்ல சுத்திட்டே அவள பாக்காம வேகமாப் போய் பசங்களோட உக்காந்து சாப்ட்டா, அங்கயிருந்து அவுக ப்ரண்டு மூடில கத்தரிக்கா தொக்கோட, சாம்பார் சோறு கொண்டு வந்து தரும். மூடிய பாத்ததுமேக் கண்டு புடிச்சிருவேன் அதோடதுதான்னு.


கொஞ்ச நேரத்துல சாப்புட்டுக் கழுவிக் கொண்டு போய் குடுத்துட்டு பேக்க புடுங்கி, அந்த ரோஸ் கலர் பவுச்ச எடுத்து எதாச்சும் சில்ற காசு இருந்தா அத மட்டும் குடுத்துட்டு மிச்ச இருக்குறதெல்லாம் தூக்கிட்டு வந்துருவோம். கேண்டீன் போய்ட்டு ரிட்டர்ன் வரும் போது ரெண்டு எக்லெர்ஸ் மிட்டாயக் குடுத்து சமாளிச்சிருவோம். 


எவ்ளோ பேர் இருந்தாலும் பொங்கல் பங்ஷன் ட்ரெஸ் நல்லாருக்கான்னு பர்ஸ்ட் என்ட்டதான் கேப்பா. ஸ்கூல்லயே ஒரே ஒரு முஸ்லீம் பையங்குறதால ஆல் க்ளாஸ்ல பேமஸ். ஜெராக்ஸ் எடுக்குறதுல இருந்து, அதுட்ட எவனாச்சும் வம்பிழுத்தா சண்ட போடுற வரைக்கும் அம்புட்டும் பண்ணியாச்சு அந்த ரெண்டு வருசத்துல.


கடைசி நாள் கூட க்ளாஸ்ஸே ஒப்பாரி வைக்கும் போது அவ க்ளோஸ் ப்ரண்ஸப் பாத்துக் கூட அழுதுட்டு இருந்துட்டு, என்னப் பாத்து மட்டும் சிரிச்சிக்கிட்டே "ஒழுங்கா படி, ஓவரா ஆடாத"ன்னு சொல்லிட்டு அவுங்க வீட்ல செஞ்ச கேசரிய குடுத்துட்டுப் போயிருச்சு. 

அந்த கடைசி நிமிசத்துல கூட அதே இயல்பு மாறாம. நா அழுவேன்ங்குற பயத்துலதான் அது அழுவலன்னு எல்லாருக்கும் தெரியும்.


எனக்கு முன்னாடியே என் ரிசல்ட்டப் பாத்துட்டு பாஸாயிட்டியேடா பக்கின்னு போன் பண்ணி சொல்லுச்சு. ரிசல்ட் லிங்க் வந்ததே அப்பதான் தெரியும். ஒவ்வொரு தடவ ஸ்கூல் ப்ரண்ஸோட கான்பரன்ஸ் கால் போடும் போதும், அவளப் பத்திக் கேக்காம வச்சதில்ல. மொத்தத்துல இது பரியேறும் பெருமாள் படத்துல வர 'ஜோ'வா, இல்ல 96 படத்துல வர "ஜானு"வான்னுலாம் எனக்குத் தெரியல. 


வேகமா பஸ்லப் போயிட்டிருக்கும் போது ஏதோவொரு டாடா ஏசி அவப் பேர் போட்டு கிராஸ் ஆச்சுனா அதப் பாத்து வர ஒரு சின்ன புன்னகையும், எதாச்சும் எடக்கு மொடக்காப் பண்ணும் போது 'மதி'யோட நடந்துக்கடான்னு ம்மம்மா திட்டுறப்ப வர ஒரு ஞாபகமும் தான் அவ புடிச்சி வச்சிருக்குற இடம்.


மீண்டும் ஓர் முறைப் பார்ப்பேனாயின், அதே எதார்த்தத்தோடு தான் இருப்பாள். ஏனென்றால், அமீர்களுக்கு மட்டுமேத் தெரியும் 'மதி'கள் எப்படியானவர்கள் என்று. 


Ameerdeen...❣

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...