~
அயலி : 2023
படிப்பு எவ்ளோ அத்தியாவசியம். ஒரு காலத்துல ஒவ்வொரு பொண்ணுக்கும் அந்த படிப்பு மேல எவ்ளோ ஏக்கம் இருந்திருக்கும். இதையெல்லாம் தாண்டியும் என்னென்ன முட்டாள்த்தனங்கள அடிப்படையா வச்சி ஆண்கள் அடக்குமுறைய கையாள முடிஞ்சதுன்னு நிறைய முற்போக்கு விசயங்கள தெளிவா பேசிருக்கக்கூடிய படம்தான் அயலி.
ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்பும் ரொம்பவே அழகா நேர்த்தியா இருந்தது. எல்லா கதாப்பாத்திரத்துக்கும் முழு இடத்த குடுத்துருக்காங்க. நிறைய வசனங்கள் தியேட்டர்ல வந்திருந்தா விசில் பறந்திருக்கும். எனக்கு ரொம்ப புடிச்சிருந்த கதாப்பாத்திரங்கல்ல அந்த டீச்சர், தமிழ்ச்செல்வி அம்மாவோட சேர்த்து அந்த சேகர் கதாப்பாத்திரத்தையும் சொல்லலாம்.
இந்த சேகர் மாதிரி யாராவது ஒருத்தரையாவது கண்டிப்பா நம்ம ஊர்கள்ல பாக்க முடியும். ரொம்ப சாதாரணமா பெரிய விசயங்கள கையாளுற ஒரு கதாப்பாத்திரம். லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்றதுன்னு சொல்லுவாங்கல்ல, அப்டி. ரொம்ப அழகாவே நடிச்சிருந்தாரு. 'நாங்க சேலைய சுத்திக்கவா'ன்னு ஒரு ஆம்பள கேக்கும் போது 'எல்லாமே இடைல வந்ததுதான, உனக்கு வேணும்ன்னா எதையாச்சும் சுத்திக்கோ. இல்லைன்னா அம்மணமா திரி'ன்னு சொன்னது ரொம்ப சாதாரணமா பெரிய விசயத்த பேசினது போல இருந்துச்சு. நல்லாருந்துச்சு.
ஒரு சின்ன பொண்ணு கல்விக்காக, பெண்ணுரிமைக்காக, பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக, ஊரோட பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக உருவாக்குற மாற்றமும், அது எவ்ளோ பெரிய விளைவ தருதுங்குறதையும் நேர்த்தியா சொன்ன படம். நாளு மணி நேர திரைக்கதையும், கதையில இருந்து விலகாம அப்படியே பயணப்பட வைத்தது ரொம்ப சிறப்பான விசயமும் கூட.
இதெல்லாம் நிஜமாவே இருக்கான்னு நினைக்கிற சில மூடத்தனங்களையும், இப்டிதான அவங்களுக்கும் நடந்துச்சுன்னு சொல்லக் கூடிய நிறைய பாதிப்புகளையும் பேசியிருக்காங்க. ஜாதி, மதம் போல கௌரவம், மானம், மரியாதை, கலாச்சாரம்ன்னு காரணம் காட்டி இன்னும் நிறைய ஒடுக்குமுறைகள் நடந்துட்டுதான் இருக்கு.
'இங்க நாம சொல்லாம எதுவும் தெரியாது'ன்னு சொல்ற காட்சில இருந்து ஒரு விசயம் புரிஞ்சது. பெண்ணுக்கு எதிரான எந்தவொரு அடக்குமுறையும் ஒரு பெண்ணோட துணையில்லாம அரங்கேற்றவே முடியாது. கண்டிப்பா ஒரு ஆண் கூட்டத்தால மட்டும் பெண்களை அடிமைப்படுத்திற முடியாது. அடிமைப்படுத்துறதுக்கும், அடக்குமுறைக்கும் கூட ஒரு ஆணுக்கு இன்னொரு பெண்ணோட அமைதி தேவைப்படுது.
அதுக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ, அறியாமையினால அதுக்கு உடந்தையா இருக்க வேண்டிய கட்டாயத்த குடும்ப அமைப்பு பெண்ணுக்கு உருவாக்கி தந்திருக்கு. 'அயலி'யுடைய அடிப்படை கருத்தாவே அதைதான் பாக்குறேன். மாற்றம்ங்குறது தனக்குள்ள இருந்து முதல்ல துவங்கனும். அப்பதான் அது விசாலமாகி நம்ம உதாரணமாகி எல்லாரையும் மீட்கலாம்.
எனக்கு தெரிஞ்ச ஒரு விசயம். ஜாதி, மதத்த மாதிரியான மிகப்பெரிய அடக்குமுறை குடுப்பத்துக்குள்ள, நிறைய வீடுகள்ல சத்தமே இல்லாம நடந்துட்டிருக்கு. வெளியவே தெரியாம எத்தனையோ குழந்தைகள் பாதியிலயே படிப்புல இருந்து நிப்பாட்டப்படுறாங்க. திருமணம் செஞ்சி வைக்கப்படுறாங்க.
ஏதோவொரு தேவையில்லாத காரணத்துக்காக, ஆண்களின் தனிப்பட்ட பிரச்சனைக்காக பெண்கள் மீதான வன்முறை ரொம்ப பகிரங்கமாவும் கூட சில இடங்கள்ல நடக்குது. அத சமூகமும், குடும்ப அமைப்பும் ஆதரிக்கிதுங்குறது இன்னும் வருத்தமான விசயம். இது எல்லாத்தையும் தாண்டி 'ஆம்பள அப்டிதான் இருப்பான்'ங்குற ஒரு பிற்போக்கு உந்துதல அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் கொண்டு போய் சேர்த்துட்டு தான் இருக்காங்க.
வெறுமனே கௌரவம், கலாச்சாரம், மானம்-ன்னு சொல்லி அறிவுரை சொல்லக் கூடிய எத்தனையோ ஆண்கள் குடிச்சிட்டு தெருவுல கிடக்குறத பாத்திருப்போம். அந்த மானமெல்லாம் ஏன் அவங்களுக்கு இல்ல? ஒரு வன்புணர்வு செய்த ஆணுக்கு கிடைக்கிற சமூக இடமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்கிற சமூக இடையூறுக்கும் இடையில ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வு?
ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆண்களுக்காகவே பெண்கள் அர்ப்பணிச்சி வாழ்ந்துட்டு போயிறனும்ங்குற கீழ்த்தரமான மனநிலையில இன்னமும் எத்தனையோ பேர் இருக்கதான் செய்றாங்க. இது முன்னாடி மாதிரி இல்லாம இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு இருக்குல. இதே மாதிரி இன்னும் மாறும்.
இந்த எல்லா பிற்போக்கு நிலையும் இப்போ குறைஞ்சிருக்குன்னா, படிப்புரிமை எல்லாருக்கும் உரியதுன்னு ஆகிருக்குன்னா, அடக்குமுறைக்கு எதிரா சின்னச் சின்ன குரலாவது ஒலிக்குதுன்னா, ஒவ்வொரு பிற்போக்கு கிராமத்துலயும் ஏதோவொரு பெண் முதன் முதலா இது எல்லாத்தையும் எதிர்த்து கேள்வி கேட்டிருப்பாங்கல்ல. அவங்கதான் அந்த 'தமிழ்செல்வி'.
"உங்க அறிவுக்கு எது சரின்னு படுதோ, அத செய்ங்க!"
அயலி - ஒரு தீப்பொறி ❤