~
காதல், நமக்குள் அது தானே நிகழ்ந்தது. 'என் வாழ்வில் நீ வரவில்லை என்றால்' என்று உனக்கு புகழாரம் கூட என்னால் பாட முடியும். அவ்வளவு ஆச்சரியங்களை நடத்தியிருக்கிறாய் என்னுள். நான் கொட்டித் தீர்த்து விடுவேன். ஆனால், உனக்குதான் ஆணவக் கொம்பு முளைத்து விடும். பரவாயில்லை அதுவும் அழகாய்தான் இருக்கும்.
இங்கு சட்டென நிகழ்ந்த அதிசயம் போல் காதலை பாவிப்பதைப் பார்த்தால் எனக்கு குழப்பமாய்தான் இருக்கிறது. பார்த்ததும், தொட்டதும் காதல் உருவாகிடுமென்று எனக்கு நம்பிக்கையில்லை. ஒருவேளை அது எல்லோரையும் போல் என் மனநிலைக்கு பொருந்தவில்லை போல.
காதல் படிப்படியாக நாம் வளர்வதை உணர்த்தக் கூடியது. நம்முள் இருக்கும் அன்பும், அக்கறையும் வளர்வதை உணர்த்திக் கொண்டேயிருக்கும். புரிந்து கொள்ளச் செய்யும். ஆரம்பத்தில் இருப்பதை விட இறுதியில் காதல் அதிகமாகிதான் இருக்கும். புரிதலுக்கான இடைவெளியும், வெளிப்படைத் தன்மையும் எளிமையாக பகிரப்பட்டிருக்கும். அது உள்ளார்ந்த உணர்வுகளில் ஊடாடிட உதவவும் செய்யும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அப்பாவும், அம்மாவும் தன் அன்பை சொல்லிக் கொள்ளவே மாட்டார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த அன்பு பழக்கப்பட்டிருக்கும். இருவர் சார்ந்த நன்மையோ, தீமையோ இது இப்படி இருந்தால் இதுதான் தீர்வென்று ஓரளவு புரிந்து கொள்ளும் நிலையில் அதை வெளிப்படுத்த தயக்கம் கொள்வார்கள். ஆனால், அப்போதும் நான் உன்னிடம் என் காதலைச் சொல்ல தயங்க மாட்டேன்.
இப்போது நம்மிடம் வந்துவிட்டேன். உனக்கு ஓரளவு என்னைத் தெரியும், எனக்கும் உன்னை அப்படித்தான். நான் முதல்முறை உன்னிடம் காதல் சொன்ன போது சிரித்த நீ, இன்றைய நீ இல்லை. முதல்முறை உன்னிடம் அழுத நானும், இன்றைய நான் இல்லை. நாளை நாம் இதேபோல இருக்கப் போவதுமில்லை.
ஒரு உறுதிப்படுத்தலுக்காக எச்சரிக்கிறேன். வாழ்க்கை மாறும். நிறைய மேடு பள்ளங்களை நாம் கடக்க வேண்டியிருக்கும். நான் உன்னையும், நீ என்னையும் தாங்கிப் பிடித்து நடக்கும் நிலை உருவாகும். தூக்கிச் செல்லும் நிலை கூட வரலாம். எனக்கு என் எல்லா பயணத்திலும் நீ இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
உனக்கு என்னை எவ்வளவு பிடிக்குமென்று தெரியவில்லை. ஆனால், எனக்கு உன்னளவு யாரையும் பிடித்ததில்லை. நீ என் எல்லாவற்றிற்கும் ஆதி. காதலுக்கு நிறைய காதல் காதலே!
#ProposalDay ♥


No comments:
Post a Comment