~
ஒரு நாளில் வாடிவிடும் ரோஜாவைப் போய், எதற்கு வாழ்நாள் காதலுக்கு தருகிறார்கள் என்பதுதான் குழப்பமாய் இருந்தது. ரோஜா பற்றிய ஒரு கட்டுரையில் ரோஜா காதலுக்கு மட்டுமே பரிசளிக்கப்படவில்லை என்றும், அது அன்பிற்கு உகந்த அனைத்து மனிதர்களுக்கும் மலரின் நிறவாரியாக பிரித்து பரிசளித்து இந்நாளை கொண்டாடலாம் என்றும் படித்தேன்.
கருப்பு நிறத்தில் ரோஜா இருக்கிறதென்று கூட இன்றுதான் தெரிந்து கொண்டேன். காதலர் தினத்தில் அவரவர் ஆடைகளின் நிறத்தை வைத்து காதல் செய்பவர், காதல் இல்லாதவர், காதல் பிடிக்காதவர் என்று பிரித்தறியலாம் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.
அதே போலதான் இந்த ரோஜா தினமும் உருவாகியிருக்கும் என்று நினைக்கிறேன். காதலர் தினத்தில் புதிதாக காதலி அமைந்ததாக யாரும் சொல்லி கேள்விப்பட்டதில்லை. அது முந்தைய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் நெருக்கம் மிக எளிதாகிவிட்டது.
குறுஞ்செய்திகளில் அனுப்பி விடும் காதல் குறியீடுகளுக்கு இடையில் நேரில் சந்திக்கும் வரை கூட காத்திருக்காத சொல்லப்பட வேண்டிய காதல், காதலர் தினத்திற்காக காத்திருக்கும் என்று நினைப்பது அபத்தம். இது ஒரு விதத்தில் 'அதெப்படி' என்பதாக விணவக் கூடிதாக இருந்தாலும் கூட நன்மையானதுதான்.
காலத்திற்கு தகுந்தாற்போல் காதல் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும். இந்த ரோஜா தினம் வெறுமனே காதலர்களுக்கு மட்டுமே உரியதல்ல என்பதாக படித்த பின் ஏதோவொரு அன்பு நமக்காக ஒரு ரோஜா ஏந்திக் கொண்டிருக்கும் எல்லோரும் நம்பலாமென்று சொல்லிக் கொள்கிறேன்.
காதல் நிகழ்த்தும் அதிசயங்களில் அத்தனை அன்பையும் ஒன்றாக்கி அழகாக்குவதையும் சேர்த்துக் கொள்ளலாம். ரோஜா கொடுத்து காதல் கொண்டாடுவதின் மூலமாகவாவது ஒரு சந்திப்பு நிகழ்ந்து விடாதா என்று ஏங்கும் காதலுக்கு, ஒருநாள் அது விரும்பிய பூந்தோட்டமே தனதாகும் என்று தெரியாமலே இருக்கலாம்.
ரோஜா தினம் ❣️


No comments:
Post a Comment