இப்படித்தான் மின்மினிப் பூச்சிகள் வெளிச்சத்தில் இருக்குமென்று அறையைத் திறந்து மின்விளக்கை ஒளிரச் செய்த போதுதான் எனக்கே தெரியும். தேனீக்கும், பூவண்டுக்கும் இடையிலான சாயல். இனிமேல், ஆழ்மன எண்ணங்களை மின்மினி என்றுதான் நான் பாவிப்பேன். அவைகளும் இவற்றைப் போல் இருளில்தான் சுதந்திரமாக, பிரகாசமாக மிளிரும். நிறைய பறக்கும், பார்க்க வைக்கும்.
அலைபேசிக்கு உணவு இடைவேளை என்பதால் வாசலில் அமர்ந்திருக்கிறேன். தவளைக் குரலும், தூரத்து நாயின் ஒலியும் ஒரு இருப்பை உணர்த்துகிறது. ஆழ்ந்த உறக்கத்திலும் எட்டு மைல் தொலைவில் கடக்கும் இரயில் சத்தம் இசையாய் இருக்கிறது. பழுதாகிய இசைக்கருவிகள் போல் பூச்சிகளும், வண்டுகளும் கொட்டும் பனிக்கு துதி பாடுகின்றன. யாருக்கு வேண்டும் அமைதி. உலகில் எரிச்சலூட்டும் இரைச்சல் எனக்கு இந்த அமைதிதான்.
மலை நிலங்களும், மழைச் சூழலும் நிறைந்த ஊரில் தனிவீடு கிடைப்பதெல்லாம் வரம். ஆனால், முரண் என்னவென்றால் அதே தனி வீட்டில் நல்ல குளிர்ந்த காலநிலையில் பிடித்தமான, சூடான உணவைத் தின்ன முடியாமல் வீணாக்கும் மனநிலையில் என்னைத் தள்ளி விட்ட இந்த நாட்களில் சிலவற்றைத் தெளிவாக விளங்கிக் கொண்டேன்.
சோம்பேறித்தனத்திற்கும், ஓய்விற்கும் வித்தியாசம் தெரியாமல் நிறைய பேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பேச மறக்குமளவுக்கு ஆளரவமற்று திரிகிறார்கள். பொறுப்பையும், விமர்சனங்களின் மீதான பயத்தையும் சேர்த்து போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். களைப்பில் மயங்குவதை தான் உறக்கமென்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை விட மிக முக்கியம் நம்மைச் சுற்றி நிறைய மனிதர்கள் தனிமையில் இருக்கிறார்கள். சிலர் மனிதர்களற்ற வீட்டில், சிலர் மனிதர்களுக்கு மத்தியில்.
❣️

No comments:
Post a Comment