~
குடும்ப அமைப்பின் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் எனக்குள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குடும்பத்தின் மீதான பொறுப்பின்மை, சுயநலம் இன்னும் இதைத் தாண்டிய தயங்கச் செய்யும் பல்வேறு குற்றச்சாட்டுகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு குழந்தையின் மீதான சரியான பொறுப்பை, கடமையை நிறைவேற்றாத தாய், தந்தை. அதில் துளியும் வருத்தமடையாத ஒரு குணம். அதனை வற்புறுத்தாத உறவினர்கள். ஏளனமாக கையாளப்படும் மனிதாபிமானமற்ற செயல்களென்று எக்கச்சக்க சிக்கல்கள்.
அத்தியாவசியமான தாய், தந்தை அவர்களைச் சார்ந்த மனிதர்களோடு ஆரோக்கியமான ஒரு வாழ்வியல் அமையப் பெறுவது வரம். சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் கடைசி முதல் மூத்த மனிதர் வரை ஒவ்வொருவருக்கும் அந்த குடும்பத்தின் ஒவ்வொருவரின் நிம்மதிக்கான பொறுப்பு இருக்கிறது. அந்த மனநிம்மதியை தர முடியாத பட்சத்திலும் அதை சிதைக்காமல் இருப்பதே பெரும் உதவியாய் இருக்கும்.
ஒன்றுபட்ட வாழ்வில் எத்தனையோ அதிதீவிரமான செயல்களை எளிமையாக செய்து முடிக்க முடியும். குழந்தைகளின் கல்வி, சமூக அக்கறை, பொறுப்புணர்வு, நேர்மை, பொறுமையென்று உள்ளார்ந்து உயர்த்த வேண்டிய பல்வேறு விசயங்களை தலைகீழாக இந்த குடும்பத்தினர்களே சிதைப்பது பெரும்பாவம்.
இல்லாத கௌரவம், தேவையற்ற கோபம், தனிமனித சுயநலம் என்று குடும்ப வாழ்வியலுக்குள் சிக்கலாய் இருக்கும் இத்தனையையும் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, உங்களுக்குப் பின்னே வாழப் போகும் சந்ததிகளின் மனஅமைதியை கலைப்பதிலும், சிக்கல்கள் கொடுப்பதிலும் நீங்கள் காட்டும் ஆர்வத்தை உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டியிருந்தால் நீங்கள் ஒரு மனிதராக கூட மதிக்கப்பட்டிருக்கலாம்.
உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதில் நான் நிச்சயமாக கடைப்பிடிக்க நினைக்கும் ஒரு விசயம். நீங்கள் எங்களுக்கு நிகழ்த்திய எந்தவொரு எதிர்மறையையும், நான் என்னைச் சார்ந்தவர்களுக்கு நிகழ்த்த மாட்டேன். நீங்கள் சடலங்களாக வாழ்ந்து கொண்டு செய்யும் எந்த அநீதியையும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தக் கூட மாட்டேன்.
❣️

Nallaruku ✨
ReplyDeleteThank you 🤍
Delete