Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Thursday, August 28, 2025

பார்வையும், பாதையும்


~
தூசி நிறைந்த கண் கண்ணாடியை துடைத்தால் மட்டுமே தெரியக்கூடிய சாலையில், வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டிய கட்டாயம். மணல் ரோட்டில் கரடுமுரடான சாலைகளில் வண்டியை நிறுத்தி எடுக்க மிகப்பெரிய பொறுமை வேண்டும். வேலை நேரத்தில் எள்ளளவும் என்னிடம் அந்த பொறுமை இருந்ததில்லை.

கண்ணாடியின் இடைவெளியில் பார்வையைத் திணித்து பச்சைப் புற்களையும், மலைகளையும் கண்களால் சூரையாடத் தொடங்கியிருந்தேன். கவனக்குறைவில் ஒரு முட்டுக்கல்லில் மோதி சாய்ந்து விழப்பார்த்து சுதாரித்துக் கொண்டேன். மிதமான வேகத்தில் பாதையையும், பிறவற்றின் மீதான பார்வையையும் சரிசமமாக்கிக் கொண்டேன்.

வெட்டவெளி, மிகப்பெரிய வயல்வெளிகள், கண்ணுக்கெட்டிய தொலைவில் மலைகள், வயல்களுக்கு நடுவே ஓடைகள், இரண்டு பக்கமும் வயல்களை கொண்ட உள்ளூர் பாதைகள், வயலில் பணியாட்கள், ஆங்காங்கே சிறு சிறு கோவில்களென்று கண்களுக்கு கொஞ்சம் ஆசிர்வாதங்கள் வாங்கிக் கொண்டேன்.

கடுமையான வெயில், காலையிலிருந்து உணவருந்தாத களைப்பு, தண்ணீர் தாகம், தூசியும் துகள்களும் நிறைந்த சாலைகள், ஆனாலும் எனக்கு பிடித்தமான பயணமாக ஒவ்வொரு முறை மதிய உணவுக்கு செல்லும் போதும் இதை மாற்றி விடுகிறது இந்த பார்வை. சிலரிடம் தனிப்பட்ட முறையில் நிறைய பேசி முடிக்கும் போது இறுதியாக, எப்படி மகிழ்ச்சியையே தேடித்தேடி செல்கிறாய் என்பார்கள்.

பாதை எப்படி இருந்தாலென்ன, பார்வை நம்முடையதுதானே! ❤

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...