~
"கொசுவர்த்திய தின்னுட்டானே" என்று கத்திக் கொண்டே வெளியே வந்த பாக்கியத்தால் ரமேஷை எழுப்ப முடியவில்லை. அரசாங்க ஊழியர்களில் மிக முக்கியமான குடிமகன் ரமேஷ். அந்த வீதியில் அவன் உறங்காத இடமே கிடையாது.
ஆறு வயது சிறுவனை வைத்துக் கொண்டு வீட்டு வேலை செய்து கணவனுக்கும் குடிக்க காசு கொடுப்பதென்பது ஆஸ்காருக்கே பரிந்துரைக்கக் கூடிய பெரிய சாதனைதான். ஆனால், பாக்கியம் அதில் கில்லாடி.
கணவன் எத்தனையோ முறை வாந்தி எடுத்து மண்ணுக் கால்வாய் ஓரத்தில் கிடக்கும் போதெல்லாம் சாதாரணமாகத் தூக்கி வந்து வீட்டுத் திண்ணையில் போட்டு விடுவாள்.
பிரியாணி அண்டாவை ஒரேயொருத்தியாகக் கழுவிக் கவிழ்த்தி பழகியதன் விளைவாக அவளால் தன் காதல் கணவனின் குடி போதையையும் தெம்பாக கையாள முடிந்திருக்கிறது.
இப்போது பிரகாஷை வாந்தியெடுக்க வைக்க வேண்டும். ஒன்பதரைக்கு வரும் கல்லூரிப் பேருந்துக்கு மூத்தவளைக் கிளப்புவதா, இல்லை இவனை பிழைக்க வைப்பதா என்று குழம்பிய படியே அழாமல் பிரகாஷை நிமிர்த்தி சாணிக் கலவையை வாயில் ஊற்றினாள்.
கக்கித் தீர்த்த பின் இரண்டு அரைகளோடு "எத்தன தடவ சொல்லீருக்கேன். கண்டத வாய்ல வைக்காதன்னு" என்று கத்திக் கொண்டே ரமேஷ் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள்.
அரை போதையில் அவன் "எம்பொண்டாட்டிக்கு எம்மேல எவ்ளோ பாசம்" என்று சொல்லிக் கொண்டே வாய் கூட கொப்பளிக்க நேரமில்லாமல் அந்த சுட வைத்த பழைய பிரியாணியைத் தின்றான்.
"ம்மா. வாரேன்" என்றவாரு பேருந்தில் ஏறிப் போனாள் மூத்தவள் பிரபா. பாக்கியத்திற்கும், ரமேஷுக்கும் இருபத்தி ஐந்தாண்டு காதல் கதை இருக்கிறது. அப்போதெல்லாம் அவன் டிப்டாப் விளம்பர மாடல் போல் வாழ்ந்து கொண்டிருந்தான்.
வட்டியும், கடனும் தொடர்ந்து இவர்களின் காதலில் வந்த குட்டியும், குடும்பமும் தான் அவனை குடிகாரனாக்கியதாக அவ்வப்போது தெருமுனையில் சக குடிமகன்களோடு புலம்புவதுண்டு.
"உன் விரல் இடுக்குல என் விரல் கெடக்கனும்.
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கனும்" என்று அடுப்படி அலமாறியிலிருந்து பிரபாவின் புது மொபைல் அடிக்க "இந்த மோடச்சிக்கு எதையாவது மறந்து வச்சிட்டு போறதே வேலையா போச்சு" என்று புலம்பிக் கொண்டே அட்டென்ட் செய்து காதில் வைத்தாள் பாக்கியம்.
ஹேய் பிரபா.! பஸ் ஏறிட்டியாடி, மேட்னிக்கு டிக்கெட் எடுத்துட்டேன். கார்னர் சீட். இன்னும் பத்து நிமிஷத்துல காலேஜ் வாசலுக்கு வந்துருவேன். எவ்ளோ நேரமாகும்..? - ஆண்குரல்.
- Ameer Deen ♥

No comments:
Post a Comment