~
பிறகு யோசித்து ஆசை என்று சிலவற்றிற்கு பெயர் வைத்து கொஞ்சி அழைக்கத் துவங்கினேன்.
ஒரு மையிருட்டான நேரத்தில் ஆசீர்வதிக்கும் படி எரியத் துவங்கும் ஓர் சிமிளி விளக்கு.
பேதையொருவனுக்கு அடைமழையில் குடை நீட்டி துணைக் கொடுக்கும் யாரோவொருவரின் கை.
முழுதாய் காற்றடிக்க முழு ஜன்னலையும் விலக்கிக் கொள்ள அனுமதிக்கும் பின்சீட்டுக்காரர்.
மீதமுள்ள காசுக்கு சில்லரை இல்லை என்காமல் புளிப்பு மிட்டாய் கொடுக்கும் மளிகைக் கடைக்காரர்.
ஜன்னல் சீட்டில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்து கைப்பிடித்து பயணிக்கும் கணவன்மார்கள்.
பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து தண்ணீர் தெளித்து, கோலம் போட்டுக் கொடுக்கும் அத்தை.
அம்மாவிற்குத் தெரியாமல் சீடா உருண்டை வாங்கிக் கொடுக்கும் பாட்டி.
மேல்வீட்டில் தனியாய் இருக்கும் பையனுக்கும் சேர்த்து சமைக்கும் கீழ்வீட்டு அக்கா.
தேநீர் குடித்து விட்டு பணம் கொடுக்க விடாமல் தடுத்து தன் கணக்கில் எழுதி விட்டு வரும் நண்பன்.
வஞ்சகம், சூழ்ச்சியில்லாது வன்மத்தையும் நேருக்கு நேர் கோபமாய்க் காட்டி விடும் எதிரி.
தலைவலிக்காரனுக்கு பத்து ரூபாய் கொடுத்து பனியாரம் வாங்கி வரச் சொல்லும் ஆசிரியர்.
சம்பளத்தைத் தாண்டி இவன் பிறந்தநாளை விரும்பி தன் செலவில் கொண்டாட விரும்பும் முதலாளி.
தான் உழைத்து வாங்கிய வண்டியை தம்பிக்கு பிடித்த வண்ணத்தில் வாங்கும் அண்ணன்.
கணவன், குழந்தைத் துணிகளோடு சேர்த்து மைத்துனனின் துணியையும் துவைத்துப் போடும் அண்ணி.
யாரென்று விசாரிக்கப் போகையில் என் பிள்ளை என்று அறிமுகப் படுத்தும் நண்பனின் அம்மா.
உன் தலையணையில் உன் காதைக் கூசித் தொந்தரவு செய்து கொண்டே தூங்கும் பூனை.
நீயன்றி எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக கடந்து போகக் கூடிய மனம் கொண்ட ஒருத்தி.
வாழ்தலினிது!


No comments:
Post a Comment