Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, January 14, 2026

நீயென் நிலம்!


~
எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமென்று நான் சொன்ன, செய்த ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து எனக்கும் படிப்பினையாக்கி நிரூபிக்கிறாய். உனக்கிது நியாயமற்று தெரியவில்லையா என்பதுதான் என் முதல் கேள்வி. இருந்தும் அதை விடுத்து இன்னொன்றை கேட்க விழைகிறேன்.

உன்னை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் என்னை நிறுத்திய உனக்கென்ன உரிமை இருக்கிறது என் மறைமுகப் பிரியங்களை கேள்வி கேட்பதற்கு. உன்னை என்னோடிருக்கச் சொல்லி எப்போதும் நான் வேண்டியதே இல்லையே.

நான் உன் இன்மையில் பிரியங்கொண்டாடிக் கிடந்தவன். எனக்கு நீ இல்லாதிருத்தலிலும் உன் நிலையை உணர்ந்து, வாழ்ந்து, வீழ்ந்து, மீள முடியும். அன்றி நீ இல்லாத வாழ்வென்பது என் சாபமென்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை.

நீ இல்லை என்பது ஒரு எலும்பு போர்த்திய சதைப் பிண்டமும், அதைச் சுற்றிய உடையும், பிரகாசமான ஒளியும், இல்லை என்பதேயாகும். உண்மையில் அப்படியான சூழலில் நீயெனக்கு இல்லாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி நான் உன்னை அணுகியதே இல்லை.

நீ இல்லாத நிலை வருமென்றால் அப்போது வெங்காயம் வெட்டாமல் அழுது கொண்டிருப்பேன், தலைக்கோத என் கையையே நாடுவேன், தலையணையை அணைத்துக் கொள்வேன், இறுதியாக நியாபகத் தீயில் என்னைச் சுட்டு வீழ்த்தி மறையச் செய்வேன்.

இப்படி நீ என்னோடு இல்லாதிருக்க இத்தனை வழி இருந்தும், இருக்க விழையும் உன்னைத்தான் இருக்க வேண்டாமென்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இல்லாமல் போயெல்லாம் உன்னால் என்னை வருத்த முடியாது. நீ இருந்துதான் ஆக வேண்டுமென்பதற்கு நீ இந்த என் ராணியல்ல, நிலம்!

❣️

சுவை


~
"நாங்க நிறையா சாப்டுவோம்" என்பதாக என் நண்பர்களை நான் அறிமுகம் செய்வதுண்டு. நிறைய என்றால் அதிகம் என்று பொருளல்ல. ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவதொரு தேநீர் கடை அல்லது உணவகத்தை தேர்ந்தெடுத்தே பழகிவிட்டது. எனக்கு தனியாய் சாப்பிட வராது. தனியாக பேச முடியாது, பேச முடிந்திருந்திருந்தால் என் அதிகபட்சமான நேரங்கள் தனிமையிலேயே இருந்திருக்கும். நான் மனிதர்களைத் தேடிப் போவதே பேசுவதற்குத்தான். 

பேசப் பிடித்த அளவுக்கு சாப்பிடப் பிடிக்கும். இதில் முரண் என்னவென்றால் தனியாக சாப்பிட முடியும் என்றாலும் எனக்கு சாப்பிட வராது. எதோவொரு விதத்தில் தனிமையின் உணவில் ஒரு திருப்தி கிடைக்காது எனக்கு. கண்டிப்பாக பரிமாறிக் கொள்ள பார்த்துக் கொண்டே சாப்பிட யாரோவொரு சக மனிதர் வேண்டுமெனக்கு. வேலையின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அதற்கும் என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். 

எனக்கு அன்பின் வெளிப்பாடு என்ற குறிப்பே உணவிலிருந்துதான் தொடங்கும். ஒவ்வொரு மனிதரோடு சென்ற உணவுக்கடைகளையும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பேன். சிலநேரம் சுவை கூட நினைவிருக்கும். என் பெருங்காதலை உணவின் ரீதியில்தான் வெளிப்படுத்த முயல்வேன். சமைத்துத் தருபவர்களை ஒரு அடி நெருக்கமானவர்களாக மனதுக்குள் நியாபகம் வைத்திருப்பேன். 

உண்மையில் அத்தனை போதைப் பழக்கங்களுக்கு மத்தியில் சோற்றுக்கு செத்தவனாக இருப்பது சாலச்சிறந்தது. உணவை மனிதர்களோடு சேர்ந்து கொண்டாடுவதில் நிறைய நிறைவான நினைவுகளை சேமித்துக் கொள்ள முடியும். சாப்பிட, பேச மறுக்கும் நிலை எனக்குள் வருமேயானால் அன்று என் இயல்பில் இருந்து நான் விலகியிருக்கிறேன் என்று பொருள்.

என்னை நினைவு கூறும் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு உணவின் சுவை! ❤

கண்ணுக்கெட்டா


~
யாரையும் வெறுக்குறதுக்கு தயாரா இல்லாத போது அல்லது இவங்கள நாம வெறுத்துற கூடாதுன்னு எனக்குள்ள தோனும் போது நா தேர்ந்தெடுக்குற விசயம் இந்த அலட்சியம் தான். அதாவது கண்டுக்காம இருக்குறது. நாம பொருட்படுத்தாத எல்லாரோட எதிர்மறையையும் நாம எளிமையா கடந்துருவோம். நம்ம கவனத்துக்கு அது வராது. 

ஒருத்தர நாம பொருட்படுத்தும் போதுதான் அவங்களோட சின்னச் சின்ன விசயங்கள் கூட நம்மள பாதிக்கிது. அத மாத்தனும்ன்னா தூக்கி சுமக்குறதோ, முழுசா பொருந்திப் போறதோ இல்லாம கண்டுக்காம இருக்குறதுதான் சுலபமான வழி. சிலநேரம் அது கஷ்டமாவும் இருக்கும். எப்டி நெருக்கமானவங்கள கண்டுக்காம இருக்குறதுன்னு குழப்பமா இருக்கும்.

நீங்க, உங்களோட நன்மை தீமையான செயல்கள், அன்றாட வாழ்வியல்ன்னு எத பத்தின எந்தவொரு கருத்தும் எனக்கு கிடையாது. அது உங்களுடைய தனிப்பட்ட விசயம்ன்னு தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க தொடங்குறதுல தான் இது தொடங்கும். நிறையா நேரத்துல குற்றவுணர்ச்சிய தூண்டாம இருக்கவோ, நம்ம நிம்மதிய கெடுத்துக்காம இருக்கவோ அலட்சியம்ங்குறது பெரிய வழி.

ஒரு விதத்துல அவங்களுக்கும் நீங்க செய்யக்கூடிய நல்ல விசயமும் அதுதான். விருப்பமான ஒருத்தரால வெறுக்கப்படுறத யாருமே விரும்ப மாட்டாங்கல்ல. ஒரு அளவுக்கு மீறி தாங்குறதும் தப்புதான், ஒரு அளவுக்கு மீறி குடுக்குறதும் தப்புதான். நீங்க என்னவா நடத்தப் படுறீங்களோ அதுவா நீங்க இருக்குறத விட, என்னவா நடத்தப்படனும்ன்னு நினைக்கிறீங்களோ அதுவா இருக்குறதான் நல்லது.

"யாரையும் பொருட்படுத்துவதற்கில்லை, பொருட்படுத்தும் அளவுக்கு இங்கு எதுவுமில்லை"

Indifference is a better option than Hatred!

Tuesday, January 13, 2026

போர்வையின் நினைவு!

~
மிகச்சிறிய போர்வைக்குள் எத்தனை விதமான நினைவலைகள். கோபம், கவலை, வருத்தம், தயக்கம், காதல் தொடங்கி தேடல் வரை அத்தனையையும் தாங்கி நிற்கிறது அந்த போர்வை.

கதகதப்புக்கென்று கொஞ்சம் இழுத்துப் போர்த்திக் கொள்கிறேன். ஒவ்வொரு இழுப்புக்கும் ஒரு அடி நெருங்கி வந்து வெவ்வேறு விதமான உரையாடல்களை நிகழ்த்தி விட்டுப் போகிறது உன் நினைவு.

முதல் இழுப்பில் என்னோடு இருந்த நீ, இரண்டாவதில் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாய். மூன்றாவது இழுப்பில் கண்ணத்தில் இரண்டு அறைகளும், நான்காவதில் தூங்குடா என்ற வார்த்தையும் சொல்லி கால் பிடித்து விட்டாய். காலில் இருக்கமாய் சுருண்டிருந்த போர்வை மேல் தூக்கி தலைக்கும் சேர்த்து போர்த்தினேன்.

முற்றும் இருளும், கடுங்குளிரின் மீள்விற்கு கொஞ்சம் கதகதப்பும் தந்து விட்ட போர்வைக்குள் இறுதியாக நீயொரு முத்தத்திற்கு நெற்றிக்கு தந்து விட்டு மூச்சுக்காற்றை உள்ளூறப் பரவிட செய்தாய்.

ஒவ்வொரு இரவுக்குள்ளும் ஓராயிரம் நினைவிருக்கும். போர்வை போர்த்திய மனிதருக்கும் எத்தனையோ கதைகளிருக்கும். போர்வை தரும் கதகதப்பை யாரோவொருவரின் நினைவுக்கு பரைசாற்றி விட முடிந்தால் எல்லா இரவையும் நிம்மதியாக கடந்து விடலாம்தானே!

நலமாயிருக்கிறாய்தானே?


~
பிரிதொரு நன்னாளில் நாம் சந்தித்தோம். தேநீர் அருந்தி, தோளுரச அமர்ந்து கதை பேசி மகிழ்ந்தோம். ஒவ்வொரு மிடறிலும் கொஞ்சம் ஏக்கமும், சொல்லாமல் விட்ட சில வார்த்தைகளையும் அருந்தி இறுதியாய் நினைவை மென்று ஏப்பம் விட்டோம். உரையாடல் இலகுவாகும் போது முட்டாளாய் முடிவெடுத்து விட்டோம் என்று நம்மை நாமே எள்ளி நகையாடினோம். 

எல்லாம் நன்மைக்குத்தான் என்று ஆறுதலும் அடைந்து கொண்டோம். சுற்றம், நட்பென்று அத்தனையையும் விசாரித்து ஆர்வமாக தெரிந்து கொண்டோம். இன்றைய ஆசைகளையும், நேற்றைய கடமைகளையும் கேட்டு அறிந்து கொண்டோம். இருவரின் கணிப்பின் படி இருவரும் வளர்ந்திருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டோம். வழக்கம் போல நீ கொடு என்று தேநீருக்கான காசை மாறி மாறி பொறுப்போற்றோம். 

இறுதியாக தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டதற்கு புன்னகையை மட்டுமே பதிலளித்து மீண்டும் விலகிச் சென்றோம். பிரியத்திற்கு உள்ளான யாரையும் வெறுக்க முடிவதில்லை, விலகிச் சென்ற யாரையும் நெருங்க முடிவதில்லை. அன்றைய கடைசி கேள்வியில் நிகழ்ந்த அத்தனை கோபங்களையும், சேமித்த அத்தனை பிரியங்களையும் கடந்து நம் மீதான அலாதி அக்கறை அப்பட்டமாய் தெரிந்தது.

நலமாயிருக்கிறாய்தானே! ❤

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...