Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, July 28, 2021

விதைக்கிளை - சிறுகவிதைகள்

 



~


கண்டிப்பாக ஒருநாள் இதை வாங்கி விடலாமென்றே எல்லா ஏங்கங்களும் ஷாப்பிங் மாலில் கண்ணாடி துடைத்துக் கொண்டிருக்கிறது..!


////


இருந்த இருபதும் செலவாகி விட்டது என்பது திடீர் நியாபகமாய் வர, குடித்துக் கொண்டிருக்கும் பிரியமான தேநீரும் குரல்வளை நெறிக்கும். செலவான நாட்கள்..!


////


நான் பறந்து கொண்டிருந்த என் வானில் சில நாட்களாக போக்குவரத்து நெரிசல். இப்போதெல்லாம் எனக்கு சாதாரன சாலைகளில் நடந்து போவதே பேராசையாய் தான் இருக்கிறது.!


////


நீ எனக்கும் பிள்ளை போல்தான் என்றவள் முதல்மாத சம்பளத்தைப் பெறாமல் புறக்கணித்து, தன் பிள்ளை காசில் அவனுக்கு சட்டை எடுத்து மகிழ்கிறாள்..!


////


பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் பெண் வீட்டினரை வென்று விடுகிறான், யாரோவொருவனின் காதலைக் கையில் வைத்திருப்பவளுக்கு தாலி கொடுப்பவன்..!


////


ஏதோவொரு மூலையில் கிறுக்கி விளையாடிக் கொண்டிருந்தவளை வீடு முழுக்க என் பிள்ளை வரைந்தாலும் எனக்கு கவலையில்லை என்று ஊக்குவித்தான் அந்த சுண்ணாம்பு வாங்க வழியில்லாத குடிகாரத் தந்தை..!


////


எல்லோரும் தேடுவதுதானே. எனக்கென்று ஓர் கூடு. எப்போதும் சிரிக்க ஓர் பறவை. காதலாய் காற்று. வானமாய் சிறகடிக்க வாழ்வு. இதற்கிடையில் என் வனத்தில் மட்டும் ஏன் இத்தனை வேட்டை.!


////


தவறுதலாக ஸ்லீப்பர் கோச்சிற்குள் ஏரிய முன்பதிவு செய்யாத பெட்டியில் வந்த குழந்தை அடுத்த ஸ்டாப்பிங் வரைக்கும் ராஜாதான், அந்த கருத்தரித்தல் மையத்திற்கு செல்லும் தம்பதியருக்கு..!


////


வெயில் கொளுத்துகிறதென்று வாசலுக்கு சென்று எதிர்க்காற்றில் தலைக் காட்டினேன். சாரல் தூவியது. ஈரத்தில் சென்ற ரயில் நிலையத்தில் வந்த அதே பிரியாணி வாசம்..!


////


ஹாரன் அடித்துக் கொண்டே விலகச் சொல்லி இசைக்கிறார் இன்ஜின் ட்ரைவர், தண்டவாளத்தில் நின்றவர்களுக்கு அது மரணச் சங்காய் கூவியது..!


////


தாய், தந்தைக்கு தெரியாமல் எனக்கு மட்டும் டாட்டா காட்டுகிறது குழந்தை. அது முத்தமிட்ட ஈரம் கூட காயாத நிலையில் எங்களை பிரித்ததில் இரயில் தரப்பில் பாவம் சேராதல்லவா..!


////


மின்சார ரயிலில் புகைமூட்டம். கழிவரையில் யாரென்று கதவருக்கே தட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்..!


////


எதிர் இருக்கையில் இருந்த குடுமிக்காரர் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்கிறார். இதை எனதருகே இருந்தவர் தன்னை சலூன் கடைக்காரர் என்று அறிமுகம் செய்வதற்கு முன் செய்திருந்தால் யாருக்கும் சந்தேகம் வந்திருக்காது..!


////


அதிலென்ன இருக்கிறது அதையே நோண்டிக் கொண்டிருக்கிறான் என் பேரன் என்று அவனை அறிமுகம் செய்தார் அந்த தாத்தா. அவனும் நானும் முகநூல் நண்பர்களென்பது அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சி. எங்களுக்கும் கூட.!


////


மரம், வீடுகள், தெருக்களெல்லாம் கடந்து போகிறதென்கிறேன். நாமெல்லாம் இப்படித்தானே வாழ்வில் நாம் கடந்து வந்த எல்லாவற்றையும் அது கடந்ததாக சுட்டிக் காட்டித் தப்பித்துக் கொள்கிறோம்..!


///


செருப்பு வாங்க வழியில்லாதவர்கள் வாழும் இடத்தில்தான் ஆங்காங்கே ஆய்..!


////


ஏன் இவ்வளவு நேரம் என்று அதட்டுபவளை பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறான் பிள்ளை. கடன் வாங்கச் சென்றதனால் தாமதமாக்கி சிரித்த அதே மளிகைக் கடைக்காரனின் சிரிப்பு..!


////


சுழலாத சக்கரத்தில் இருந்துதான் நான் வெளியேற முடியவில்லை, சுழலும் போதும் உன்னால் வெளியேற முடியவில்லையே என்று நக்கலடித்தான். அந்த அறையில் காற்றாடியும், அவனும் பேசிக் கொள்வதை இரண்டு வருடங்களாக அந்த வீல்சேர் கேட்டுக் கொண்டிருக்கிறது..!


////


எப்போதும் அவர் பணம் வைத்து விட்டுச் செல்லும் சட்டையை இன்றுதான் அணிந்து பார்த்தான். முதல் மாதச் சம்பளத்தை தந்தை படத்திற்கு வைத்து கும்பிட்ட மகன்..!


////


ஸ்மைல் ப்ளீஸ் என்கிறான். துவண்ட நிலையில் அவள் கண்கள் இவனைக் கொல்கிறது. காதலியின் திருமணத்தில் கேமராவோடு இன்ஜினியர். !


////


வெறும் காசுதானே என்று அசட்டிக் கொள்பவன், வேலைக்கு நேரமாகிறது என்று ஓடும் நிலையில் இருக்க மாட்டான்..!

////


நீடித்த ஜலதோஷம். தூக்கத்தின் விளிம்பில் மூக்கடைப்பு. வீடு முழுக்க தேநீர் வாசம்..!


Thursday, July 22, 2021

காதலிக்காமல் இருந்தால்

 


~

காதலிக்காமல் இருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்கிறார்கள்.

முதலில் சுதந்திரமாக இருக்கலாம். எல்லோருக்கும் நம்மிடத்தில் சுதந்திரத்தை அளிக்கலாம். நிறைய கவிதை, கதை எழுதலாம். ஒருவருக்காக செலவிட்ட ஒட்டுமொத்த நேரத்தையும் பலருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

சலிப்படையாமல் ஓரளவு சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிகமான கால நேரங்கள் மிச்சமாகும். அவர்களுக்குப் பிடித்த வர்ணத்தில் சட்டை அணியாமல் டி-சர்ட்டோடு ஊர் சுற்றலாம்.

எல்லா கமெண்ட்டுக்கும் லவ் யூ என்று ரிப்ளை செய்யலாம். கல்யாணமாகிப் போன அக்காவிடம் வெகுநேரம் பேசலாம். நண்பர்களோடு தெருவெல்லாம் திரியலாம்.


இதுவெல்லாம் சாதாரணமான விசயமாகத் தான் தெரியும். 

ஆனால், இவற்றை முழு சுதந்திரத்தோடு எடுத்துக் கொள்ள முடியாத நிலையை இந்தக் காதல் ஏற்படுத்தித் தரும். எல்லாருக்கும் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லவில்லை. இப்படி இருப்பவர்களே அதிகம்.


ஒருவரின் கைப்பிடிக்குள்ளேயே வாழ்வதென்பது அவ்வளவு சவுகரியமானதாக இல்லை. அஃது உண்மையில் ஓர் இறுக்கமான சூழலையேத் தந்திருக்கும். காதலிக்க விரும்புபவர்கள் யாரும் காதலித்துக் கொண்டேயிருக்க விரும்புவதில்லை.


மேற்கொண்டு கல்யாணத்தை நோக்கி நகர்ந்து விட வேண்டியதுதான். காதலை இன்னும் நான் தெளிவாகக் கற்கவில்லை. அந்தக் காதல் எனக்கு நிறைய கற்பிக்க நினைத்திருக்கிறது போல. நினைவு கூர்தல் என்பது காதலில் எவ்வளவு முக்கியமான விசயம் என்று நான் உணரவே இல்லை.

அந்த நினைவுகளனைத்தும் ஒவ்வொரு கவிதைகளாக்கப்பட வேண்டியவை. என் நியாபகத்தில் என்னவோ காதல் மட்டுமே இருக்கிறது. அவர்கள் அதனை எத்தனையாகவோ பார்க்கிறார்கள். முதல் முத்தம், முதல் மடித் தூக்கம் என்று தொல்லாயிரம் வகையாய் நினைவு கூர்ந்து வைத்திருக்கிறார்கள்.


நான் காதலிக்க லாயக்கில்லை. எனக்கு இந்த சுதந்திரம் ஓரளவு பிடித்திருக்கிறது. மேற்படி நான் கூறியவாரே இழப்புகளையெல்லாம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் பயின்றுக் கொண்டிருக்கிறேன். இவ்விடத்தில் என்னால் காதலைப் போற்ற முடியவில்லை. அது நானெல்லாம் எளிதாகப் போற்றிவிடுமளவுக்கு சிறிய விசயமல்ல.

அது ஒரு நீளமான பயணம், பிரார்த்தனை, கொண்டாட்டம் எல்லாமே. முடிந்தவரை நமக்காகவும், நம்மாலும் இருந்தவர்களுக்குப் பயன்படக் காகிதமாய் வாழ்ந்து கடிதமாக ஆசைக் கொண்டிருக்கிறேன். நியாபகார்த்தங்களில் உங்களை நிறுத்திக் கொள்கிறேன்.

மேற்கொண்டு காதலிக்க மட்டுமே விருப்பமில்லை. மற்றபடி நான் காதல்காரன் தான்!

Tuesday, July 20, 2021

அத்தனைக்கும் பிழை

 


~

விமரிசையான விசயமாக இழப்புகளை பாவித்துக் கொண்டிருக்கிறேன். வெந்தனலில் நின்று சூரியக் குளியலுக்கு ஆசைப்படுவதாய் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். தங்களின் கர்வத்தில் துளியும் என் பேருடலின் குருதியில் இருந்திருந்தால் ஏழுகடலுக்கு அப்பால் நான் என்றோத் தூக்கியெறியப்பட்டிருப்பேன்.


இக்கணம் நானிங்கு வாழ்த்திடாப் பிணமாகவோ, ஏதோவோர் பசுந்தரையிலோ நினைவுகளாகப் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பதிகம். பிணக்குகளில் மூழ்கி வாழ்வதென்பது இயல்பாய வாழ்தலைக் காட்டிலும் பெருஞ்சாபமென்பதை அறி. தெள்ளிய வரிப்பள்ளமென் உதடு மொத்தமும் ஈரமின்றி காயத் தொடங்கி விட்டது.


நீங்கள் இப்போது என்னை வழிமறித்து உரையாடத் துவங்குவதற்குள் எந்தன் தெரிவிக்கப்படாத ஆசையுள் கொண்டு என்னை மாய்த்து விடுதல் இயல்பானது. வாதிட்டு சாதிக்கத் தேவையே இல்லையென்று கேடயங்களை களத்தில் விட்டெறிந்து நகர்ந்து விடுவேன். உங்களை நான் என் எதார்த்தங்களைப் புரிந்து கொள்ளவியலாதக் குழந்தை என நினைத்துக் கொள்கிறேன்.


நிர்கதியானப் பின்னும் எந்தன் நானமிழக்காமல் நெற்றி முத்தமிட்டு விழிமூட அக்கினிப் பிறைகளை இங்கே வரிசையிலமர்த்தி வையுங்கள். நடந்து செல்வதில் நீண்டதை என் வசத்தில் தானமிட்டுக் குறுகியதையெல்லாம் நீங்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள். எந்தன் பரிசாக அதனைக் கொண்டு திருப்தியடைந்து நேர்மைச் சுமையேற்றி விடாதீர்கள். ஏனென்றால், என் பயணத் தனிமைச் சுவடுகளே இதுவரை உடனிருக்கிறது. பயணிகள் ஒவ்வொருவராய் நகர்ந்து செல்லத் துவங்கி விட்டார்கள்.


தெரு நாய்க்கும் பால்சோறு வைக்கும் இரக்க மனங்கள் வளர்க்கும் பறவைக்குக் கூட இரை வைக்காத என்னை இத்தனைச் சாதாரணமானதை ஏன் வக்கிரமாக்குகிறான் என்று வித்தியாசமாகப் பார்ப்பதில் தான் என் சுயமே புதைந்துக் கிடக்கிறது. உங்களின் ஒட்டுமொத்த நல்லவற்றையும் கூட்டி என் ஒற்றைத் தவறிற்கு மாலை சூட்டிவிட்டு ஏளனமாய் சிரிப்பேன்.


நான் அத்தனைக்கும் பிழை!

Monday, July 19, 2021

மரியான் (2013)





மரியான்.


கடல், காதலென்று பிரிக்காமல் இரண்டையும் ஒன்றாய் புகுத்திய படம். எனக்கேயென்று ஆசுவாசமாக உணரக் கூடிய படம். இளைப்பாறுவதற்கும், எத்தனையோ ஜன்னலோர பயணத்திலும் நான் தேடிப் பார்த்த படம்.


பார்வதியை மரியான் படத்தில் காட்டியதை விட அழகாக வேறெதிலும் காட்டி விட முடியாதென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒருத்தியால் இவ்வளவு காதலிக்க முடியுமா என்பதற்கு அவள் கண்களே பதில்.


"நீ இருக்கீல. போதும்..!"


இதெல்லாம் எப்படியான அபரிமித அன்பின் நிமித்தம் என்று யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது. பனி கொண்டாடத் துவங்கிய பின்னே மரியான் பேரழகாகிறான்.


"உன்னால இல்ல. உனக்காக"


எல்லா காதலின் வெளிப்பாடும் தான் ஏதோவொன்றை நிகழ்த்தி விட்டு உன்னால் இல்லை என்பதாக விளக்கவே விளைகிறது. அதில் உனக்காக என்பதை எடுத்துக் கொடுத்ததற்கு காதல்கள் நன்றி சொல்ல வேண்டும்.


"கடல்ரா.. கடல்"


என்னை பிரம்மிக்கச் செய்தவொன்று, எனக்கு பலமாய் இருக்கும் ஒன்று, என் எல்லா நேரத்து துணையாகவும் தேடக் கூடிய ஒன்று, என் தேவையாக எப்போதும் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்று என் கடல்.


"நெத்திலி கொழம்பு வாட, நீரோடி காத்துல வீசுமய்யா!"


யுவன் குரலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் சேர்ந்து ஊர் வீதியில் ஆடித் திரிந்ததை எப்போதும் ஞாபகம் வைத்திருக்க எனக்காக ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்கள்.


ஏனெதற்கு என்று கேள்வி கேப்பாடில்லாமல் என்னால் சகட்டு மேனிக்கு கடலையும், காதலையும் கொண்டாடித் தொலைக்க முடியும். அப்படியே மரியானையும்.


"வானே நீயின்று அந்த நேற்றுகளைக் கொண்டு வா!"

Sunday, July 18, 2021

பித்தெனக்கு

 



உன்னயக் காதலிச்சேன்!

ரொம்ப அநாகரிகமான முறையிலக் காதலிச்சேன். நியாய தர்மம்லாம் எப்பவுமே நா பாத்ததில்ல. பாக்கவும் மாட்டேன். அதுக்கு தனியா ஆயிரம் தடவ மன்னிச்சுக்க இவ்ளோ தூரமா நீ விலகியிருக்கக் கூடாது. ஒரு ரெண்டாயிரத்து முன்னூறு அடி தூரத்துல நீ இருந்துருக்கனும். இதே வெறுப்போட, கோபத்தோட இருக்கனும். என்னய வெறுத்து, வெறுத்தே அடிக்கடி நெனச்சிட்டு இருக்கனும். பொழுதுபோக்கா என்னயத் திட்டித் திட்டி யோசிச்சிட்டே இருக்கனும். இந்த ஆசையெல்லாம் ஒரு பக்கமா இருக்கட்டும்.

ஒன்னுத் தெரிஞ்சிக்கோ. இந்த மனசு இருக்கே. இல்ல பொதுவா வேணாம்.

என்னோட மனசு இருக்கே அது ஒரு பைத்தியம். ஆமா, முத்துற நிலைமைல இருக்குற முக்கால்வாசிப் பைத்தியம். எனக்கு உன் அளவுக்கு தைரியமோ, நேர்மையோ, காதலோ எந்தக் கருமமுமே இருந்ததும் கிடையாது. இருக்காது.

கேடுகெட்ட ஜென்மம்ல!

இப்டியே இருந்துர்லாம்ன்னு முடிவுல இருக்கேன். இதுவும் நல்லா ஜாலியாதான் இருக்கு. நீ என்னயக் கேள்வியே கேட்க மாட்ட. புத்திமதி சொல்லிட்டு நா சொன்னா மட்டும் கேக்கவாப் போறன்னு சொல்லிக் கேக்குறவனையும் கேக்கக் கூடாதுன்னு கடுப்பாக்கி விடுற மனுஷங்கதான நாமெல்லாம். அதான் அட்வைஸ் மட்டுமேபண்ணிட்டு இருக்கோம்.

சொல்ல வந்தத சொல்றேன். தப்புன்னுத் தெரியாம யாருமே தப்புப் பண்றதில்ல. எனக்கும் தெரியும், நெறயா தப்பு என்மேலதான் இருக்கு. திருத்திக்கிறேன். சாரி.

சரி சரி மன்னிக்க வேணாம். திடீர்னு உன் ஞாபகமா இருந்துச்சு. அப்டியே அசந்துத் தூங்கிட்டேன். ரெண்டே கால் மணி இருக்கும். என் கைய நீ வந்துப் புடிக்கிற மாதிரி, இழுக்குற மாதிரி ஒரு நெனப்பு. சுதாரிச்சி முழிச்சிப் பார்த்தா கையில இருந்த வென்ப்ளான்  கட்டில்ல மாட்டி இழுத்துருக்கு.

அப்டியே புடுங்கீருந்தா நேத்து நைட்டே ரத்தமெல்லாம் போய் ஒனக்குன்னு இருந்த ஒரே ஒரு கவிஞனும் மர்கயாதான். அப்ப தோனுச்சு. கண் முன்னாடி நீ நின்னு சிரிக்கிற மாதிரி. கொஞ்சமா அழுகையே வந்துரும் போல இருந்துச்சு. இத்தன நாளா இவ்ளோ தூரத்துல நாம இல்ல. ஆனா, இப்ப இருக்கோம். சூழ்நிலைய ஏத்துக்கனும், அதே நேரம் எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேயும் இருக்க நினைக்கிறது முட்டாள்த்தனம்.

ரொம்ப லென்த்தா பொலம்புறனோ.

ஒரு சின்ன காரணத்துக்குத் தான் இவ்ளோ தடுமாற்றமும். எப்ப யாருக்கு, என்ன நடக்கும், ஏது நடக்கும்ன்னு நம்மால சொல்ல முடியாதுல. அதுனால இந்த சகென்ட் யோசிச்சத, மனசுல பட்டத பட்டுன்னு சொல்லீருரேன். உன்ட்ட பேசனும், மடியில தூங்கனும்ன்னு கவிதையா சொல்லப் புடிக்கல. என் கைக்கு எட்டுற தூரத்துல நீ இருந்திருந்தா இந்த வலியோ, கஷ்டமோ எனக்குப் பெருசாவே இருந்திருக்காது. உன் சிரிப்புல எல்லாமே காணாமப் போயிருந்துருக்கும். நல்லாருந்துருப்பேன்.

சிம்பிளா சொல்லப்போனா. மிஸ் பண்றேன். மிஸ் யூ!

Saturday, July 17, 2021

பிறகான ஆசை



~

பிறகு யோசித்து ஆசை என்று சிலவற்றிற்கு பெயர் வைத்து கொஞ்சி அழைக்கத் துவங்கினேன்.

ஒரு மையிருட்டான நேரத்தில் ஆசீர்வதிக்கும் படி எரியத் துவங்கும் ஓர் சிமிளி விளக்கு.

பேதையொருவனுக்கு அடைமழையில் குடை நீட்டி துணைக் கொடுக்கும் யாரோவொருவரின் கை.

முழுதாய் காற்றடிக்க முழு ஜன்னலையும் விலக்கிக் கொள்ள அனுமதிக்கும் பின்சீட்டுக்காரர்.

மீதமுள்ள காசுக்கு சில்லரை இல்லை என்காமல் புளிப்பு மிட்டாய் கொடுக்கும் மளிகைக் கடைக்காரர்.

ஜன்னல் சீட்டில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்து கைப்பிடித்து பயணிக்கும் கணவன்மார்கள்.

பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து தண்ணீர் தெளித்து, கோலம் போட்டுக் கொடுக்கும் அத்தை.

அம்மாவிற்குத் தெரியாமல் சீடா உருண்டை வாங்கிக் கொடுக்கும் பாட்டி.

மேல்வீட்டில் தனியாய் இருக்கும் பையனுக்கும் சேர்த்து சமைக்கும் கீழ்வீட்டு அக்கா.

தேநீர் குடித்து விட்டு பணம் கொடுக்க விடாமல் தடுத்து தன் கணக்கில் எழுதி விட்டு வரும் நண்பன்.

வஞ்சகம், சூழ்ச்சியில்லாது வன்மத்தையும் நேருக்கு நேர் கோபமாய்க் காட்டி விடும் எதிரி.

தலைவலிக்காரனுக்கு  பத்து ரூபாய் கொடுத்து பனியாரம் வாங்கி வரச் சொல்லும் ஆசிரியர்.

சம்பளத்தைத் தாண்டி இவன் பிறந்தநாளை விரும்பி தன் செலவில் கொண்டாட விரும்பும் முதலாளி.

தான் உழைத்து வாங்கிய வண்டியை தம்பிக்கு பிடித்த வண்ணத்தில் வாங்கும் அண்ணன்.

கணவன், குழந்தைத் துணிகளோடு சேர்த்து மைத்துனனின் துணியையும் துவைத்துப் போடும் அண்ணி.

யாரென்று விசாரிக்கப் போகையில் என் பிள்ளை என்று அறிமுகப் படுத்தும் நண்பனின் அம்மா.

உன் தலையணையில் உன் காதைக் கூசித் தொந்தரவு செய்து கொண்டே தூங்கும் பூனை.

நீயன்றி எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக கடந்து போகக் கூடிய மனம் கொண்ட ஒருத்தி.


வாழ்தலினிது!

நல்லவேளை

 


நல்லவேளை...

நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.


புரிந்திருந்தால் என்னைத் திருத்தி விடலாமென்று நினைத்திருக்க மாட்டீர்கள். நான் திருந்த வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள்.


சர்வ நிச்சயமாக நான் திருந்தவே மாட்டேனென்று முடிவெடுத்திருப்பீர்கள். அவன் ஏன் திருந்த வேண்டும் என்று எனக்காக கேள்வி கேட்டிருப்பீர்கள்.


திருந்தும் அளவுக்கு நான் கசடாகவில்லை என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். திருத்தும் அளவுக்கு நீங்கள் வெளுக்கவில்லை என்றும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.


நான் அயோக்கியன் என்று தெரிந்தும் என் மீதான நம்பிக்கையை வலிமை குறையாமல் வைத்திருக்க முயல மாட்டீர்கள்.


நான் யோக்கியன் என்று தோன்றினாலும் உங்கள் மீதான அபிப்ராயங்களை என்னிடம் கொட்டித் தீர்க்க விரும்பவே மாட்டீர்கள்.


விருப்பு வெறுப்புகளைத் தாண்டி எனக்கென்று தனி ஆசைகள் இருக்குமென்று தெரிந்து கொள்ளாமலே நான் சுயநலவாதியென்று முடி சூட்டியிருக்க மாட்டீர்கள்.


ஏதொவொரு கட்டாயத்தில் இப்போதைக்கு நான் நின்று கொண்டிருக்கும் பாதை நிர்கதியாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இது நல்லவேளைதான்.


ஏனென்றால், நல்லவேளை.

நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்திருந்தால், நீங்களும் காதலித்திருப்பீர்கள்!

பயமறியா

 



~

எனக்குத் தெரிஞ்சி நா தனியா இருக்கும் போது கத்துக்கிட்ட விசயங்கள்தான் எனக்குள்ள ஒரு பாசிட்டிவிட்டிய உருவாக்கிருக்கு. அந்த வகையில நானா விரும்பி ஏத்துக்கிட்ட தனிமை எனக்கு சொர்க்கம் தான். அதுக்கு முன்னாடி வரைக்கும் நா ஒரு நெகட்டிவ்வான ஆளுதான். 


எப்பவும் பொலம்புவேன், பிரச்சனையே இல்லாம அழுவேன், காரணமே இல்லாம கோபப்படுவேன். அக்கா கல்யாணம் முடிஞ்ச நேரமா இருக்கட்டும். கொரோனா லாக்டவுன்ல கடைசி நேரமா இருக்கட்டும். நா தனியா கத்துக்கிட்ட நேரங்கள்ல இது ரெண்டும் ரொம்ப முக்கியமானது.


ஒரு சின்ன சம்பவம் சொல்றேன். ஒருநாள் நைட் ஒரு மணி இருக்கும். தனியா இருக்க ஆரம்பிச்ச ஆரம்ப நேரம். கரெண்ட் இல்ல. போன், பவர் பேங்க், லேப்டாப்ன்னு எதுலயுமே சார்ஜ் இல்ல. வெளியில இடி, மின்னலோட மழை வேற. மெழுவர்த்தியும் முடிய போகுது.


டார்ச் லைட்ட ரொம்ப பயமா இருந்தா யூஸ் பண்ணிக்கலாம்ன்னு பக்கத்துலயே வச்சிருந்தேன். அதுவும் ஆஃப் ஆகிட்டா என்ன பண்றதுன்னு பயம். எந்த பக்கம் திரும்பிப் படுத்தாலும் அந்த மின்னலோட வெளிச்சம் பளீர்ன்னு அடிக்கிது. இடி வேற.


அப்பதான் பைத்தியம் புடிச்சது. வேட்டிய மடிச்சி கட்டிட்டு இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு வீட்டு மாடிக்குப் போய்ட்டேன். சட்டைலாம் இல்ல. நைட் ரெண்டு மணி அப்டியே நின்னுட்டேன். ஆடுறேன், பாடுறேன், அழுறேன், பயத்துல ஒலருரேன். மழையில நல்லா நனைஞ்சிட்டேன். ஆனா, தெளிஞ்சிட்டேன்.


அதுக்கப்றம் எவ்ளோ இடி மழையா இருந்தாலும் சகிச்சிட்டு தூங்கிருவேன். நம்ம வருத்தத்தையோ, சோகத்தையோ, பயத்தை இல்ல எந்தவொரு எதிர்மறையான எண்ணங்களையுமே வெளிக்காட்ட ஆளில்லைன்னா ஒரு அளவுதான் தாங்க முடியும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்.


அதுக்கப்றம் கஷ்டம் பிரச்சனையை எல்லாம் அமைதியாவே கடந்து போக கத்துக்கிட்டேன். நான் தனியா இருந்ததுக்கும், வீட்டோட இருந்ததுக்கும் இடையில உள்ள வித்தியாசத்த ரொம்ப சின்னதா சொல்லீர்லாம்.


அதுக்கு முன்னாடி வரைக்கும் நிறையா அழுதுருக்கேன். கை விட்டு எண்ணுற அளவுக்கு சிரிச்சிருக்கேன். ஆனா, அழ காரணமே இருக்காது. அதுக்கப்றம் நிறைய சிரிச்சிருக்கேன். கை விட்டு எண்ணுற அளவுதான் அழுதுருக்கேன். ஆனா, அழுறதுக்கு நிறையா காரணமிருக்கு.


நாம தேடி போய் கத்துக்கனும்ன்னு அவசியம் இல்லங்க. சூழ்நிலை, மனுஷங்கன்னு நம்மல சுத்தி இருக்குற எல்லாமே கத்துக் குடுக்கும். அவ்வப்போதைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நேர்மறையா, நிதானமா நம்மல நாம கையாலத் தெரிஞ்சிக்கிட்டாலே போதும். எதுவுமே இல்லைன்னாலும் ஜாலியா வாழலாம்.


ராஜா மாதிரி!

பணம் செய்யும் பதினொன்று

 



~

விவரம் தெரிந்ததில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு உழைப்பு கிட்டத்தட்ட பழக்கமான ஒன்று. பணம் என்பது சேமிக்க அல்லது செலவழிக்க. அவ்வளவுதான். அந்த பணத்தைத் தாண்டி வேறில்லை என்பவர்கள் மேல் எனக்கு துளி மரியாதை கூட கிடையாது.


அதற்காக பணத்தின் மேல் பிரியம் இல்லை என்று யாரும் சொல்லி விட முடியாது. கண்டிப்பாக பணம் தேவை. அத்தியாவசியம். ஆனால், இதனைத் தாண்டி அதைக் கொண்டாட வேறெந்த காரணமுமில்லை. நான் நிச்சயமாக பணம் நிம்மதி தராது என்று சொல்ல மாட்டேன். 


பணமும் ஓர் தைரியம். எனக்குத் தெரியும் "Money is Not A Happiness" என்பதெல்லாம் முட்டாள்தனமான வாக்கியம்தான். அதை வைத்து மட்டுமே எல்லாமும் சாத்தியமென்று அதைக் கொண்டாடுவதுதான் கேவலம். பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு அயோக்கியனை உயர்த்திப் பேசவோ, பணம் இல்லை என்பதற்காக தப்பே செய்யாதவனை அடிக்கவோ எனக்கு மனமொப்பாது.


எல்லா நடுத்தர குடும்பத்து இளைஞனுக்கும் ஆசைகள் இருக்கும். வெறுமனே எல்லாவற்றையும் மூடி மறைத்து வாழ்ந்து விட்டு போகிற அளவுக்கு முட்டாளாய் இருக்க அவசியமில்லை. உனக்கென்ன தேவையோ, பிரியமோ அதைக் கொஞ்சமாவது செய். முயற்சித்த மனநிறைவாவது இருக்கும்.


என்னைப் பொருத்தவரை கௌரவம், அந்தஸ்து பார்ப்பது என்பது ஜாதி மத பாகுபாட்டை விட மிகக் கேவலமான விசயம். என்னால் செய்ய முடிவதை யார் உதவியும் இல்லாமல் நீ செய்து விட்டாய் என்றால் மட்டுமே நீ அதில் பெரியவன். அன்றி பணம் அந்த தகுதியை உனக்குத் தந்து விடாது.


எல்லோரிடமும் பணம் வரும். சிலரை பணம் கொண்டாடும். சிலர் பணத்தைக் கொண்டாடுவார்கள். அவரவர் விருப்பம் அது. ஆனால், உங்களின் கஞ்சி போட்ட சட்டைகளின் நடுவே கடந்து போகும் ஓர் அழுக்குச் சட்டையின் உழைப்பை மட்டும் எள்ளி நகையாடாதீர்கள். அது அநியாயம்


கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெறுமனே பணத்தை வைத்து ஒரு மயிரும் புடுங்க முடியாது!

அழாமலிரு

 



~

அழ வைக்கிறது ஈசி.


மனசுக்கு நெருக்கமான அல்லது ரொம்ப குற்றவுணர்வா நினைக்கிற, மறக்க முடியாம தவிக்கிற, மறக்க நினைச்சி நினைச்சி சோர்ந்து போன ஒரு விசயத்த நம்மகிட்ட நேரடியா சொல்லும் போது, "நீ அவன்தான"ன்னு அடையாளப் படுத்தப்படும் போது நம்மள அறியாமலே கலங்கிர்ரோம்.


நா ரொம்ப Harsh Type. அவ்ளோ சீக்கிரம் அழ மாட்டேன். அழக் கூடாதுன்னு நினைப்பேன். யார் அழுதாலும் புடிக்காது. எனக்கும் புடிக்காத, நா திரும்பவும் பாக்கக் கூடாதுன்னு நினைக்கிற எத்தனையோ சூழ்நிலைகளை கடந்து வந்துருக்கேன்.


நிறையா பேர் சொல்லி கேள்விப் பட்ருக்கேன். எங்க அண்ணனே சொல்லீருக்கான். நீ யார சந்தோஷப்படுத்த நினைக்கிறியோ, யார் அழவே கூடாதுன்னு ஆசப்பட்றியோ அவங்கதான் உன்ன கஷ்டப்படுத்துவாங்க.


இது நூறு சதவீத உண்மை. நா என்ன பண்ணேன், ஏன் பண்ணேன் எல்லாமே எனக்கு மட்டுந்தான் தெரியும். நம்ம முழுக்க முழுக்க பொய்ன்னு சொல்றவங்க கிட்ட எப்டி நம்ம புரிய வைக்க முடியும். அப்டி புரிய வச்சி மட்டும் என்ன பிரயோஜனம்ன்னு தோனும்.


யாரையும் வெறுத்துற கூடாது. எல்லாரையும் ஏத்துக்கனும்ன்னு தான் பழகிருக்கேன். ஆனா, போற போக்கப் பாத்தா நிறையா பேர வெறுக்குற நிலைக்கு தள்ளப்பட்ருவேன் போல.


சிம்பிளா சொல்றேன்..!


ஒருத்தன் இருக்கான்னா அவனோட இன்றைய வாழ்க்கைய மட்டும் உங்களால முடிஞ்சா Celebrate பண்ணுங்க. முடியலைன்னா வேணாம். எத்தனையோ நாளைக்கு முன்னாடி அவன் தெரிஞ்சோ, தெரியாமலோ செஞ்ச ஒரு விசயத்த வச்சி யாரையும் Identity பண்ணாதீங்க.


இது எப்டின்னா கிட்டத்தட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைய கடந்து கொஞ்சம் வெளிய வர்ரதுக்காக முயற்சி பண்ணிட்டிருக்குற ஒருத்தன, திரும்பவும் அதே மனநிலைக்குள்ள போய் விட்டுப் போன "Guilty conscious" லயே இருந்து வாழ வழி செய்ற மாதிரி.


வெறும் வார்த்தைன்னு நினைச்சி பேசிட்டு போறது ஒருத்தர எந்தளவு மனசளவுல பாதிக்கும்ன்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் தெரியும். நல்லா பேசுவோம், விவாதிப்போம்ன்னு ஒருத்தரோட மன அழுத்தத்த தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறதுதான் வன்மம்.


பேச்சும், வார்த்தையும் மிகப்பெரிய ஆயுதங்கள். அதால ஒருத்தன வாழ வைக்கவும் முடியும். கல்நெஞ்சக்காரனையும் அழ வைக்கவும் முடியும். முடிஞ்சளவு யாரையும் கலங்க வைக்காம, யார்ட்டயும் வெறுப்ப சம்பாதிக்காம வாழ்ந்துட்டு போய்றனும்.


முடிஞ்சா வாழ வைங்க. முடியலைன்னா வாழ விடுங்க. வழிமறிச்சி குற்றவுணர்வுலயே கிடந்து மக்கிப் போக வச்சிராதீங்க.

சம்பாதிக்க




~
நடுத்தரமான எல்லா மனுஷனுக்குமே முதல் ஆயுதம் மனுஷங்கதான். மிகப்பெரிய பலகீனம் அத்தியாவசிய தேவைக்கு மேல பணம் இல்லங்குறது தான்.

காசு இருக்குறவன் மட்டுந்தான் ஆசையே படனும்ங்குற மனுசங்களுக்கு மத்தியில, விருப்பப்பட்ட ஒரேயொரு ஆசையும் காசில்லங்குறத காரணமா காட்டி கடந்து போறத அனுபவிச்சிருக்கீங்களா. 

ஒரு பொருள வாங்கனும்ன்னு தேடி தேடியே பட்ஜெட்டுக்கு உள்ள அத வாங்க முடியாம கடைசில நம்மலே அத வாங்கவே வேணாம், இத நமக்கு புடிக்கவே இல்லன்னு முடிவெடுக்குறது எவ்ளோ வலிக்கும்ன்னு தெரியுமா. 

விலை அதிகமான ஒரு பொருள காட்டி அத வாங்க ஆசப்பட்றேன்னு சொல்லி அத ஆசப்பட்டதே தப்புங்குற அளவுக்கு உங்கள தண்டிச்சா உங்களுக்கு அதுக்கப்றம் ஆசை வரும்ன்னு நினைக்கிறீங்களா.

நமக்கே பல்லுல பிரச்சனை இருக்கும். ரொம்ப நாள் நெஞ்சு சளியா இருக்கும். அக்காவுக்கோ, அம்மாவுக்கோ எதோவொரு சின்ன ENT பிரச்சனை இருக்கும். 

கொஞ்சம் கொஞ்சம் ட்ரீட்மென்ட் எடுக்குறதுக்கு, அப்பப்ப மாத்திரையா போட்டு சரி பண்ணிட்டு இருக்குறதுக்கு பதிலா மொத்தமா செக்கப் பண்ணி பாத்துர்லாமேன்னு நினைப்போம். 

ஆனா, அதுக்கு மொத்தமா காச செலவு பண்ணி அத்தியாவசியத்துக்கே வழியில்லாம மாட்டிக்கிறதுக்கு, இப்போதைக்கான வாழ்க்கைய மட்டும் பாப்போம்ன்னு வலியையும் கடந்து போயிருக்கீங்களா.

உங்கள சார்ந்த அல்லது உங்களுக்கு நெருக்கமான யாரோவொரு நேர்மையான ஒருத்தர் காசுங்குற ஒரேயொரு விசயம் இல்லாததால செய்யாத தப்புக்கு தண்டிக்கப்பட்றத கண் கூடா பார்த்தும் கேக்க முடியாம இருந்துருக்கீங்களா.

உங்க தரப்பு நியாயமான விவாதம் வெறுமனே பணம் மட்டுமே பலமா இருக்குற ஒருத்தரோட அநியாயமான விவாதத்துக்கு மத்தியில அலட்சியப்படுத்த படுறத அனுபவிச்சிருக்கீங்களா.

காசுதான் இங்க எல்லாத்தையும் நிர்ணயிக்குது. இங்க சாப்பாடுல ஆரம்பிச்சி சாதி வரைக்கும் காசுதான் பேசும். எவ்ளோ ஆண்ட சாதியா இருந்தாலும் காசில்லைன்னா ஐயான்னு கூப்ட மாட்டான்.

நீ இததான் ஆசைப்படனும். நீ இவளதான் விரும்பனும். நீ இந்த வண்டிலதான் பயணிக்கனும். நீ இந்த விலைலதான் சட்டையே போடனும்ன்னு நம்மகிட்ட இருக்குற / இல்லாத காசுதான் நிர்ணயிக்குது.

இத பணத்தாசை, பேராசைங்குற பாணியில புரிஞ்சிக்காம அதோட தேவையையும், உண்மைத் தன்மையையும் புரிஞ்சிக்கிட்டாலே போதும். நீங்க சம்பாதிக்க ஆசைப்படுவீங்க.

கெட்ட கதைகள்

 



~

இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான Bad Story இருக்கும். ஒரு நேரத்துல அத Personal-ஆ உங்ககிட்ட Share பண்ணீருக்கலாம், அழுதுருக்கலாம். 


அது உங்களுக்கு தெரியும். அதுக்காக நீங்க அவங்களுக்கு Close-ன்னு காட்டிக்க அந்த கஷ்டத்தையே திரும்ப திரும்ப சொல்லி காட்டி Advice பண்ணாம இருக்கலாம்.


ஒன்னு கஷ்டத்துல இருந்து மீட்டுக் கொண்டு வர முயற்சி பண்ணுங்க. இல்லைன்னா அந்த கஷ்டத்த சொல்லி காட்டாம இருங்க.


உள்ளச்செழிப்பு

 


~

கைவசம் எதுவுமில்லாம இருக்கும் போது கூட தன்னைத் தானே ராஜாவா மெச்சிக்கிறதுக்கு மனச பக்குவப்படுத்திக்கனும். 


எல்லாமே பூஜ்ஜியத்துல இருந்துதான் ஆரம்பிக்கும். இங்க ஒவ்வொருத்தரோட வாழ்க்கை வடிவமைப்பும் வெவ்வேற மாதிரிதான் இருக்கும். யாரோடையும் ஒப்பிட்டு பாத்துக்க தேவையில்ல.


நாம நமக்கு சரின்னு தோனுறத செய்வோம். எதுவுமில்லாத நிலைலயும் நம்மல நாமலே கொண்டாடிப்போம். நாம மகிழ்ச்சியா இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.


தைரியமா சொல்லனும். எங்கிட்ட எதுமில்லாத நிலைலயும் நிதானத்த இழக்காம எல்லா விசயத்தையும் கையாள முடியும்ன்னு. அதான் சொத்து. 


நம்மலத் தாண்டி உள்ள இருக்குற ஆழ்மனச சந்தோஷமா வச்சிருந்தாலே போதும். சலிக்க சலிக்க வாழ்ந்து தீர்க்கலாம்!

நன்னாள்

 


~

எல்லா சூழ்நிலைய கையாளுறதுக்கும் அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலைல இருந்து மீண்டு வர்ரதுக்கும் கண்டிப்பா வேறு விதமான நம்ம மனச நிதானப்படுத்துற ஏதோவொரு பிடிமானம் தேவைப்படும்.


சிலருக்கு வாழ்றதுக்கான காரணமாவே குழந்தைங்கதான் இருப்பாங்க. சிலருக்கு அவங்களோட கனவு, சிலருக்கு படிப்பு, ஆசைன்னு ஏதோவொரு பிடிமானத்துல தான் நாட்கள் நகர்ந்துட்டிருக்கும்.


வாழ்நாளுக்கான காரணத்துல நம்மலோட கருத்துக்கும், எண்ணத்துக்கும் நேரடியான இடம் கண்டிப்பா தேவைப்படும். அப்படியான இடத்துல நமக்கு புடிச்ச விசயங்கள பொருத்தி அதுக்காக வாழ்ந்து முடிஞ்ச அளவு அத கொண்டாடிட்டு போயிருவோம்.


சொல்லப் போனா வாழ்க்கைல எல்லாமே சில்லுக்கருப்பட்டி படத்துல வர்ர Cornetto ஐஸ்கிரீம் கதைதான். எதாவதொரு நல்ல நாளுக்காக காத்திருந்துதான் இங்க ஒவ்வொரு நாளையுமே கடந்துரோம். அந்த கடைசி உள்ள சாக்லேட் பிட்தான் நம்ம சந்தோஷம். கண்டிப்பா கிடைக்கும்.


எல்லாருக்கும் சந்தோஷத்த குடுக்க ஒருநாள் வரும்...❣️


பூ பூக்கும்

 



~
அத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் ஒரு பூ, பூக்கத்தானே செய்கிறது.

நான் என் தேவையாக இந்த கவிதையை பார்க்கிறேன். இடர்களுக்கு ஆளாகும் போது அதன் மூலமாய் அடைந்த எதோவோர் நன்மையை சேமித்துக் கொள்ள நினைக்கிறேன்.

நான் எப்போதும் சொல்வதைப் போல நேர்மறையை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். என் மகிழ்ச்சி இதுதானென்று நிரந்தரமாயிருக்கவே தேவை இல்லை. உங்களைக் கடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சி இருக்கிறது.

நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்பதற்கு மேலான பெரிய நேர்மறை கண்ணோட்டம் எதுவுமேயில்லை. எனக்கு இதிலும் மகிழ்ச்சி, அதிலும் மகிழ்ச்சி என்று கடந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

மகிழ்ச்சியெல்லாம் தொற்று நோய் போலத்தான். உங்களைத் தாண்டி எல்லா பக்கமும் பரவிக் கொண்டேயிருக்கும். விதைப்பதை சந்தனமாகவே விதைப்போம். வாழ்நாளுக்கும் நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம். அனைவருக்கும் அன்புகள்.



நானென்ற

  


~

கிரிக்கெட் விளையாடுறத விட்டு ரொம்ப நாளாச்சு. கிரிக்கெட் பாக்குறத விட்டு நாளஞ்சி வருஷமாச்சு. புத்தகம், கவிதை பத்தின அறிவோ புரிதலோ கிடையாது. படிச்சதும் கிடையாது.


கவிதை பத்தி பேசுறத கேப்பேன். அதுவும் எப்பவாச்சும் தான். சினிமா எதோ ஓரளவுக்கு புரியும். உலக சினிமா பத்திலாம் ஒன்னுமே தெரியாது. தமிழ் சினிமா பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும், புடிக்கும்.


Sports, Art, Dance, Speech இப்டி எந்தவொரு Competition-லயும் School-ல அவ்வளவா கலந்துக்கிட்டதில்ல. College-ல அதுக்கு வாய்ப்பே இல்லாம போய்ருச்சு. அதுக்கான நேரமோ, ஊக்குவிப்போ இல்ல. அப்டியே எதுலயும் Interest இல்லாமலே போய்டுச்சு.


வேலைதான் பாப்பேன். ஆனா, எந்த வேலையா இருந்தாலும் பாப்பேன். அவ்ளோதான். சித்தாள், காடு கொத்துறதுல ஆரம்பிச்சி Electrician, Plumber, Driver-ன்னு நிறையா Part time வேலை பாத்துருக்கேன். 


நம்மல நம்மலே Dominate பண்ணிக்க கூடாதுன்னு மட்டும் எப்பவுமே நெனப்பேன். எல்லாருக்கும் அவங்க அவங்க வாழ்க்கைய பொறுத்துதான் Interest வரும். சிம்பிளா சொல்றேன். இங்க திறமை இல்லாதவங்க யாருமே இல்ல.


நான் நான்தான். என்னைய யார் கூடயும் நான் Compare பண்ணிக்க போறதில்ல. எந்த சூழ்நிலைலயும் நம்பிக்கையையும், தைரியத்தையும் விட மாட்டேன். அவ்ளோதாங்க. ஜாலியா இருப்போம்!




Friday, July 16, 2021

கேடி என்கிற கருப்புதுரை (2019)


~
உடல்நலமில்லாமல் ஆறு மாதம் படுக்கையிலேயே கிடக்கும் தந்தையை கூட்டாக சேர்ந்து ஊர் வழக்கப்படி இரக்கக் கொலை செய்ய திட்டமிடப்படுகிறது. மரணத்தை கொண்டாடும் திருவிழா அது.

முடிவெடுத்துக் கொண்டு இருக்கும் போதே இயல்பு நிலைக்கு திரும்பி எழுந்து போய் விடுகின்றவர் அதற்கு பின்னர் அவருக்காக வாழ்வதும், அவர் மகன்கள் சொத்துக்காக தேடுவததென்றும் கதை நகர்த்தப்படுகிறது.


கருப்புதுரைக்கு கே.டி என்று சுருக்கமாக பெயர் வைக்கிறான் பிறந்ததிலிருந்து கோவிலில் வளரும் குட்டி. குட்டியின் குறும்பும், பேச்சும் பிடித்துப் போன கருப்புதுரை கோவிலில் இருந்து தன்மானத்திற்காக கோபத்தில் வெளியே வந்த குட்டியுடன் வாழ்க்கையை நகர்த்துகிறான்.


பிடித்த வேலை, பிடித்த இடத்தில் வீடு, இரண்டு பேருக்கு மட்டுமேயான வாழ்க்கை என்று நகர்கிறது. ஒரு வளர்ந்த குழந்தை, சிறிய கிழவன் என்ற சாயலில் நகர்கிறது. தாத்தாவின் பிடித்த ஆசைகளை நிறைவேற்றும் குட்டி. குட்டியை எதிலும் விட்டுக் கொடுக்காத கருப்புதுரை.


முக்கியமாக பிரியாணி. கருப்புதுரை பிரியாணி சாப்பிடுவதை ரசிக்கவே பிரியாணி சாப்பிட வருவோர். பிரியாணியின் மீது கருப்புதுரைக்கு இருந்த ஈர்ப்பு, பேராசை என்பதெல்லாம் அவ்வளவு அழகு. பிரியாணி பிரியர்களுக்கு நிறைய பிடித்த காட்சிகள் தேறும்.


கதாநாயகன், கதாநாயகி என்றில்லாமல் சின்னச் சின்ன ரசிக்கக் கூடிய காட்சிகள், கதைக்களத்திற்காக பார்த்த சமீபத்திய படங்களில் மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நல்ல மனநிலைக்கு கொண்டு வந்து விட்டு விடும் படம். பிடித்திருக்கிறது.

சர்வம் தாளமயம் (2018)



ஜீ.வி.பிரகாஷ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்த படி இது அவருக்கான ஒரு கனவுப்படம்தான். இசைக்கான குறிப்பாக மிருதங்கத்திற்கான படம். இசை என்ற பொதுவான விசயத்தில் உள்ள பிரிவினையை காட்டும் படம்.


ஒரு காட்சியில் கேரட் வெட்டுவதில் இருந்து ஆதி தாளம் எட்டெட்டு சீராக கொண்டு வருகிறார் என்று சொல்லும் போது இசை ஊறிப் போன ஒரு உயிராக ஜீ.வி தெரிய ஆரம்பிப்பார். இந்த இடத்தில் இவரை விட ஒரு பொருத்தமான நாயகன் இந்த படத்திற்கில்லை.


தன் இசையின் விடியலுக்கான காலத்திற்காக காத்திருக்கும் கூட்டத்திலிருந்து வெளிவந்த ஒருவன் தன் குருவையும் ஏமாற்றாமல் தனக்குப் பிடித்ததை அடி ஆழம் வரை சென்று உள்ளுணர்ந்து படித்து வெற்றி பெறுவதே கதையின் சாராம்சம்.


பிளாஸ்டிக் டம்ளரில் டீ தருவதற்கும், கண்ணாடி டம்ளரில் டீ தருவதற்கும் இடையிலான சாதிய பிரிவினை இந்த நவீனத்துவ காலத்திலும் உள்ளது. இறந்த தோலில் அன்பு செலுத்தி இசையைக் கொண்டு வரும் இனத்திடம் அறம் காட்ட ஆளில்லை.


பறைக்கும், மிருதங்கத்திற்கும் இடையிலான உழைப்பாளிகளுக்கும் அதை உருவாக்கி விற்பவர்களின் நிகழ்கால ஏழ்மை நிலையையும் கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் இன்னமும் அதை செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பார்த்திருக்கும்.


மிருதங்க தாளத்தின் மேல் கொண்ட அபரிமிதமான காதலின் வெளிப்பாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் மொத்த இசைக்கானது. குறிப்பாக எளிமையாய் இருந்து செல்வம் கொட்டும் கர்நாடக சங்கீதத்தில் இருந்து தடாலடியாய் இருந்து ஒடுக்கப்பட்டிருக்கும் பறை வரை சமமான இசைதானென பேசியிருப்பதில் சர்வமும் தாள மயமாகிறது.

Premam (2015)





தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மலையாள சினிமாவ பாக்கனும்ன்னு ஆர்வம் வர முக்கிய காரணம் ப்ரேமம்ன்னு சொல்லலாம். நான் முதல் முதலா பாத்த மலையாள படமும் கூட. மலையாள சினிமால சின்னச் சின்ன அழகியல் இருக்கும்.


குறிப்பா ப்ரேமம் படத்துல மேரி வர்ர சீன்கள்ல காட்டப்பட்ற டப்பால இருக்குற தின்பண்டம், சர்பத். மலர் டீச்சர் வர்ர சீன்கள்ல காட்டப்படுற பட்டாம்பூச்சி, மழை. செலின் வர்ர சீன்கள்ல காட்டப்பட்ற கேக், பேக்கரி ஸ்வீட்ஸ். இதெல்லாம் எதோவொரு பாசிட்டிவிட்டி. மனச ரிலாக்ஸா வக்கிறதுன்னு தோனும். 


மூன்று வகையான காதல் படிநிலைகள். மூன்றிலும் தொடரும் நட்பு வட்டம். நெறயா சீன்ல அழுதுருவோம். எல்லா பாட்டுமே ஒர்த்தா இருக்கும். இத்தன மலையாள படம் பாத்தாலும் அந்த ப்ரேமம் படத்தோட ஒரு இடத்த இதுவரைக்கும் எந்த படமும் பிடிக்கல.


ஒரு காதல் கடந்து போகும். இன்னொன்னு தேங்கி நிற்கும். இன்னொன்னு எல்லாத்தையும் விட்டு ஒன்னு சேரும். காதல் ஒவ்வொரு காலகட்டத்துல கடந்து போய்ட்டேதான் இருக்கும். அது ஒரு மனச சந்தோஷமா வச்சிருக்குற ஒரு விசயம்.


மேரி, மலர், செலின் மூனும் எந்தளவு படத்துக்கு தேவையோ அதே அளவுக்கு கோயா, ஷம்பு தேவை. என்னய கேட்டா டைரக்டர் அல்போன்ஸ் புத்ரன் தமிழ் மக்களுக்கு மலையாள சினிமாவ அறிமுகப்படுத்துனவர்ன்னு சொல்லலாம். காதல் எல்லா நிலையிலும் கொண்டாடப்படும். மலையாளத்தில் ப்ரேமமாக.

யுவன் சங்கர் ராஜா



கொஞ்ச நாளாவே அதிகமா பயன்படுத்துற வார்த்தை இதுதான். சின்ன வயசுல இருந்து ரஹ்மான், இளையராஜான்னு இருந்துட்டு மூணாவது நாளாவது இடத்துல கூட யுவன் பேர சொன்னதில்ல. யுவன முதல்முறையா நேர்ல பாத்தப்ப கூட ரொம்பலாம் ஆச்சரியப்படல. ஜஸ்ட் ஒரு செலிப்ரட்டி. இளையராஜாவோட பையன் அவ்ளோதான்னு நெனச்சிட்டிருந்தேன்.


சமீபமா ஒரு வருஷத்துக்குள்ள மனசுக்கு நெருக்கமான ஒரு பேரா "யுவன்"ங்குற பேரு மாறிருச்சு. இசைங்குற ஒரு விசயம் நம்மல எந்தளவு தெளிவாக்கும், ரசிக்க வைக்கும், வலிய மறந்து தூங்க வைக்கும், அடுத்த கட்டத்த நோக்கி நகர வைக்கும்ன்னு தெரிஞ்சிக்கிட்டது யுவன் இசை, யுவன் குரல் மூலமாதான். 


போன்ல Spotify, Wynk, South radios ன்னு எல்லா ஆன்லைன் ப்ளே ஆப்ஸ்லயும் ரீசன்ட்ல இருக்குறது தலைவன்தான். எல்லா நிலைமைலயும் எனக்கான ஒரு நண்பனா நின்னது யுவனோட இசைதான். யுவன் இசைக்குன்னு தனி பட்டாளமே இருக்குன்னா காரணமும் அதுதான். அது எல்லா சூழ்நிலைக்குமானதா இருக்கும்.


"இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும். நீ மட்டுந்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்" இந்தப் பாட்டு மூலமா பல இருட்டான தனிமையையும் கடக்க வச்சது யுவன்தான். யுவனோட இசைதான்..!!


கொஞ்ச நாள் போகப் போகதான் தெரிஞ்சது நா தேடித் தேடி கேக்குற நிறைய பாட்டு யுவனோடது. கற்றது தமிழ், பருத்தி வீரன், புதுப்பேட்டைலாம் ஒவ்வொரு தடவையும் ஆச்சரியக் குறில நிக்க வைக்கிற ஆல்பம்ஸ். ஒவ்வொரு பாட்டும், பேக்ரவுண்ட் ஸ்கோரும் நம்ம மனசோட அவ்ளோ உயிர்ப்பா சேர்ந்திருக்கும்.


"செவ்விளநீ சின்னத்தாயி, உன்ன சிறையடைக்க போறேன் வாடி"ன்னு ஒரு பக்கம் ரசிச்சி தூங்கிட்டு காலைல எந்திரிச்சி "கத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்கிளி, உன்ன கோட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி"ன்னு குத்தாட்டம் போடலாம். யுவன் ஒரு கொண்டாட்டக்காரன்னு போன வருஷம் யாரோ சொன்னதுதான் நியாபகம் வருது.


வலியோட, கஷ்டத்தோட இருந்த நிறைய இரவுல உடைஞ்சி அழ வைக்கவோ, அழுது முடிச்சி நிம்மதியா தூங்க வைக்கவோ யுவனோட இசை கை கொடுத்துச்சு. அப்பா பேர்ல சம்பாரிச்சிட்டாரு, இளையராஜா ட்யூன்ல காபியடிச்சி போட்றாருன்னு வன்மத்த கொட்றத நிறுத்துங்க. வெறும் காபியடிக்கிற ஒருத்தனால இவ்ளோ ரசிகர்கள சம்பாதிக்க முடியாது.


சிம்பு, விஷால் தொடங்கி நிறைய பேர மாஸ்ஸா பாக்க வச்சது யுவனோடு BGM தான். திமிரு, மங்காத்தா, பில்லான்னு யுவனோட BGM பேச படமெல்லாம் குவிஞ்சி கெடக்கு. 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினிலாம் இன்னமும் நிறைய பேர கிறக்கி வச்சிருக்குற ஆல்பம்ஸ். இப்டியே படம் பேர் சொல்லி பேசிக்கிட்டே போனா யுவன கொண்டாட யுகமே தேவைப்படும்.


இப்பவும் யுவன் இசையிலான படம்ன்னா அதுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கு. இன்னும் நிறைய நிறைய ஜெயிச்சிட்டேதான் இருப்பாரு. ஏன்னா அதான் தலைவன். எதோவொரு பேட்டியில தனுஷ் சொல்வாரு "தமிழ் சினிமா இசைல அந்த பக்கம் உள்ள பேர் மாறிக்கிட்டே இருக்கும், இந்த பக்கம் யுவன் பேர் அப்டியேதான் இருக்கும்"


தலை(யு)வன் தான்!

வெற்றிமாறன்

 



ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அந்த கதை பயணிக்கக் கூடிய மக்கள் மத்தியில் கொஞ்ச நாள் தங்கியிருந்து அந்த இடத்த பற்றி, மக்களோட பழக்கவழக்கம் பற்றி, பேச்சுவழக்கு பற்றி தெளிவா தெரிஞ்சிட்டு அதுக்கு பின்னாடிதான் ஷூட்டிங் ஆரம்பிப்போம்ன்னு ஒரு வெற்றிமாறன் ஒரு பேட்டியில சொல்லுவாரு.


இப்ப வரைக்கும் வடசென்னை நகராம இடம் பிடிச்சிருக்குன்னா காரணம் அந்த இடத்தோட மக்களோட பேச்சுவழக்க அப்டியே பிரதிபலிச்சி காட்டிருக்குறதுதான். ஒவ்வொரு கதையிலிருந்தும், ஒவ்வொரு காட்சியில இருந்தும் தனித்துவமா கத்துக்க நிறைய குடுக்க கூடிய ஒரு இயக்குனர் வெற்றிமாறன்.


இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் தாராளமா ஓடும். எல்லாருக்கும் முன்னோடியா இருக்குற அளவுக்கு திறமை இருக்கக் கூடிய மனுஷன். அவரோட ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடக் கூடிய எத்தனையோ ரசிகர்கள்ல நானும் ஒருத்தன்னு பெருமையா சொல்லுவேன்.


வெற்றி!

சினிமா காதல்

 



~

மூணு மணி நேரம், நாளு மணி நேரம் அப்டி என்னடா பேசுவீங்கன்னு கேப்பாங்க. சினிமா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விசயம் புடிக்கும். எனக்கு தனிப்பட்ட வகையில் சினிமான்னா ரொம்ப விருப்பம். எனக்கு ரொம்ப நெருக்கமான நிறைய பேர் சினிமா விரும்பிகள்தான்.


ஹீரோக்காக மட்டுமே படத்துக்கு போயிட்டிருந்த காலம் மாறிப் போய் டீசர்ல வந்த வித்தியாசமான ஒரேயொரு சீன், ஒரேயொரு துணை நடிகர்ன்னு நிறைய சின்ன காரணத்துக்காகலாம்  படத்த பாத்துருக்கேன்.


ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். ஒரு புத்தகத்த படிச்சி முடிச்ச மாதிரி. அதுல இருந்து மீண்டு வர்ரதுக்கான கால இடைவெளிதான் அது நமக்குள்ள ஏற்படுத்தி இருக்குற தாக்கத்தோட அளவு.


ஒருசில படங்கள சந்தோஷமா இருக்கனும்ன்னு நினைக்கும் போது பாப்போம். ஒருசில படங்கள ஃபீல் பண்ணனும்ன்னே பாப்போம். அந்தந்த படம் அந்தந்த உள்ளுணர்வ தூண்டும் போது 


"Movies makes my smile and cry".


ஒரு அப்பா தன் பிள்ளைட்ட சொல்லி புரிய வக்கிறத, ஒரு ஆசிரியர் ஒரு மாணவன்கிட்ட சொல்லி புரிய வக்கிறத, ஒரு முனிவர் தன் சீடர்கள்ட்ட சொல்லி புரிய வக்கிறத ஒரு சினிமா புரிய வைக்கும். கற்றுத் தரும். சினிமா ஒரு பாடம். அது ஒரு வாழ்க்கை.


#Movies_are_part_of_my_Life...♥

கர்ணன் (2021)

 


~

இன்னக்கி வரைக்கும் நடந்துட்டிருக்குற ஒடுக்குமுறையும், ஆணவக் கொலைகளுக்கும் மத்தியில இதெல்லாம் நடக்குதா இல்லையான்னு கூட தெரியாம இருக்குற சாமானிய மக்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சனைகள வெளிக் கொண்டு வந்து சொல்லனும். கர்ணன் ஜெயிச்சிட்டான்.


கர்ணன் - ஊர்


"உன் கோபத்துலதான்யா இந்த ஊரே முழிச்சிருக்கு"


பிரச்சனைகள தாண்டி அத்தியாவசிய உரிமைகளும் பறிக்கப்படும் போதுதான் மொத்த கோபமும் ஒருத்தனுக்கு முழுமையா வெளிப்படும். கர்ணன் ஒரு ஒடுக்கப்பட்ட அத்தியாவசிய உரிமைகள் கிடைக்கப்பெறாத ஊரோட மீட்பாளி.


சாதி - உரிமை - கோபம்


"அவனுவ நாம பஸ்ஸ ஒடச்சதுக்காக அடிக்கல. நாம நிமிந்து பாத்துட்டோம்ன்னு அடிச்சாய்ங்க"


இந்த மாதிரியான கொடுமைகள கடந்துதான் பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்துருக்காங்க, வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு மாரி செல்வராஜ் காட்டீருக்காரு. இதெல்லாம் நிஜமாவே நடக்குமான்னு கேட்டா நடந்துருக்கு. நடந்துட்டும் இருக்கு.


ஒடுக்கப்படும் எல்லா சமூகத்தினருக்கும் இந்த கர்ணனோட கோபம் ஒரு கட்டாயமாகிப் போயிருது. அந்த கோபத்தோட வெளிப்பாடுலதான் அந்த ஊரே வெளிய தெரிய வருது. அந்த ஊரோட பிரச்சனை, மக்கள்ன்னு எல்லாமே.


பரியேறும் பெருமாள்ல வர்ர மாதிரி கேள்வி கேக்குற பரியன் உருவாக தொடக்கப் புள்ளியாவே, தைரியமா அதுக்கு முன்னாடி நடந்த கொடுமைகள அடிச்சிக் கேட்ட கர்ணன்தான் இருப்பான்.


"உங்களுக்கு எங்க பிரச்சனை என்ன, தேவை என்னங்குறது முக்கியமில்ல. உங்க முன்னாடி எப்புடி நிக்கனும்ங்குறது தான் முக்கியம்"


துரியோதனன் - அபிமன்யு


பேர வச்சி சாதிய கண்டுபிடிக்க முடியும்ன்னே இங்க பல பேருக்கு தெரியாது. இதுல இன்னமும் ஏன் மாடசாமி, முனியசாமின்னு பேர் வக்கிறன்னு கேள்வி. ஏன்னா பேர்லதான முதல் அடியே. மொதல்ல அத மாத்தனும்.


"மாடசாமி மவன் பேரு துரியோதனன்னு இருந்தா ஒனக்கு என்னலே பண்ணுது"


கர்ணன் - திரௌபதி 


கர்ணனோட காதல்ல பெரிய குசும்புகளையும், பரிசுகளையும் பாக்க முடியாது. கர்ணனுக்கு கோபம் வரும். காதலிக்கத் தெரியாது. அவனுக்கு கட்டிப் பிடிக்கத் தெரியும், முத்தம் குடுக்கத் தெரியும். இதுவும் ஒரு எதார்த்தம்தான. திரௌபதி அலட்டிக் கொள்ளாத பேரழகி.


கர்ணன் - போலீஸ்


அந்த போலீஸ் கேரக்டர்ல "நட்டி"ய பாக்குறப்ப நமக்கே கோபம் வரும். அந்த மாதிரியான முகம். உயிர் போயிரும்ங்குற கடைசி நிமிஷத்துல கூட திமிர் குறையாம ஊரக் கூட்டி கால்ல விழுன்னு சொல்றதெல்லாம் எவ்வளவு வெறி அவங்களுக்குள்ள இருக்குன்னு காட்டீருப்பாரு. 


கர்ணன் - மாரி செல்வராஜ்


இந்த மாதிரியான பிரச்சனையான, பல்வேறு சர்ச்சைக்குரிய கதைக்களத்த நிகழ்கால மக்களுக்கு புரியிற வகையில மூணு மணி நேர திரைப்படத்துல சொல்ல முயற்சி செய்றதுக்கே மாரி செல்வராஜ் அண்ணன கொண்டாடலாம்.


வெறும் சினிமா, பொழுதுபோக்குங்குறத தாண்டி திரைப்படம்ங்குறது மிகப்பெரிய ஆயுதம். மிஷ்கின் சொன்ன மாதிரி கருத்தில்லாம கதையே எழுத முடியாது. ஒரு திரைப்படம்ன்னு எடுத்தா எதாவது ஒரேயொரு கருத்தாவது இருக்கும், இருக்கனும்.


ஒரு முக்கியமான பேச வேண்டிய கருத்தையே கதைக்களமா வச்சி அஅதன் மூலமா சாதிய வன்முறையையும், கொடுமையையும் அதனால பாதிக்கப்படுற மக்களுடைய வெளிப்பாட்டையும் காட்டுறாரு மாரி செல்வராஜ்.


மாரி செல்வராஜோ, இல்ல அவர் காட்டுன பரியனோ, கர்ணனோ, இவங்களோட கோபமோ எல்லாத்துக்கும் ஒரே காரணம் ஒடுக்குமுறைதான். அது தெளிவாகனும்ன்னா ஒவ்வொருத்தரும் மாறனும். கர்ணனோட கோபம் காலத்தின் கட்டாயம்.


கர்ணன் - நான்


ஏன் இவ்ளோ கோபம். பரியனோட அகிம்சைய கர்ணன்கிட்ட காணலயேன்னு கேள்வி கேட்டா அந்த கேள்வியே தேவையில்லாதது. பரியன் படித்துக் கேட்பவன். கர்ணன் அடித்துக் கேட்பவன். எல்லா ஊர்லயும் பரியனும் இருக்கனும். கர்ணனும் இருக்கனும். அதான் ஊர்.


கேள்வி கேட்டாதான் மாறும்ன்னா கேள்வி கேக்குற கட்டாயத்துக்கு தள்ளப்பட்றோம். திருப்பி அடிச்சாதான் மாறும்ன்னா அடிக்கிற அளவுக்கு வலிக்கு உள்ளாக்கப் படுறோம். கோபத்துக்கு தள்ளப்படுறோம்.


ஒருத்தன் அடிச்சிட்டே இருக்குறான்னா எப்பவுமே நம்மலே சமாதானப்படுத்திட்டு இருக்க முடியுமா, முடியாதுல. ஒரு நேரம் இல்லைன்னா ஒரு நேரம் எல்லாருமே திரும்பிக் கோபப்படுவோம். திட்றவன திருப்பிக் கேப்போம், அடிக்கிற கைய உடைக்கப் போவோம்.


எல்லா சூழ்நிலையிலயுமே நா ஒருத்தன் மட்டும் புத்தராவோ, கர்த்தராவோ வாழ்ந்துட்டு செத்துப் போயிற முடியாது. இனிமே நீ அடிச்சா நா திருப்பி அடிப்பேன். வேணும்ன்னா நீ சமாதானப்படுத்து. என் பொறுமை எல்லாம் எல்லைக்கோட்ட தாண்டி ரொம்ப நாளாச்சு!


"நாங்க நிமிர்ந்து பாத்துட்டோம். இன்னொருவாட்டி குணிய முடியாது"


கர்ண மகாராஜா!

நா.முத்துக்குமார் பிறந்தநாள்




 ~

நா.முத்துக்குமார் பிறந்தநாள்..❤


பாடல்களைப் பற்றி Clubhouse-ல் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது வாழ்நாளுக்கும் ஒரேயொரு பாடல் அல்லது வரியென்றை தேர்ந்தெடுத்து சொல்லச் சொன்னார்கள்.


அந்த குழுவில் இருந்த அதிகபட்சமானவர்கள் சொன்ன வரி அல்லது பாடல் நா.முத்துக்குமாரின் ஒரேயொரு பாடல்.

"எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும். அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்".


இசையாகவே காதலை ஒப்பிட்டுக் கொண்டாடியன் நா.மு. 

"நீ கைகால் முளைத்த மத்தளமா, உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா. நீ ஹார்மோனிய கட்டையம்மா, என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா"


எது அழகென்றெல்லாம் அவர் விவரிக்கவில்லை. தான் அறிந்த எல்லாமே அழகானதென்று கொண்டாடியவர். 

"நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு, உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு".


என்ன செய்து விடும் எதார்த்தமாய் நிகழ்ந்த காதல் என்பதற்கு சட்டைப் பையிலேயே பதிலை வைத்திருப்பார் போல. 

"பார்த்து பழகிய நான்கு தினங்களில், நடைஉடை பாவனை மாற்றி விட்டாள்".


காதலியென்றதை கடந்து தோழியென்று அவளை அடையாளப்படுத்திக் காதலித்தவன். 

"தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே"

"தோளில் சாயும் போது தோழி நீயடி, மடியில் சாயும் போது தாயும் நீயடி"


அவனைக் கொண்டாடித் தீர்க்குமளவுக்கு இவ்வுலகிலேயே காதலில்லை. அவ்வளவு காதலைக் கொண்டவன்.

"மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி.

முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு நிலைத்த முகவரி நீயடி"


எளிமையாக ஏழைக்காதலை புரிய வைத்து, காதல் செய்யவும் வைத்த கவிஞன்.

"முதன்முறை வாழ பிடிக்குதே, முதன்முறை வெளிச்சம் பிறக்குதே. முதன்முறை உதிர்ந்த கிளையொன்று பூக்குதே".


அவனோர் பேரன்பு கொண்ட தந்தை. குழந்தையை பாவிக்கும் அவன் செய்கையில் கடவுளுக்கும் பொறாமைதான். 

"அடி கோயில் எதற்கு, தெய்வங்கள் எதற்கு. உனது புன்னகை போதுமடி".


உயிரோட்டமான விசயங்களை சின்னஞ்சிறிய வாக்கிய வடிவமைப்பில் தருபவர் நா.மு. 

"வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்". அங்கே வழிப்போக்கனுக்கு தெரியும் அந்த வரியின் அழுத்தம்.


என் ஊர் நியாபகத்தை  தூண்டிவிடும் சாயலில் ஒரேயொரு நா.முத்துக்குமார் பாடலென்று அடையாளம் காட்டச் சொன்னால்,

"எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்.

அப்ப நாங்க மின்னனுல போட்டோ புடிப்போம்"


நான் எப்போதும் என்னிடம் சொல்லிக் கொள்ள நா.முத்துக்குமாரின் ஒரு வரியை கையில் வைத்திருப்பேன்.

"இன்பம் ஒருபுறமென்று, துன்பம் ஒருபுறமென்று சுற்றிச் சுழலுது இந்த மண்மேலே.

தன்னந்தனி ஆளென்று யாரும் இங்கில்லையென்று உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே"


ராம் சொல்வதைப் போல "ஒரு கோப்பை தேநீர் அருந்தும் அவகாசத்தில் ஒரு ஆயுள் கால நட்பை உருவாக்கக் கூடியவன்" தான் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமாரை பாடலாசியர் என்று எடுத்துரைக்காதீர்கள். 


அவர் இந்த சகாப்தத்தின் பிரம்மாண்டமில்லாத கவிஞர்...♥

வைரமுத்து பிறந்தநாள்


 ~

"உடலுக்குள் இருக்கும் உயிர் சுமையா. அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ" என்று ஏக்கங்களின் உச்சத்தில் வாழக் கூடியவன். பெண்பித்தன் என்றாலும் பேனாவிலும் அவன் பித்தன்தான்.


"தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருக்கே தாயாகும் பெண்ணே" என்னும் போது பெண்ணையும், பெண்மையின் வாழ்வியல் பயணத்தையும் எப்படியெல்லாம் அழகியல் கூட்டிக் கொண்டாட முடியுமென்று இந்த கலைஞனுக்கு தெரிந்திருக்கிறது என்றுதான் சொல்ல தோன்றும்.


கலைஞனென்று குறிப்பிடுவதுதான் சரி. எதையும் உருவாக்குபவன், அழகூட்டுபவன், மிகைப்படுத்தி கொண்டாடுபவன் நிச்சயம் கலைஞன்தான். "பூவின் மொழி நிறமா, மணமா" "கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழைத்துளி" என்று கேள்வி கேட்பதும் கூட அதில்தான் சேரும்.


"வானத்தில் ஏறி மின்னலை பிடிப்பவன். பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்" என்று சொல்லி விட்டு "இந்த பூமியே பூவனம், உங்கள் பூக்களைத் தேடுங்கள்" என்று பூக்களையே காதலின் பிரதானமாய் காதலர்களுக்கு பழக்கப்படுத்தியவன்.


கண்ணாளனே பாடலின் "கண்ணாளனே" வார்த்தை பற்றி ஒரு மேடையில் வைரமுத்து விவரித்துக் கொண்டிருப்பார். அந்த காணொளியின் கடைசியில் வார்த்தைக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியை அவர் "ஏப்ரல் மாதத்து செம்பரம்பாக்கமாக எங்களின் முந்தைய கோபமெல்லாம் ஆவியாகி விட்டது" என்று குறிப்பிடுவார். 


ஒரு கலைஞனுக்கு ஒரேயொரு வார்த்தை கிடைக்க சில நாட்களும் ஆகலாம். ஒரு கவிதையே கூறி விட ஒரு நொடியும் போதுமாயிருக்கும். எப்படியென்றாலும் சரி. கலைனின் படைப்பென்பது எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும். வைரமுத்து வைரம்தான்..!


#HBD_Vairamuthu...♥✨

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...